[கேள்வி-பதில்] : இரண்டாம் திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி வேண்டுமா ?

கேள்வி : ஒரு முஸ்லிம் முதல் மனைவி இருக்கும் நிலையில், இரண்டாவது திருமணம் செய்ய விரும்பினால் அதற்கு முதல் மனைவியிடம் அனுமதி கேட்க வேண்டுமா? இதைப்பற்றிய மார்க்க விளக்கம் என்ன?

பதில் : குர்ஆன் – சுன்னாஅடிப்படையில் ஒருவர் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள மனைவியிடமோ, பெற்றோரிடமோ, அனுமதி கேட்க வேண்டும் என்ற எவ்வித ஆதாரமும் இல்லை. நபிகளாரின் காலத்திலோ, அவரது தோழர்களின் காலத்திலோ, அதைத் தொடர்ந்தவர்கள் காலத்திலோ இதுபோன்ற நடைமுறை வழக்கம் இருந்ததாக வரலாற்றில் காணக் கிடைக்கவும் இல்லை.

இதுபோன்ற சிந்தனைப்போக்கு தற்காலத்தில் தோன்றிய ஒன்றாகும். ஒரு ஆண், இஸ்லாமிய மார்க்கம் அனுமதித்த முறையில் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள பெற்றோரின் அனுமதியே தேவையில்லை என்ற நிலை மார்க்கத்தில் இருக்கும்போது, முதல் மனைவியின் அனுமதி என்பது எதார்த்த சிந்தனைக்கே முரணான ஒன்றாகும். எனவே இரண்டாம் திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி தேவையில்லை என்பதே மார்க்கத்தின் வழிமுறையாகும்.

இருப்பினும் குடும்ப வாழ்க்கை என்பது கணவன்-மனைவி-குழந்தைகள்,  இப்படி ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வதால் மட்டுமே சிறப்பானதாக அமையும். அன்றாட அத்தியாவசிய‌ தேவைகளுக்காக சிறிது நேரம் வீட்டைப் பிரிந்து வெளியே செல்லும் கணவன், தன் மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் செல்கிறான். இப்படி இருக்கும் நிலையில், தனது இரண்டாவது திருமணத்தை முதல் மனைவிக்கு தெரியாமல் ( நிர்பந்தமோ, தகுந்த காரணமோ இன்றி) செய்வது அவரது குடும்பத்தில் அவருக்கும் மனைவி-குழந்தைக்கும் இடையில் இணக்கமான புரிந்துணர்வை பாதிப்பதோடு. நிம்மதியான வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகிவிடும்.

எனவே, இரண்டாம் திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி தேவையில்லை எனும் மார்க்க விளக்கத்தை ஏற்றுக்கொள்கிற அதே நேரத்தில் முதல் மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை, அவர்கள்மீது நமக்குள்ள கடமைகள், உரிமைகள் ஆகியவற்றையும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

(அல்லாஹ் மிகவும் அறிந்தவன்)