Home / கட்டுரை / ஈமானிய அம்சங்கள் (உரைநடை)

ஈமானிய அம்சங்கள் (உரைநடை)

ஈமான் எனும் பதம், மொழி ரீதியாக நம்பிக்கை எனும் கருத்தைக் கொண்டுள்ளது. ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் அதன் கருத்து, நாவினால் விசுவாசப் பிரமாணத்தை மொழிந்து, உள்ளத்தால் பூரணமாக நம்பி, புலன் உறுப்புக்களால் அதன்படி செயற்படுவதாகும்.
இறை விசுவாசமானது இறைவழிபாட்டின் மூலம் அதிகரிக்கும். அவ்வாறே, இறைவனுக்கு மாறு செய்வதன்மூலம் குறைந்துவிடும் என்பதாகும். எமது ஆத்மா இறைவனுடன் சிறந்ததொரு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்ற விதத்திலும், மறுமையில் நாம் நிச்சயமாக நமது இறைவனை சந்திப்போம் என்பதில் அசையாத, அழுத்தமான நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையிலும், மறுமையில் இறைவனை சந்திக்கும்போது, நாம் இவ்வுலகில் செய்த எல்லாச்செயல்களுக்கும் அவனிடத்தில் உரிய விளக்கம் தந்தாக வேண்டும் என்ற உறுதியை உள்ளத்தில் ஏற்படுத்துகின்ற விதத்திலும் நம்பிக்கையை நமக்குள் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நம்பிக்கை நமது ஆத்மாவில் ஊடுருவி நமது சொல், செயல் அனைத்திலும் வெளிப்பட வேண்டும்.
ஈமானில் அடிப்படைகள் 6 உள்ளன. அவைகளை ஒரு மனிதன் விசுவாசங்கொண்டு அவைகளை மேலும் உறுதிப்படுத்தக் கூடியதாக தனது செயல்களை மாற்றிக் கொள்ளும்போதுதான் ஈமானின் ஒளி அவனது வாழ்க்கையில் பிரகாசிக்கத் தொடங்கும்.
ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஈமான் பற்றிக்கேட்ட கேள்விகளுக்கு நபி(ஸல்) அவர்கள் அளித்துள்ள பதிலில் கீழ்காணும் ஆறு அம்சங்களும் இடம் பெறுகின்றன. அவையாவன:
1.               அல்லாஹ்வை நம்புவது:
2.               அவனது மலக்குகளை (வானவர்களை) நம்புவது:
3.               அவனுடைய வேதங்களை நம்புவது:
4.               அவனது தூதர்களை நம்புவது:
5.               மறுமையை நம்புவது:
6.               நன்மை, தீமைகள் அனைத்தும் விதியின்படியே ஏற்படுகிறது எனும் இறை நிர்ணயத்தை நம்புவது :  (ஆதாரம்: முஸ்லிம்)
 1.            அல்லாஹ்வை நம்புவது:
இறைநம்பிக்கை என்பது அல்லாஹ் ஒருவன் இருக்கிறான். படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்குரியது. அவனுக்கு நிகராகவோ, துணையாகவோ யாரும் இல்லை. வணக்கத்துக்குத் தகுதியானவன் அவன் ஒருவன்தான். அவனுக்கு மட்டுமே சொந்தமான திருநாமங்கள், பண்புகள் உள்ளன (என்ற இறைநம்பிக்கை) எனும் பிரதான நுழைவாயில் ஊடாக இஸ்லாத்திற்குள் பிரவேசிக்க வேண்டும். அல்லாஹ்வைப்பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் மிகச்சிறந்த அறிமுகம் தருகின்றது.
  • அல்லாஹ் நித்திய ஜீவன் – என்றென்றம் நிலைத்து வாழ்பவன் (2:255)
  • அவனைத்தவிர மற்ற அனைத்தும் அழியக்கூடியவையே! (28:88)
அவனுடைய ஆட்சியதிகாரத்தில் பங்குகொள்ளும் அளவுக்கு அவனுடைய அடியார்களில் யாருக்கும் தகுதியில்லை.
2.            மலக்குகளை (வானவர்கள்) நம்புவது :
அல்லாஹ்வின் படைப்பினமான இவர்களை நம்புவது ஈமானின் இரண்டாவது அம்சமாகும். கண்களுக்குப் புலப்படாத இவர்களுக்கு, அல்லாஹ்வின் இறைமையில் எவ்வித பங்கும் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்புடைய இவர்களும் அல்லாஹ்வின் அடிமைகளேயாவர். இவர்களால் அல்லாஹ்வுக்கு எதிராக செயல்படவும் முடியாது. பாவகாரியங்களில் ஈடுபடவும் முடியாது. இவர்களுள் பிரதானமானவரின் பெயர் ஜிப்ரீல் (அலை) என்பதாகும். இவரது பொறுப்பு இறைச்செய்தியை இறைத்தூதர்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதாகும். இன்னும் பல முக்கியமான வானவர்களும் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே.
3.            வேதங்களை நம்புவது :
அல்லாஹ் உலகில் வாழ்ந்த அனைத்து மனித சமுதாயத்திற்கும் பல்வேறு கால கட்டங்களில் தனது வழிகாட்டல்கள் அடங்கிய வேதங்களை அருளியிருக்கின்றான். அவற்றில் சில வேதங்களின் பெயர்கள் மட்டுமே நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அவை:-
1.   நபி மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட வேதம் – தௌராத்.
2.   நபி தாவூத் (அலை) அவர்களுக்கு அருள்பட்ட வேதம் – ஸபூர்
3.   நபி ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட வேதம் – இன்ஜீல்
4.   நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வேதம் – அல்குர்ஆன்.
ஒரு முஸ்லிம் பெயரறிந்த மேற்கூறப்பட்ட வேதங்களையும், மற்றவைகளைப் பொதுவாகவும், வேதங்கள் அல்லாஹ்வால் அருளப்பட்டவை என நம்புவதும் ஈமானின் மூன்றாவது அம்சமாகும். அல்லாஹ் அருளிய அனைத்து வேதங்களிலும் இறுதியானது அல்குர்ஆன் ஆகும். இதில் முந்திய வேதங்களின் சாராம்சமும் அடங்கியுள்ளது. எனவே யாராவது அல்குர்ஆனைத் தனது வேத நூலாக ஏற்று பின்பற்றினால் அவர் முந்திய வேத நூல்களையும் ஏற்றவர் ஆகிறார். இதன்படி முந்தைய வேதங்கள் நம்பிக்கைக்குரியதாக இருப்பினும், அல்குர்ஆன் நம்பிக்கைக்கும், நடைமுறை வாழ்வில் பின்பற்றுவதற்கும் உரியதாக அமைந்துவிடுகிறது. முழு உலகத்துக்கும் உரிய பொது வேதநூலாக திகழ்வது அல்குர்ஆனின் சிறப்பியல்பாகும்.
4.            இறைத்தூதர்களை நம்புவது :
வேதங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப வாழ்ந்து ஈருலக நற்பயன்களைப் பெறுவது எப்படி என்பதைக் கற்றுக்கொடுத்து முன்மாதிரியாக வாழும் மனிதப்புனிதர்களை, அவர்களின் சமுதாயத்திலிருந்தே இறைவன் தோற்றுவித்தான். அவர்களையே இஸ்லாம் ‘இறைத்தூதர்கள்’ என அறிமுகப்படுத்துகிறது.
அல்லாஹ் கூறுகிறான், ‘அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த சமுதாயத்தினரும் பூமியில் இருக்கவில்லை. (35:24)
இப்படித்தோன்றிய தூதர்களில் 25 தூதர்களின் பெயர்களையே அல்லாஹ் நமக்கு அறிவித்துள்ளான். அவர்களில் இறுதியானவர் முஹம்மத் (ஸல்) அவர்களாவார்.
5.            மறுமை நாளை நம்புவது :
மறுமையை நம்பவேண்டும் என்பது நம்பிக்கை சார்ந்த ஐந்தாவது அம்சமாகும். இது தொடர்பாக நம்பிக்கை கொள்ளவேண்டியவை:
அ)    ஒரு நாளில் அல்லாஹ் முழு உலகையும், படைப்பினங்களையும் அழித்துவிடுவான். அந்நாளின் பெயர் ‘கியாமத்‘ ஆகும்.
ஆ)   பிறகு இறைவன் அனைவருக்கும் மறுவாழ்வு அளிப்பான். அனைவரும் அல்லாஹ்வின் முன் ஆஜராவார்கள். அதற்கு ‘மஹ்ஷர்‘ என்று பெயர்.
 இ)    எல்லா மனிதர்களும், தங்கள் உலக வாழ்வில் எதை எதைச் செய்தார்களோ அவை முழுவதும் கொண்ட செயல்பட்டியல் இறைவனின் நீதி மன்றத்தின் சமர்ப்பிக்கப்படும்.
 ஈ)    அல்லாஹ் ஒவ்வொருவருடைய நல்ல, கெட்ட செயல்களையும் ஆய்வு செய்வான். நன்மை, தீமைகளுக்கேற்ப மன்னிப்பும், தண்டனையும் வழங்குவான். யார் மன்னிப்பைப் பெறுகிறார்களோ, அவர்கள் சுவர்க்கம் புகுவர். யாருக்குத் தண்டனை வழங்கப்படுகிறதோ, அவர்கள் நரகம் செல்வர்.
6.            இறை நிர்ணயம் (விதியை) நம்புவது :
இந்தப் பிரபஞ்சமும் இதிலுள்ள படைப்புக்கள் அனைத்தும் அணுவும் பிசகாது அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படியே இயங்குகின்றன, என்பது இஸ்லாத்தின் இறைநம்பிக்கை சார்ந்த ஆறாவது அம்சமாகும். மனிதனுடைய கற்பனைகள், கருத்துக்கள்கூட அல்லாஹ்வின் நிர்ணயத்துக்கு உட்பட்டவை. அல்லாஹ்வின் ஞானத்துக்குப் புறம்பாகவோ, அவன் நிர்ணயித்த விதிமுறைக்கு மாறாகவோ, எதுவும் இயங்க முடியாது. இதன் கருத்து மனிதன் சுதந்திரமாக இயங்குவதற்கான அறிவையும், ஆற்றலையும், அல்லாஹ் வழங்கியுள்ளான். அதேவேளை அவற்றில் தன் விதிமுறைகளை வைக்கவும் அவன் தவறவில்லை. இது அல்லாஹ்வின் ஆற்றலில், அறிவில், திறமையில் உள்ளதாகும். இப்பிரபஞ்சத்தின் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அது அல்லாஹ்வின் விதிப்படியேயன்றி நடப்பதில்லை.
இதுவரை ஒரு முஸ்லிம் ஈமான் (நம்பிக்கை) கொள்ள வேண்டிய அடிப்படிடையான ஆறு விஷயங்களையும் நாம் அறிந்தோம். இவற்றை உறுதியாக ஈமான் கொள்வதும், ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். எனவே இவையனைத்தையம் ஈமான் (நம்பிக்கை)கொண்டு அந்நம்பிக்கையெனும் ஈமானின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக்கொள்வோமாக!
 
ஆக்கம்: மௌலவி. முஹம்மத் ஜக்கி முஹம்மத், அழைப்பாளர், தம்மாம்
வெளியீடு: இஸ்லாமிய கலாச்சார மையம் (ICC), தம்மாம், சஊதி அரேபியா

About முஹம்மத் ஜக்கி முஹம்மத்

Check Also

சகோதரனுக்கு ஒரு கடிதம் (v)

அன்புச் சகோதர சகோதரிகளே !!! உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவ‌தாக… இந்த கடிதத்தை படிக்க சில ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *