Home / கட்டுரை / [கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – 8

[கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – 8

இஸ்லாத்தைத் தகர்க்கும் சூஃபித்துவம்

மக்களை ஆன்மீகப் பாதையில் பயிற்றுவிக்கும் பள்ளி எனும் போலி பெயரில் மக்களிடையே அறிமுகமாகியிருக்கும் இந்த சூஃபித்துவ அத்வைத தத்துவம் எந்தளவுக்கு இஸ்லாத்தைத் தகர்க்கும் விஷமத்தனமான, நச்சுக் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றது என்பதைக் கொஞ்சம் தொட்டுக் காட்டுவதுதான் இந்தப் பகுதியின் நோக்கம். எந்தளவுக்கு சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாதபடி மிக தந்திரமாக இந்த நச்சுக் கருத்துக்களை மக்கள் இதயங்களில் புகுத்தியிருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது . எனவே இது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்

எல்லாம் இறைவனே .. என்று கூறும் சூஃபித்துவம் .

எல்லாம் அவனே எனும் தத்துவமே சூஃபித்துவத்தின் அடிநாதமாகும். சூஃபித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளும் இந்த விசயத்தில் உடன்பட்டுக் காணப்படுகின்றன. ஆனால் இதை ஆரம்பப் படித்தர மக்களுக்குச் சொல்வது கிடையாது. எமது பகுதிகளில் உள்ள காதிரிய்யா , ஷாதுலிய்யா, ஜிஸ்திய்யா இது போன்ற அனைத்துத் தரீக்காக்களுமே இவ்வத்வைதத்தை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அத்தரீக்காக்களின் மௌலீது நூல்களில் கூட இவை மலிந்து காணப்படுகின்றன. இந்த அனைத்துத் தரீக்காக்களும் முன்னைய சூஃபித்துவவாதிகளால் எழுதப்பட்ட ஒரே வித நூல்களிலிருந்தே தமது சரக்குகளை எடுத்திருக்கின்றன. இப்போதும் எடுக்கின்றன. இந்த தரீக்காக்களில் பெயர்கள் சமீபத்திய சூஃபித்துவ வாதிகளினாலேயே தோற்றுவிக்கப்பட்டன .

எல்லாம் அவனே எனும் கருத்தில் சில முற்கால சூஃபிகள் சொல்லி வைத்த தத்துவங்கள் ? இல்லை! வழிகேடுகள் சிலதைப் பார்ப்போம் .

பிரபலசூஃபியான கஸ்ஸாலி இமாம் அவர்கள் திருவுளமாகின்றார்கள்??..

தவ்ஹீத் என்பதை நான்கு படித்தரங்களாக வகைப்படுத்தலாம் . முதலாவது நாவினால் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவது, இரண்டாவது அதன் அர்த்தத்தை கல்பால் இதயத்தால் உண்மைப் படுத்துவது, இது பாமரமக்களின் படிநிலையாகும், மூன்றாவது இறை ஒளியினால் கஷ்புடைய ஞானத்தைக் காண்பதாகும் . இது இறைநெருக்கம் பெற்றவர்களின் நிலையாகும் , நான்காவது பிரபஞ்சத்தில் அல்லாஹ்வைத்தவிர எதையுமே காணாத நிலையாகும். தன்னையும் அவர் கடவுளாகவே காண்பார். இந்நிலைக்கு சூஃபியாக்களிடத்தில் பனாஃ — இறைவனுடன் சங்கமித்து விடுதல் என்று கூறப்படும். இந்த நிலையை அடைந்தவர்தான் உண்மையான தவ்ஹீத் வாதியாவார் .(இஹ்யா உலூமுத்தீன் . 245-4 ம்பாகம் )

இவ்வாறு கஸ்ஸாலி கூறி விட்டு பின்வருமாறு வினாவெழுப்புகின்றார். ஒருவன் வானம் பூமி கடல், கரை, பறவை, மிருகம் இப்படிப் பல்வேறு படைப்புக்களைக் காணும் நிலையில் எங்ஙனம் அனைத்தையும் ஒன்றாக ஒரே கடவுளாகக் காண்பது சாத்தியமாகுமென நீ வினவலாம். எனினும் இது கஸ்புடைய ஞானத்தின் உச்சகட்ட நிலையால் ஏற்படுவதாகும். இந்த ஞானத்தின் ரகசியத்தை எழுத்துக்களால் வடிக்க முடியாது. ரப்பின் இந்த ரகசியத்தை பகிரங்கப்படுத்துவது குப்ராகுமென ஆரிபீன்கள் கூறுவார்கள். (அதே நூல் அதே பக்கம்)

மன்ஸூர் அல் கல்லாஜி என்பவன் வழி கெட்ட சூஃபிகளில் ஒருவன் இவனது காலத்தில் தீனூர் எனும் ஊரில் ஒருவர் மடமொன்றில் தனிமையில் இருந்து வந்தார் . இவரது மடத்தைச் சிலர் சந்தேகத்தின் பேரில் சோதனை போட்ட போது அங்கிருந்து கடிதமொன்றைக் கண்டெடுத்தனர். அக்கடிதத்தில் ‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமான மன்ஸூர் அல்கல்லாஜியிடமிருந்து இன்னாருக்கு.’ என்று எழுதப்பட்டிருந்தது . இக்கடிதம் அரசரிடம் சமர்ப்பிக்கப்பட அவர் ஹல்லாஜியை வரவழைத்து இதுவரை நீ நபியென்றுதான் வாதாடி வந்தாய் .இப்போது நீதான் கடவுள் என்று கூறத் துணிந்து விட்டாயா? எனக் கேட்க நான் அப்படிக் கூறவில்லை. எனினும் அனைவரும் கடவுள் என்பதே எங்கள் தத்துவம் . இக்கடிதம் எனக்குரியதே… அதே வேளை இதை எழுதியவனும் அல்லாஹ்வே என்றான். இக்கொள்கை காரணமாகவே அவனுக்கு இஸ்லாமிய அரசால் மரணதண்டனை விதிக்கப்பட்டது . . . ( தல்பீஸூ இப்லீஸ் பக்கம் 171)

மற்றுமொரு சூஃபித்துவ வழிகேடனாகிய இப்னு அரபி என்பவன் ஒரு கவிதையில் கூறுகின்றான்.

மனிதனே கடவுள். கடவுளே மனிதன் இப்படியிருக்க யார் யாருக்குக் கட்டளையிடுவது ?

நீ மனிதனென அழைத்தாலும் கடவுளென அழைத்தாலும் இரண்டுமே ஒன்றுதான் இப்படியிருக்க யார் யாரை வணங்குவது.? (அல்புதூஹாத்துல் மக்கிய்யா213 )

இப்னு அரபியின் மற்றுமொரு உளறலைப் பாருங்கள் ….

ஒரு மனிதன் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போதும் அல்லாஹ்வுடனேயே உறவு கொள்கின்றான். நான் அவனை அல்லாஹ்வை வணங்குகின்றேன் அவன் என்னை வணங்குகின்றான் .( ஸூபிய்யா 17 )

அபூயஸித் அல்புஸ்தாமி எனும் மூடச் சூஃபி பின்வருமாறு பிரார்த்திக்கின்றான்.. ‘உனது வஹ்தானியத்தை எனக்கும் தருவாயாக . உனது ரப்பு எனும் கிரீடத்தை எனக்கும் அணிவிப்பாயாக . என்னையும் உனது ஒருமைத்துவத்துடன் சேர்த்துக் கொள்வாயாக . என்னை மக்கள் கண்டால் உன்னைக் கண்டதாகவே சொல்ல வேண்டும் என்று பிரார்த்திக்கின்றான்…

இது போன்ற நச்சுக்கருத்துள்ள சிந்தனைகள் விடயத்தில் அனைத்து சூஃபிகளுமே ஒருமித்த கருத்தில் இருக்கின்றனர் . சூஃபித்துவ நூல்களில் இவை நிறைந்து காணப்படுகின்றன .

எம்மதமும் சம்மதமே என்பதே சூஃபித்துவ இலச்சினை.

மேலே கூறியதற்கேற்ப காண்பதெல்லாம் கடவுளே எனும் சித்தாந்தத்தின்படி ஒருவன் எந்த மதத்திலிருந்தாலும் எந்தச் சிலையை வணங்கினாலும் அவன் அல்லாஹ்வையே வணங்குகின்றான் என்பதே இவர்களின் கருத்தாகும். இதற்கேற்ப இஸ்லாத்தின் வைரியான பிர்அவ்னும் மிகப் பெரிய தவ்ஹீத் வாதியாவான். இன்னும் சொல்லப் போனால் ‘நான்தான் உங்களுக்கெல்லாம் மிகப் பெரிய கடவுள்’ என்று கூறி உண்மையான கடவுள் தத்துவத்தை அவன் நிலை நிறுத்தினான் என்று கூறுகின்றனர் . அன்றைய மக்கத்துக் காபிர்களை அல்லாஹ் ‘ யாஅய்யுஹல் காபிரூன் காபிர்களே ‘ என்று விழித்ததற்குக் காரணம் அவர்கள் எல்லாமே கடவுள்தான் எனும் சித்தாந்தத்தைக் கைவிட்டு விட்டு 313 விக்ரஹங்கள் மாத்திமே கடவுள் என்று நம்பி காண்பெதெல்லாம் கடவுளே என்பதை மறுத்தனர். இதனாலேயே அவர்கள் காபிர்கள் என அழைக்கப்பட்டனர் என்று இவ் வழிகேடர்கள் கூறுகின்றனர்.

ஜலாலுத்தீன் ரூமி என்பவன் கூறுகின்றான் … நான் ஒரு முஸ்லிம் ஆனாலும் நான் கிருஷ்த்தவனும்தான், பிராமணனும்தான் நான் பள்ளியிலும் தொழுவேன் கோயிலிலும் கும்பிடுவேன், சிலைகளையும் வணங்குவேன் ஏனெனில் எல்லாமே ஒன்றுதான் ( ஸூபிய்யா பக்கம் : 45)

இப்னு அரபியின் மற்றுமொரு உளறல்….

‘என் மதமும் என் மாற்றுமத நன்பனின் மதமும் ஒரே மதமே என்றில்லாவிட்டால் என்னால் தூங்க முடியாது. என்னுள்ளம் எல்லா மதங்களையும் ஒன்றாகவே நோக்கும் நிலைக்கு வந்து விட்டது. அதிலே கிருஷ்த்தவப் பாதிரிகளுக்கும் இடமுண்டு. சிலை வணங்கிகளுக்கும் இடமுண்டு. .கஃபாவுக்கும் இடமுண்டு . அது ஒரே நேரத்தில் தௌராத்தாகவும் குர்ஆனாகவும் இருக்கின்றது. (ஸூபிய்யா 17)

ஸூபிகளின் மேலும் சில ஷிர்க்கான வழி கெட்ட கொள்கைகளை தொடர்ந்து பார்ப்போம் …

About முஹம்மது ஜலீல் மதனீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *