Home / எழுத்தாக்கம் / [கட்டுரை] நான் தங்களது கால்கள் பேசுகிறேன் – தொடர்:01

[கட்டுரை] நான் தங்களது கால்கள் பேசுகிறேன் – தொடர்:01

‘அனைத்து உயிரினங்களையும் இறைவன் நீரிலிருந்து படைத்தான்; அவற்றில் தனது வயிற்றால் நடப்பவையும் உண்டு. இரு கால்களால் நடப்பவையும் உண்டு. நான்கு கால்களால் நடப்பவையும் உண்டு. தான் நாடியதை இறைவன் படைக்கிறான். உறுதியாக இறைவன் அனைத்தின்மீதும் பேராற்றல் உடையவன்.’ [24 : 45]

மேற்கண்ட வசனத்தில் கால்கள் குறித்தான இறைவனின் பேராற்றல் வெளிப்படுகிறது. ஒரே வகையான நீர்மத்தில் பல்வேறு வகையான வடிவங்கள் கொண்ட படைப்புகளை இறைவன் படைக்கிறான்.

அவற்றில் வயிறால் ஊர்ந்து செல்பவையும் உள்ளன. உதாரணமாக பாம்புகள், மீன்கள். பாம்புகள் தரையில் ஊர்பவை; மீன்கள் நீரில் ஊர்பவை.

அவற்றில் இரண்டு கால்களால் நடந்து செல்பவையும் உள்ளன. உதாரணமாக மனிதன் மற்றும் பறவைகள். பறவைகள் தரையில் நடக்கும்போது இருகால்களால் நடக்கின்றன; வானத்தில் பறக்கும்போது இரு இறக்கைகளால் பறக்கின்றன. இங்கு இறக்கைகள் கால்களாக விளங்குகின்றன. ஆக, இருகால்களால் நடப்பவையும் இரு இறக்கைகளால் பறப்பவையும் இதில் அடங்கும்.

அவற்றில் நான்கு கால்களால் நடப்பவையும் உள்ளன. உதாரணமாக கால்நடைகளும் பிற விலங்குகளும். ஆக, நீரை மூலச்சத்தாகக் கொண்டுள்ள உயிரினங்களில் ஊர்வன, நடப்பன, பறப்பன எனப் பல்வேறு வகைகள் உள்ளன.
மனிதர்களாகிய நீங்கள் இரண்டு காலிகள். விலங்குகளுக்கு நான்கு கால்கள். அதாவது, இரண்டு கைகளையும் கால்களாகவே அவை பயன்படுத்துகின்றன.

பாம்புக்கு கால்களே இல்லை. ஆனால், பூரானுக்கு உடம்பு முழுவதும் கால்கள். அட்டைப்பூச்சி என்று ஒரு பூச்சி. இது கறுப்பாகவும் வளைந்து வளைந்து செல்லும்போது தொடர் வண்டியைப் போன்றிருப்பதாலும் இதைத் தமிழில் ரயில் பூச்சி என்று நீங்கள் அழைப்பீர்கள். இதற்கும் உடல் முழுவதும் கால்கள் இருக்கும்.

இவ்வாறு விதவிதமாக படைக்கும் பேராற்றல் உள்ளவனே இறைவன். உயிரியல் [Biology] விலங்கியல் [zoology] கற்றவர்கள் இதை உணர்ந்தால், அவர்களுக்கு நிறைய உண்மைகள் புரியும்.

🌸 கால்களின் இறையதிசயம்!

உங்களது உடலுறுப்புகளில் ஒவ்வொன்றும் முக்கியமானதே. நீங்கள் இடம் விட்டு இடம் அசையக் காரணமான கால்கள் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன, காடு, மேடு, சகதி, நீர், மலை என அனைத்து இடங்களுக்கும் கால்களால்தான் நீங்கள் நடந்து செல்கின்றீர்கள்.

நீங்கள் சுமாராக உங்கள் வாழ்நாளில் 1,15,000 மைல்கள் நடக்கின்றீர்கள். நடப்பது ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி. இது உங்கள் பாதங்களுக்கும், உடம்பிற்கும், ரத்த ஓட்டத்திற்கும் நன்மை பயக்கிறது. புவியின் ஈர்ப்பு விசையை எதிர்த்துச் செயல்பட்டு உங்களைக் கம்பீரமாக எழுச்சி நடைபோட வைப்பது கால்கள்தான்.

உங்களது முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையில் உள்ள உறுதியான ‘ஆடும் தசை’ எனப்படும் ‘காஸ்ட்ரோன்மியஸ் தசை’தான் நடக்கவும் ஓடவும் பயன்படும் முக்கியமான தசை.

உங்களில் ஒருவர் எழுபது கிலோ எடை உள்ள வராக இருந்தால், அவர் ஒற்றைக்காலை மட்டும் ஊன்றி நிற்கும்போது, ஆடும் தசை ஏறக்குறைய 420 கிலோ எடை தூக்குவதற்கான சக்தியைத் தர வேண்டியதுள்ளது.

அதுவே பாலே நடனம் ஆடுபவராக இருந்தால், ஒரு காலில் உள்ள கட்டை விரலில் மட்டும் ஊன்றி ஆடும்போது, அந்தக் காலின் ஆடுதசை ஏறக்குறைய 1000 கிலோ எடையைத் தூக்குவதற்குச் சமமான சக்தியைத் தருகிறது. நீங்கள் நடக்கும்போது இரண்டு கால்களும் ஒரே நேரத்தில் நகருவதில்லை. மாறிமாறிச் செயல்படுவதால்தான் நடக்கவே முடிகிறது.

சாதாரணமாக ஒரு நிமிடத்தில் ஐம்பது முறை நீங்கள் காலை எடுத்துவைத்து நடக்கிறீர்கள். இரப்பர், தோல், கட்டை, இரும்பு என நீங்கள் எதில் செருப்பு செய்து போட்டாலும் ஒரு கட்டத்தில் அவற்றில் தேய்மானம் ஏற்பட்டுவிடும். உடனே வேறு செருப்பு வாங்கி அணிகிறீர்கள். (அப்போது தானே செருப்பு வியாபாரிகள் பிழைக்கமுடியும்!)

ஆனால், நீங்கள் உங்களது வாழ்நாளில் ஏறக்குறைய 1,15,000 கிலோ மீட்டர் தூரம் நடந்தும்கூட பொதுவாக பாதம், குதிகால் மற்றும் பெருவிரல் மூட்டுகள் அவ்வளவு எளிதில் பழுதாவதில்லை. இது இறைப் படைப்புக்கும் மனிதப் படைப்புக்குமுள்ள வேறுபாடு.

🌸 ஏழு உறுப்புகளில் கால்களும் ஒன்று!

பின்வரும் ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு சிரவணக்கம் (ஸஜ்தா) செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள். அவை : இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்களின் நுனிகள், நெற்றி ஆகியவை. [முஸ்லிம் 844]

🌸 கால்களுக்கும் ரேகை உண்டு!

ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி(ஸல்) அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, என்னிடம் இருவரின் சாயலை வைத்து உறவு முறையை கணிப்பவர் ஒருவர் வந்தார். உஸாமா பின் ஸைதும், ஸைத் பின் ஹாரிஸாவும் அப்போது ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அந்த மனிதர் இருவரின் கால்களையும் பார்த்து விட்டு, ‘இந்தக் கால்கள் ஒன்றுக்கொன்று உறவுள்ளவை; ஒன்று மற்றொன்றிலிருந்து தோன்றியவை’ என்று கூறினார். அதைக் கேட்ட நபியவர்கள் மகிழ்ச்சியடைந்து அவரை வியந்தார்கள்; அதை எனக்கும் தெரிவித்தார்கள். [புகாரி 3731]

                                                                                                                                                                                                                                                                              – தொடரும்…

எழுத்தாக்கம்
மவ்லவி கே. ரஹ்மத்துல்லாஹ் மஹ்ளரீ
மஹாராஜபுரம், தமிழ்நாடு

About நிர்வாகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *