Home / எழுத்தாக்கம் / [கேள்வி-பதில்] தொழுகையில் ஸுஜூதிலிருந்து நிலைக்கு வருவது எவ்வாறு?

[கேள்வி-பதில்] தொழுகையில் ஸுஜூதிலிருந்து நிலைக்கு வருவது எவ்வாறு?

என்னை எவ்வாறு நீங்கள் தொழக் கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள். (புகாரி) என்ற நபி மொழிக்கேற்ப நம் தொழுகையின் ஒவ்வொரு அம்சமும் நபிகளார் காட்டிய அமைப்பில் அமைந்திருக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் ஸுஜுதில் இருந்து நிலைக்கு வரும் முறையை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

எமக்கு மத்தியில் இவ்விடயத்திலே மூன்று விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. அவைகளை ஒவ்வொரு தலைப்புக்களாய் ஆராய்வோம்.

1-கைகளை ஊன்றாமல் கால்களின் துணை கொண்டு நிலைக்கு வருதல் :

’நபியவர்கள் ஸுஜூது செய்யும் போது கைகளுக்கு முன்னால் கால்களை வைப்பார்கள். ஸுஜூதில் இருந்து நிலைக்கு வரும் போது இரண்டு கால்களுக்கு முன்னால் கைகளை உயர்த்துவார்கள். (அதாவது கால்களின் துணை கொண்டே எழும்புவார்கள்) – அறிவிப்பவர்:- வாஇல் இப்னு ஹுஜ்ர்ஆதாரம்:- திர்மிதி – 268 (இன்னும் பல நூற்கள்)

இக்கருத்தில் உள்ளவர்கள் மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸையே முக்கியமான ஆதாராமாய் முன்வைக்கின்றனர். ஆனாலும் இது பலஹீனமான ஹதீஸ் ஆகும். இதன் அறிவிப்பாளர் வரிசையிலே இடம் பெரும் ஷரீக் என்பவர் மனனத்தில் பலஹீனமானவர். இவரை அதிகமான அறிஞர்கள் பலஹீனப்படுத்தியுள்ளனர்.

ஆகையால் இம்முறை ஆதாரமற்ற ஒரு செயலாகும். இதனால் நாம் அதை தவிர்க்க வேண்டும்.

2- கால்களில் துணையின்றி கைகளின் துணைகொண்டு எழும்பும் போது விரல்களை மடக்கிய நிலையில் முஷ்டியால் நிலத்தில் ஊன்றி எழும்புதல்.

கைகளின் துணைகொண்டே எழும்ப வேண்டும் என்று கருதக்கூடிய சகோதரர்களில் சிலர் நபிகளார் எழும்பும் போது மாவு பிசைவதைப்போல் கைகளைப் பொத்திய நிலையில் ஊன்றி எழும்புவார்கள் எனக்கூறி பின்வரும் ஹதீஸை ஆதாரமாக முன்வைக்கின்றனர்.

அப்துல்லாஹ் இப்னு உமர் தொழுகையிலே விரல்களை மடக்கிய நிலையில் இருகைகளையும் நிலத்தில் வைத்து முஷ்டியால் (விரல்களின் மூட்டுக்களால்) எழும்புவதைக்கண்டு ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்று விணவிய பொழுது ‘நபிகளார் தொழுகையிலே விரல்களை மடக்கிய நிலையில் இரு கைகளையும் நிலத்தில் வைத்து முஷ்டியால் (விரல்களின் மூட்டுக்களால்) எழும்புவதை நான் கண்டிருக்கிறேன். அதாவது கைகளின் துணைகொண்டு எழும்புவார்கள்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்:- அஸ்ரக் இப்னு கைஸ்ஆதாரம்:- அல்-முஃஜமுல் கபீர் – 4007.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரிலே இடம்பெற்றுள்ள அல் ஹைஸம் இப்னு அல்கமா இப்னி கைஸ் இப்னி ஸஃலபா என்ற அறிவிப்பாளர் யாரென்றே அறியப்படாதவர். ஹதீஸ் இடம்பெற்றுள்ள இந்நூலைத் தவிர வேறு எங்கும் இப்படி ஒரு பெயர்கூட இல்லை. இந்த ஹதீஸை இன்னொரு வகையில் சரிகாண்கின்ற இமாம் அல்பானி அவர்கள் கூட இவரைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார். ‘இவரைப்பற்றி எனக்குத் தெரியாது. இவரைப்பற்றி குறிப்பிட்ட எவரையும் நான் காணவில்லை (ஆனாலும்) இவ்வறிவிப்பிலே தவறு இடம்பெற்றிருக்கலாம் என நான் ஐயப்படுகிறேன். ஏனென்றால் இதே அறிவிப்பு வேறு முறையில் அபூ இஸ்ஹாக் அல் ஹர்பியுடைய (கரீபுல் ஹதீஸ்) என்ற நூலில் இடம்பெற்றுள்ளது’ பார்க்க:- அஸ்ஸஹீஹா – 2674

இமாம் அல்பானி சொல்வதைப்போல் இதே ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசையில் சில மாற்றங்களுடன் இடம்பெற்றுள்ளது.மேலே குறிப்பிடப்பட்ட ஹைஸமும் மறு அறிவிப்பில் இடம்பெற்றிருக்கின்ற ஹைஸமும் இருவரல்ல ஒருவரே என்று இமாம் அல்பானி அவரகள் கூறிகிறார்கள். ஆனாலும் மேலே குறிப்பிடப்பட்ட அவ்வறிவிப்பாளர் வரிசையிலே தந்தையின் பெயர் தவறுதலாக ‘அல்கமா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது தந்தையின் பெயர் இம்ரான் என்பது இமாம் அல்பானியின் கருத்து. ஹைஸம் இப்னு இம்ரான் உடைய ஆசிரியர்கள் மாணவர்கள் பற்றி ஆய்கின்றபோது இதுவே மிகப்பொருத்தமானதாகும்.

ஹைஸம் இப்னு இம்ரான் டமஸ்கஸைச் சேர்ந்தவர். அன்ஸ் அல்லது அபஸ் என்ற மூலத்தைச்சேர்ந்தவர் ஆனாலும் இவருடைய தரம் சம்பந்தமாக அறிவிப்பாளர் விமர்சன நூற்களில் எவ்வித குறிப்பும் கிடையாது. தரம் அறியப்படாதவர்களுடைய அறிவிப்பு பலஹீனம் என்பதால் இந்த ஹதீஸும் பலஹீனமானதாகும். இமாம் இப்னு ஹிப்பான் இவரை அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்ற தனது நூலிலே 11553 என்ற இலக்கத்திலே இடம் பெறச்செய்திருந்தாலும் இமாம் இப்னு ஹிப்பானை பொருத்தவரை அறியப்படாதவர்களையும் ஏற்றுக்கொள்பவர் என்று அறிஞர்களின் ஆய்வுகள் சொல்வதனால் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆகையால் இம்முறை ஆதாரமற்ற ஒருசெயலாகும். இதனையும் நாம் தவிர்க்க வேண்டும்.

3-சாதாரண முறையில் கால்களின் துணையின்றி கைகளின் துணை கொண்டு எழும்புதல்.

‘கடமையான தொழுகையில்லாமல் உங்களுக்கு நான் இப்பொழுது தொழுவிக்கப் போகின்றேன். நபிகளார் தொழுததை நான் எவ்வாறு தொழக்கண்டேனோ அவ்வாறு தொழுதுகாட்ட வேண்டுமென்றே இவ்வாறு நான் செய்கிறேன்’ என்று நபித்தோழர் மாலிக் எங்கள் பள்ளிக்கு வந்த போது கூறினார். இந்த விடயத்தை அவரிடமிருந்து எனக்குச்சொன்ன அபூ கிலாபாவிடம் அவர் எவ்வாறு தொழுது காட்டினார் என்று வினவிய போது ‘எங்களின் இந்த ஆசிரியருடைய–அம்ர் இப்னு ஸல்மா–தொழுகைபோல் இருந்தது’ என்று பதிலளித்தார். ‘அவர் தக்பீரை முழுமையாக்குவார். இரண்டாவது ஸஜ்தாவில் இருந்து தலையை உயர்த்தி (எழும்ப நாடி) னால் அமர்ந்து நிலத்தில்-இஃதிமாத்-செய்து பின்னர் எழும்புவார்.’ என்று அய்யூப் கூறினார்’ அறிவிப்பவர்:- மாலிக் இப்னுல் ஹுவைரிஸ்ஆதாரம்:- புகாரி – 790 (இன்னும் பல நூற்கள்)

இங்கே இஃதிமாத் – ( الاعتماد) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் கருத்து கைகளை நிலத்தில் வைத்து எழும்புதல் என்பதாகும்.

எனவே இதுவே மிகபலமுள்ள ஹதீஸ் என்பதாலும் இதனை வலுவூட்டக்கூடிய இன்னும் சில ஹதீஸ்கள் இருப்பதனாலும் சாதாரண முறையில் கால்களின் துணையின்றி கைகளை நிலத்தில் வைத்து எழும்புவதே நபி வழிக்கு ஏற்றமானதாகும். அல்லாஹ் நம்மனைவரையும் இஃலாஸுடன் அமல் செய்த மக்களாக ஆக்கியருள்வானாக!

முஜாஹித் இப்னு றஸீன்

About முஜாஹித் இப்னு ரஸீன்

Check Also

ஸஜ்தாவின் உயர்வும் உன்னதமும் (v)

வாராந்திர பயான் நிகழ்ச்சி – மெளலவி ஷரீஃப் பாகவி, இஸ்லாமிய அழைப்பாளர், எஸ்கேஎஸ் கேம்ப், ஜுபைல் மாநகரம் – நாள்: ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *