Home / எழுத்தாக்கம் / [கேள்வி-பதில்] மாதாந்திர வினாடி-வினா – ஜனவரி 2019

[கேள்வி-பதில்] மாதாந்திர வினாடி-வினா – ஜனவரி 2019

1. “ருபூபிய்யா” என்றால் என்ன ?

இவ்வுலகில் உள்ள அனைத்தையும் “படைத்தல் – பராமரித்தல் – பாதுகாத்தல்” என்பது அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நடக்கிறது என நம்பிக்கை கொள்வது.

2. இறைவன் எங்கே இருக்கிறான் ?

ஏழு வானங்களுக்கு மேல் உள்ள அர்ஷில் இருக்கிறான்.

3. ” ஷிர்க் ” என்றால் என்ன ?

அல்லாஹ் அல்லாத உலகில் உள்ள படைப்புகளை வணங்குவது, அவைகளிடம் உதவி தேடுவது, அவைகள் நமக்கு தீங்கு செய்திடுமோ என பயப்படுவது, அவைகளிடம் நன்மையை எதிர்பார்த்து நேசம் கொள்வது.

4. ” முஸ்லிம் ” என்றால் என்ன ?

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முழுமையாக கட்டுப்பட்டவன், அமைதியையும்-சமாதானத்தையும் விரும்புபவன்.

5. ” இறைவேதங்கள் ” என்றால் என்ன ?

அல்லாஹ்வால் மலக்குகளின் தலைவர் ஜிப்ரீல் (அலை) வழியாக வஹீயின் வடிவில் அல்லாஹ்வின் தூதர்களுக்கு அருளப்பட்டவைகளின் தொகுப்பு இறைவேதங்கள் எனப்படும். இதை மாற்றவோ, கூட்டவோ, குறைக்கவோ அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

6. ” தீனுல் இஸ்லாம் ” ( இஸ்லாமிய மார்க்கம் ) என்றால் என்ன ?

இறுதித்தூதர் ரஸூல் (ஸல்) அவர்கள் வழியாக, அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கிய ” அழகிய வாழ்க்கை நெறியே ” தீனுல் இஸ்லாம் எனப்படும்.

7. இஸ்லாமிய மார்க்கத்தின் இணையற்ற சிறப்பு என்ன ?

அல்லாஹ்வால் முழுமைப்படுத்தப்பட்டதும், அங்கீகரிக்கப்பட்டதுமான வாழ்க்கை நெறிதான் “இஸ்லாமிய மார்க்கம்”

8. ஏகத்துவத்தின்மீது முஸ்லிம்களின் கடமை என்ன ?

ஏகத்துவத்தை கவனமுடன் கற்பதும், நம்பிக்கை கொள்வதும், கற்பிப்பதும், ஆராய்வதும், நடைமுறைப்படுத்துவதும் கடமையாகும்.

9. நபி (ஸல்) அவர்களை ஈமான் – நம்பிக்கை கொள்வது என்றால் என்ன ?

நபி (ஸல்) கொண்டுவந்த மார்க்கத்தை உண்மைப்படுத்துவதும், அதனை உளப்பூர்வமாக ஏற்று முழுமையாக கீழ்ப்படிவதுமாகும்.

10. முந்தைய மார்க்கங்களைவிட இஸ்லாமிய மார்க்கம் எவ்வாறு சிறந்தது ?

முந்தைய மார்க்கங்களின் சிறப்பு நலன்களோடு, எல்லா காலத்திற்கும், எல்லா தேசங்களுக்கும், மனித குலம் அனைத்திற்கும் ஏற்ற வாழ்க்கை நெறியாக இருப்பதாகும்.

11. இஸ்லாமிய மார்க்கம் “சத்திய மார்க்கம்” என்பது எவ்வாறு ?

இஸ்லாமிய மார்க்கத்தை முழுமையாக, முறையோடு பேணி நடப்பவர்களுக்கு உதவி செய்யவும், மற்றவர்களைவிட இவர்களை மேலோங்கச் செய்யவும் அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்.

12. இஸ்லாமிய மார்க்கம் எவ்விரண்டை அடிப்படையாகக் கொண்டது ?

1. அகீதா ( கொள்கை )
2. ஷரீஆ ( சட்ட திட்டங்கள் )

13. இஸ்லாம் ஏவுவதும் தடுப்பதும் எவைகள் ?

நன்மையை ஏவுகிறது – தீமைகளை தடுக்கிறது .

14. இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் எவை ?

1. அல்லாஹ்வை வணக்கத்தில் ஒருமைப்படுத்தி, முஹம்மது ந‌பி (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்றுக்கொள்வது
2. ஐவேளை தொழுகையை நிலை நாட்டுவது
3. ஜகாத் கொடுப்பது
4. ரமளான் மாதம் நோன்பு நோற்பது
5. ஹஜ் செய்வது

15. இறை வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான இரண்டு அடிப்படைகள் யாவை ?

• வணக்கங்கள் யாவும் “அல்லாஹ்வுக்காகவே” என்ற தூய எண்ணத்துடன் (இஹ்லாஸுடன்) செய்வது
• வணக்கங்களில் நபி (ஸல்) அவர்களது வழிமுறையை பின்பற்றுவது.

16. ஏகத்துவ சாட்சியத்தின் மகத்தான நன்மை என்ன?

படைப்பினங்களுக்கு அடிமைப்படுவதிலிருந்தும், இறைத்தூதர்கள் அல்லாத எவரையும் பின்பற்றுவதிலிருந்தும் உள்ளத்தையும், உணர்வையும் விடுதலை பெறச் செய்வதாகும்.

17. தொழுகையில் அல்லாஹ்வுக்கு அடிபணிவது என்றால் என்ன ?

தொழுகையை உரிய நேரத்தில், உரிய ஒழுக்கங்களோடு, நிலையாகவும், நிறைவாகவும் நிறைவேற்றுவதன் மூலம் அல்லாஹ்வுக்கு அடிபணிவதாகும்.

18. தொழுகையின் பயன்கள் என்ன ?

உள்ளம் அமைதி பெறும், கண்குளிர்ச்சி ஏற்படும், மானக்கேடான-வெறுக்கத்தக்க செயல்களை விட்டும் பாதுகாக்கும்

19. ஜகாத்தின் நோக்கமும் பயனும் என்ன ?

இறை கட்டளைக்கு அடிபணிவது, கஞ்சத்தனத்திலிருந்து மனதை தூய்மையாக்குவது, முஸ்லிம்களின் தேவையை நிறைவேற்றுவது.

20. ரமளான் நோன்பின் நோக்கமும் பயனும் என்ன ?

இறை கட்டளைக்கு அடிபணிவது, அல்லாஹ்வின் திருப்தியை நாடுவது, விருப்பமானவற்றை விட்டுவிடுவதற்கு மனதை பக்குவப்படுத்துவது.

21. ஹஜ்ஜின் நோக்கமும் பயனும் என்ன ?

உடல் ரீதியான – பொருள் ரீதியான முயற்சியையும், உழைப்பையும் கொண்டு அல்லாஹ்வுக்கு அடிபணிவது, பாவச்சுமையிலிருந்து முற்றுமுழுதாக விடுபட்டு வாழ்வது.

22. இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள் யாவை ?

1. அல்லாஹ்வை நம்புவது
2. அவனது மலக்குகளை நம்புவது
3. அவனது வேதங்களை நம்புவது
4. அவனது தூதர்களை நம்புவது
5. மறுமை நாளை நம்புவது
6. விதியை நம்புவது

23. அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கான ஆதாரங்கள் எவை ?

இயல்பு ( ஃபித்ரா )
பகுத்தறிவு
இறை வழிகாட்டல்
மனித புலன்கள்

24. நபிமார்களுக்கு இறைவன் அற்புதங்களை(முஃஜிஸாத்) எதற்காக நிகழ்த்தினான் ?

அல்லாஹ் தன்னுடைய தூதர்களை உறுதிப்படுத்தவும், உதவியும் ஊக்கமும் அளிப்பதற்காகவும் நிகழ்த்தினான்.

25. பிரார்த்தனை எந்த நிலையில் ஏற்றுக்கொள்ளப்படும் ?

அல்லாஹ்வுக்கு உளத்தூய்மையுடன் அடிபணிந்து, பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளை கடைபிடித்த நிலையில் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

26. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை என்பதற்கு சாட்சியம் அளிப்பவர்கள் யார் ?

அல்லாஹ்
மலக்குகள்
அறிவுடையோர்
நேர்மை-நீதியில் நிலைத்திருப்போர்

27. ” றப்பு (Rabbu) ” என்றால் என்ன ?

” படைத்தல், பரிபாலித்தல், ஆட்சியதிகாரம், கட்டளையதிகாரம், அழித்தல், உயிப்பித்தல், இவையனைத்தையும் எவ்வித துணையுமின்றி நிர்வகிக்கும் ஆற்றலுடையவன் ” என்பது பொருள்

28. ” இலாஹ் (Elaah) ” என்றால் என்ன ?

” உள்ளச்சத்துடனும், கண்ணியத்துடனும், நேசத்துடனும் வணங்குவதற்கு தகுதியானவன் ” என்பது பொருள்.

29. கடவுளர்களாக கருதப்படும் அல்லாஹ் அல்லாதவற்றின் தன்மை என்ன ?

அவைகள் யாருக்கும் எவ்வித உதவியும் செய்வதற்கு சக்தியற்றவைக‌ள். மேலும் தமக்குத் தாமே உதவி செய்வதற்கும் சக்தியற்றவைகள்.

30. ” அஸ்மா வ ஸிஃப்பாத் ” என்றால் என்ன ?

” அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் ” என்று பொருள்.

31. ” அஸ்மா வ ஸிஃப்பாத் ” தை ஈமான் (நம்பிக்கை) கொள்வதன் விளக்கம் என்ன ?

அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகளைப் பற்றி குர்ஆனிலும்-ஹதீஸிலும் வந்தவற்றை மாற்றமோ, திருத்தமோ, உவமையோ இன்றி அப்படியே ஈமான் (நம்பிக்கை) கொள்வதாகும்.

ஆக்கம்
உம்முஷைமா

_____ o0o _____

About நிர்வாகி

Check Also

உன்னை நான் சந்தித்தேன்

அன்பார்ந்தவர்களே ! தங்களை இக்கையேட்டின் வழியாக சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இம்மகிழ்வோடு, தங்களை தேடிவந்து சந்திப்பதன் நோக்கம் இதுதான் என்பதையும் தெளிவுபடுத்த ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *