Home / எழுத்தாக்கம் / [ கட்டுரை ] அழகியலும் அலங்காரமும்.

[ கட்டுரை ] அழகியலும் அலங்காரமும்.

அழகு என்பது நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகும். ஒருவர் தன்னையோ, தனது இருப்பிடத்தையோ, தனது குழந்தைகளையோ அழகுபடுத்திப் பார்ப்பது என்பது அலங்காரம் என்ற வரையறைக்குள் வராது. இறைவன் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான் என்பது நபிமொழி. எனவே அழகு படுத்துவது என்பது நமது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களின் ஒரு பகுதியாகும். அழகு என்பது சுத்தம், நேர்த்தி, நறுமணம், ஒழுங்கு, உண்மை இப்படி நல்ல பண்புகளை உள்ளடக்கியதாகும்.

ஒருவர் தனது புறத்தோற்றத்தை நல்லமுறையில் அழகுபடுத்திக் கொள்கிறார். அதேநேரத்தில் அவரது சொல், செயல், வாழ்க்கை முறையில் உண்மை, ஒழுக்கம், சுத்தம் போன்ற நற்பண்புகள் இல்லையென்றால் அவரது புறத்தோற்றம் வெறும் அலங்காரமாகவே கருதப்படும். அவரை மக்களும் வெறுப்பார்கள், இறைவனும் அவரை விரும்பமாட்டான்.

அதேவேளை ஒருவர் புறத்தோற்றத்தில் அழகற்றவராக இருக்கும் நிலையில், உண்மையாளராகவும், ஒழுக்கமுள்ளவராகவும், தூய்மையுடனும் இருப்பாரேயானால் அவரை அனைவரும் விரும்புவார்கள், இறைவனும் அவரை விரும்புகிறான்.

ஒருவர் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறார். ஆனால் அவரது செல்வம் யாருக்கும் பயன்படாத, கஞ்சத்தனத்தின் வெளிப்பாடாக, தானதர்மங்கள் அற்றதாக இருக்குமானால் அச்செல்வத்தால் அவருக்கும் பயனில்லை, மனித சமூகத்திற்கும் பயனில்லை. இந்நிலையில் அவரிடம் இருக்கும் செல்வம் என்பது ஒரு பயனற்ற அலங்காரப் பொருளாகவே கருதப்படுமே அல்லாமல், அச்செல்வம் அவரது வாழ்க்கையின் அழகியலாக மாறாது.

தன்னிடம் இருப்பது குறைந்தளவு செல்வமானாலும், அதில் தனது உறவுகளுக்கும், அண்டை வீட்டினருக்கும், சமூகத்திற்கும் தன்னாள் இயன்றளவு செலவு செய்கிறார் என்றால், அவரது வாழ்வை அனைவரும் விரும்பக்கூடிய, இறைவனும் விரும்பக்கூடிய ஒன்றாக அவரது செல்வம் மாற்றிவிடும். இதுதான் அழகியலின் இலக்கணம்.

அடுத்ததாக ஒருவருக்கு அதிகமான பிள்ளைச் செல்வங்கள் இருக்கின்றன. அவரோ மிகவும் ஏழ்மையில் வாடுகிறார். இருப்பினும், அவரது குழந்தைகள் இறையச்சமுடையவர்களாக, தனது குடும்பத்திர்க்கும், சமூகத்திற்கும் பயனளிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றால் அது பெற்றோருக்கும், சமுதாயத்திற்கும் சிறந்ததாகும்.

அவர்கள் யாருக்கும் பயன்படாத ஒழுக்கமற்ற, ஊதாரித்தனமான பிள்ளைகளாக இருந்தால், அக்குழந்தைகள் வெளித்தோற்ற அலங்காரமாகவே கருதப்பட்டுவார்கள்.

அலங்காரம் தனக்குமட்டுமின்றி இவ்வுலகிற்கும் பயன் தராத காகித மலர்களுக்கு ஒப்பாகும்.

அழகியல் என்பது தான் மட்டுமின்றி, பிறரும் விரும்பக்கூடிய, இறைவனுடைய நெருக்கமும் கிடைக்கக்கூடிய நற்பண்புகளில் உள்ளதாகும்.

அல்லாஹ் கூறுகிறான் :

 اَلْمَالُ وَ الْبَـنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ۚ وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ اَمَلً [18:46]

18:46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.

எனவே, நமது செலவங்களும், பிள்ளைகளும் வாழ்க்கையின் அலங்காரங்களாக மாறிவிடாமல், இறைவனின் நெருக்கத்தைப் பெற்றுத்தரக்கூடிய, நன்மைகளைமட்டும் முற்படுத்தக்கூடிய, வாழ்வின் அழகியல் இலக்கணங்களாக இருப்பதற்கு ஏக இறைவன் அருள்புரிவானாக !

எழுத்தாக்கம்
உம்முஷைமா

About நிர்வாகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *