Home / எழுத்தாக்கம் / [ கட்டுரை ] ஜமாஅத் தொழுகையின் இடையில் சேர்ந்து தக்பீர் கட்டியவுடன் என்ன ஓதவேண்டும் ?

[ கட்டுரை ] ஜமாஅத் தொழுகையின் இடையில் சேர்ந்து தக்பீர் கட்டியவுடன் என்ன ஓதவேண்டும் ?

இமாம் ஜாமாஅத் நடக்கும்போது ஒருவர் ஜமாஅத்தில் வந்து சேர்ந்தால் அவர் தக்பீர் கட்டியவுடன் முதலில் எதை ஓத வேண்டும் என்பதே கேள்வி ?

ஒருவர் ஜமாஅத்தோடு தொழ விரும்பினால் நேரத்தோடு பள்ளிக்கு வந்து, இமாம் முதல் தக்பீர் கூறும்பொழுதே அவருடன் சேர்ந்து தக்பீர் கட்டுவதே ஆகச் சிறந்தது.

தொழுகைக்கு முதல் தக்பீர் கட்டியவுடன் ஃபாத்திஹா சூரா ஓதுவதற்கு முன்பாக நபிகளார் கற்றுத்தந்த ( வஜ்ஜஹத்து – அல்லாஹும்ம பாயித் பைனி – சுப்ஹானக்கல்லாஹும்ம போன்ற ) துஆக்களை ஓதுவது நபிவழி (சுன்னத்) ஆகும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில், மஃமூம்களுக்கு இந்த துஆக்களை ஓதுவதற்கான நேர அவகாசத்தை வழங்கிய பின்னரே ஃபாத்திஹா சூராவை ஓதத் துவங்க வேண்டும் என்பதை இமாம்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

தக்பீர் கட்டியவுடனேயே ஃபாத்திஹா சூராவை ஓதத் துவங்குவது இமாம்களின் அறியாமையாகும். தொழ வைக்கக்கூடிய இமாம்களும் தொழுகைக்கான சட்டங்களை தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.

சப்தமிட்டு ஓதுகின்ற தொழுகைகளில் :

முதல் நிலை : ஒருவர் முதல் தக்பீரிலேயே இமாமோடு சேர்ந்து தொழும்போது, இமாம் தக்பீர் கட்டியவுடன் (துஆக்களை ஓதுவதற்கு நேர அவகாசம் அளிக்காமல்) உடனே ஃபாத்திஹா சூராவை ஓதத் துவங்கிவிட்டால், மஃமூம்கள் வஜ்ஜஹத்து போன்ற துஆக்களை ஓதக் கூடாது. இமாம் ஓதக்கூடியதை கவனமாக கேட்பதுதான் மஃமூம்களின் கடமையாகும்.

இரண்டாம் நிலை : தொழுகை துவங்கி இமாம் சூராக்களை ஓதிக்கொண்டிருக்கின்ற நிலையில், தாமதமாக ஒருவர் தொழுகையில் இணைந்து தக்பீர் கட்டினால் அவர் முதலில் வஜ்ஜஹத்து போன்ற துஆக்களை ஓதக்கூடாது. இமாம் ஃபாத்திஹா சூராவை ஓதிக்கொண்டிருந்தால், மஃமூம் அதை கவனமாக கேட்க வேண்டும். ஃபாத்திஹா முடிந்து வேறு ஏதேனும் சூராக்களை ஓதிக்கொண்டிருந்தால் மஃமூம் முதலில் ஃபாத்திஹா சூராவை தனது மனதளவில் சப்தமின்றி ஓதிவிட்டு, இமாம் ஓதக்கூடியதை கவனமாக கேட்க வேண்டும். இந்நிலையில் வஜ்ஜஹத்துக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது.

ஏனெனில் வஜ்ஜஹத்து துஆக்களை ஓதுவது சுன்னத்தாகும். ஆனால் ஃபாத்திஹா சூராவை ஓதுவது தொழுகையின் ருக்ன் எனும் தூணாகும். ருக்ன் விடுபட்டால் தொழுகை கூடாது. எனவே இமாம் ருகூஉக்கு செல்வதற்கு முன்பாக மஃமூம் ஃபாத்திஹா சூராவை ஓதிக்கொள்ள வேண்டும். வஜ்ஜஹத் ஓதுவதால், ஃபாத்திஹா சூராவை ஓதுவதற்கு நேர அவகாசம் இல்லாமல்போக வாய்ப்புண்டு. எனவே முதலில் ஃபாத்திஹாவை ஓதுவதுதான் சரியானதாகும்.

சப்தமில்லாமல் ஓதுகின்ற தொழுகைகளில்:

லுஹர், அஸர், மஃரிபின் மூன்றாவது ரக்கஆத், இஷாவின் பிந்திய இரண்டு ரக்கஆத்களில் இமாமோடு இணைந்துகொண்டு தக்பீர் கட்டியவுடன் வஜ்ஜஹத் துஆக்களை ஓதக்கூடாது. மாற்றமாக தக்பீர் கட்டியவுடன் சூரா ஃபாத்திஹாவைத்தான் ஓத வேன்டும். இமாம் ருக்கூஉக்கு போவதற்கு முன்னாள் சூரா ஃபாத்திஹாவை இயன்றளவு ஓதிக்கொள்ள வேண்டும். சூரா ஃபாத்திஹாவை முழுமையாக ஓதி முடிப்பதற்கு முன்னால் இமாம் ருக்கூஉக்கு சென்றால், இமாமுடன் சேர்ந்து நாமும் ருக்கூஉவை செய்ய வேண்டும். சூரா ஃபாத்திஹாவை முழுமைப்படுத்த இயலவில்லையே என்ற சஞ்சலம் தேவையில்லை. இமாமை பின் தொடர்வதுதான் கடமை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் மிகவும் அறிந்தவன் …

– மவ்லவி முபாரக் மஸூத் மதனீ அவர்களின் உரையிலிருந்து …

எழுத்தாக்கம்
உம்முஷைமா

About நிர்வாகி

Check Also

மகிழ்வோம் – மகிழ்விப்போம் (v)

ரமளான் – ஜும்ஆ குத்பா பேருரை – மவ்லவி அப்பாஸ் அலீ , இஸ்லாமிய அழைப்பாளர், கோபார் தஃவா நிலையம், ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *