Breaking News
Home / எழுத்தாக்கம் / [கட்டுரை]: நோன்பின் நிய்யத்து

[கட்டுரை]: நோன்பின் நிய்யத்து

நிய்யத் என்று சொல்லும்போது உள்ளத்தால் எண்ணிக் கொள்வதாகும். ஒவ்வொரு அமலுக்கும் நிய்யத் வைக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு அமலையும் செய்துவிட்டு, அதை இப்படித்தான் செய்ய வேண்டும் என நமக்கு சொல்லித் தந்துள்ளார்கள். இதனால்தான் அல்லாஹ்வும் குர்ஆனில் “அந்தத் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி உள்ளது” என்று சுட்டிக்காட்டுகிறான்.

இதன்படி நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜைத் தவிர வேறு எந்த அமலுக்கும் வாயால் நிய்யத்தை சப்தமாக மொழியவில்லை. உள்ளத்தால் நினைத்துக் கொள்வார்கள். எனவே, நிய்யத்தை உள்ளத்தால் எண்ணிக் கொள்வது ஸுன்னத் ஆகும்.

என்றாலும் நோன்பிற்காக இரவு தராவீஹ் எனும் தொழுகை தொழுது, வித்ரெல்லாம் தொழுது முடிந்த பிறகு நிய்யத்தை இமாம் சொல்லிக் கொடுக்க, பின்னால் உள்ள மஃமூம்கள் சப்தமாக சொல்வதை பரம்பரை பரம்பரையாக காணப்படுகின்றன. அதுவும் மூன்று முறை திருப்பித் திருப்பி சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

இந்த நிய்யத்தைப் பற்றியும், இதை நபி (ஸல்) அவர்கள்தான் கற்றுத் தந்தார்களா என்பதை குர்ஆன் ஹதீஸின் வழியில் சற்று பார்ப்போம்.

அந்த நிய்யத்தைப் பொறுத்தவரை இந்த வருடத்தின் ரமழான் மாதத்தின் பர்ளான நோன்பை அதாவாக நாளைப் பிடிக்க நிய்யத் செய்கிறேன் அல்லாஹ்வுக்காக என்று அரபியிலும் தமிழிலும் மூன்று முறை சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

முதலில் இந்த நிய்யத்திலுள்ள தவறுகளை கவனியுங்கள். தராவீஹ் தொழுகை முடிந்த உடன் இந்த நிய்யத் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதில் நாளை பிடிக்க என்று கூறுகிறார்கள். இஸ்லாமிய அடிப்படையில் நாளை என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தும்போது இன்ஷா அல்லாஹ் என்று கூறவேண்டும். எந்தளவிற்கு என்றால், நபி (ஸல்) அவர்களுக்குக் கூட அல்லாஹ் நபியே! நாளை ஒரு செயலை செய்வேன் என்று கூறாதீர்கள். அல்லாஹ் நாடினாலே தவிர என்று சேர்க்காமல்” (18:24) என்று நினைவுபடுத்துகிறான்.

அப்படியானால் நாளை என்று அல்லது எதிர்கால சொல்லைப் பயன்படுத்தும்போது இன்ஷா அல்லாஹ் சொல்ல வேண்டும் என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான். அதை நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். இன்ஷா அல்லாஹ் சொல்லாமல் நடந்த சில சம்வங்களின் விபரீதத்தையும் நாம் காணலாம்.

சுலைமான் நபி, தனது எல்லா மனைவி மார்களிடம் இன்று சேர்ந்து அதன் மூலம் அல்லாஹ்வின் பாதையில் போரிடும் நூறு குதிரை வீரர்களை பெற்றெடுப்பேன் என்று கூறினார்கள். ஆனால், அல்லாஹ் அப்படியான எந்தக் குழந்தையையும் கொடுக்க வில்லை. இந்த நிகழ்ச்சியைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது சுலைமான் நபி இன்ஷா அல்லாஹ் கூறியிருந்தால் அவர்கள் சொன்னது போல நடந்திருக்கும் என்றார்கள். இந்த ஹதீஸை புஹாரியில் காணலாம்.

எனவே அன்பிற்குரிய உலமாக்களே! மதிப்பிற்குரிய பெரியவர்களே தாய்மார்களே! சற்று நிதானமாகச் சிந்தித்து சரிதானா? பிழைதானா என்று ஒரு முடிவுக்கு வாருங்கள். இன்ஷா அல்லாஹ் சொல்லாமல் சொல்ல முடியுமா? பேச முடியுமா? என்பதையும் சன்று ஆழமாக சிந்தித்து செயல்படுங்கள்.

இந்த நிய்யத்தில் இரண்டாவது பிழை என்னவென்றால், நிய்யத் சொல்லிக் கொடுக்கப்படும் நேரம் இரவு சுமார் 9.30 மணி. அப்படியானால் முஸ்லிம்களுக்கு பிறை கணக்குதான் நாள் கணக்காகும். எனவே அன்று மஃரிபி லிருந்து அடுத்த மஃரிப் வரை ஒரு நாள்தான். அதாவது அதே நாளில் தான் இருக்கிறோம். அதே நாளில் தான் நோன்பு பிடிக்கிறோம். அப்படியானால் அதேநாளில் இருந்து கொண்டு எப்படி நாளை பிடிப்பேன் என்று கூறமுடியும்?

சற்று நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். இந்த நிய்யத்தின் மூன்றாவது பிழை மீண்டும் இரவின் கடைசிப் பகுதியான அந்த ஸஹர் நேரத்திலும் உணவை உட்கொண்ட பிறகு அவரவர் தனித் தனியாக சொல்லிக் கொள்வார்கள். அந்த நிய்யத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்றும் வீடுகளில் நினைவூட்டப்படும்.

அப்படியானால் சூரிய கணக்குப் படியும் தவறாகும். ஏன் என்றால் இரவு 12.00 மணியிலிருந்து மறுநாள் இரவு 12.00 மணிவரை ஒரு நாளாகும். அதிகாலை நோன்பு பிடித்த நாம் மஃரிபுடன் நோன்பை திறக்கிறோம் என்றால் அதேநாளில் இருந்து கொண்டு எப்படி நாளை பிடிப்பேன் என்று கூற முடியும்?

எனவே பிறை கணக்கான சந்திரக் கணக்கின் அடிப்படையிலும் பிழைதான். சூரிய கணக்கின் அடிப்படையிலும் பிழை தான். ஷரீஅத் படியும் பிழைதான்.

இந்த நிய்யத்தின் மற்றொரு தவறு என்ன வென்றால் ஒருவர் சொல்லிக் கொடுக்க பின்னால் உள்ளவர்கள் சொல்லும் வழமையை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தரவில்லை.

அதேபோல் இந்த நிய்யத்தின் அடுத்த பிழை என்னவென்றால் திரும்பத் திரும்ப மூன்று முறை சொல்லிக் கொடுப்பது. நபி (ஸல்) அவர்கள் எந்த அமல்களுடைய நிய்யத்தையும் இப்படி மூன்று முறை சொன்னதாகவோ சொல்லும்படியோ கூறவில்லை.

இப்படி பல கோணத்தில் இந்த நோன்பு நிய்யத் பிழை என்பதையும், இந்த நிய்யத்தை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை என்பதையும் விளங்கிக் கொள்வதோடு, நோன்பு நிய்யத்தைப் பொறுத்த வரை அல்லாஹ்வுக்காக நோன்பு பிடிக்கிறேன் என்று உள்ளத்தில் அவரவர் நினைத்துக் கொள்ள வேண்டும்.

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – ஆசிரியர், சத்தியக் குரல், இலங்கை –

Courtesy : Islamkalvi

About நிர்வாகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *