Home / எழுத்தாக்கம் / [கட்டுரை] : ஸஹர் முடிவு நேரம்

[கட்டுரை] : ஸஹர் முடிவு நேரம்

தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையாகும். அதாவது அல்லாஹ்வுடைய கட்டளை என்றால் குர்ஆன், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறை என்றால் ஹதீஸ் ஆகும். குர்ஆனும் ஹதீஸும்தான் நமது வழிகாட்டிகள் என்பதை உலக மக்கள் ஏற்று அமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

எந்த அமலாக இருப்பினும், அது நபி (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தந்ததாக இருக்க வேண்டும். நாமாக அமல்களைச் செய்யக் கூடிய நிலையை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. அந்த அடிப்படையில் ஸஹர் முடிவு என்று இன்று எல்லாப் பள்ளிகளிலும் நோன்பு கால‌ அட்டவணையிலும் போடப்பட்டுள்ளதைக் காணலாம். இது சரியா? அல்லது பிழையா? என்பதைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பஜ்ரு தொழுகைக்கான அதான் (பாங்கு) 4.30 மணிக்கு என்றால், கிட்டத்தட்ட 4.15 ஸஹர் முடிவு என்று விளம்பரப் படுத்தியுள்ளதைக் காணலாம். அதாவது பஜ்ரு நேர பாங்கிற்கு முன் பதினைந்து நிமிடம் அல்லது இருபது நிமிடம் முன்னதாகவே ஸஹர் நேரம் முடிவடைந்து விடுகிறது. அதன் பின் சாப்பிட்டாலும் குடித்தாலும் நோன்பு முறிந்துவிடும் என்று பேசக் கூடிய நிலையைக் காண்கிறோம்.

வானொலியிலும் கூட ஸஹர் நேரத்தில் அடிக்கடி இன்றைய சுப்ஹு தொழுகைக்கான அதான் சொல்லும் நேரம் இது, ஸஹர் முடிவு இது என்று சொல்லக் கூடிய நிலையை அனைவரும் கேட்கிறோம். பள்ளிவாசல் விளம்பரப் பலகையிலாக இருக்கலாம் அல்லது நோன்பு கால‌ அட்டவணையிலாக இருக்கலாம் அல்லது வானொலி விஷேட ஸஹர் நேர நிகழ்ச்சியிலாக இருக்கலாம். எல்லோரும் மார்க்கத்தை மக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் போட்டி போட்டுக் கொண்டு செயல் படுவதைக் காணலாம்.

இது வரவேற்கக் கூடிய விடயமாகும். அதே நேரம் மார்க்கம் சொல்லித் தந்துள்ள வழிமுறையை விட்டு விட்டு, நாமாக தன் இச்சையாக எதையும் முடிவு செய்யும் அதிகாரம் நமக்குக் கிடையாது. தொடர்ந்து படியுங்கள்.

நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்விற்குத் தெரியும். எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று, உங்களைப் பிழை பொறுத்தான். இப்போது முதல் அவர்களுடன் கூடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடுங்கள். வைகறை எனும் கயிறு (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை உண்ணுங்கள், பருகுங்கள். பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள். (2:187)

இந்த வசனத்தில் முதலாவதாக நோன்பு கால இரவு நேரங்களில் தனது மனைவியுடன் சேரலாம் என்ற சட்டத்தையும், இரண்டாவதாக ஸஹர் முடிவைப் பற்றி அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அதில் கருப்புக் கயிறிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை உண்ணலாம், பருகலாம் என்றால், கருப்புக் கயிறு என்பது இரவு வெள்ளைக் கயிறு என்பது சுப்ஹு நேர வெளிச்சம் என்பதை இந்த வசனம் சம்பந்தமான ஹதீஸ்கள் தெளிவுபடுத்து வதை அவதானிக்கலாம்.

இந்த வசனம் இறங்கியவுடன் சில நபித் தோழர்கள் கருப்புக் கயிறை தனது தலையணைக்கு கீழாக வைத்து காலையில் மாறுகிறதா? இல்லையா என்று பார்த்தனர். இன்னும் சில நபித்தோழர்கள் தனது கை கால்களில் கருப்புக் கயிறை கட்டிக்கொண்டு காலையை எதிர்பார்த்து, இறுதியில் இந்த வசனத்தின் விளக்கத்தை நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டபோது, நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

கறுப்பு கயிறிலிருந்து விடியலின் வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும் வரை நீங்கள் உண்ணுங்கள், பருகுங்கள் (2:187) அருளப்பட்டபோது, நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! நான் வெள்ளை நிறத்தில் ஒரு கயிறு, கறுப்பு நிறத்தில் மற்றொரு கயிறு என இரு கயிறுகளை என் தலையணையின் கீழ் வைத்து பகலில் இருந்து இரவை பிரித்து அறிய முயன்றேன். ஆயினும், என்னால் பிரித்து அறிய முடியவில்லை என்று சொன்னேன். வெள்ளைக் கயிறு, கறுப்புக் கயிறு என்பன அவற்றின் உண்மையான பொருளில் கூறப்படவில்லை. மாறாக இது இரவின் கருமையும், பகலின் வெண்மையுமே ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-1916, முஸ்லிம்-1988)

அதேபோல மற்றொரு ஹதீஸ்,

ஸஹாபாக்கள் இரு கால்களிலும் கறுப்பு வெள்ளை கயிறுகளை கட்டிக் கொண்டு விளக்கம் கேட்ட ஹதீஸை புகாரி-1917, முஸ்லிம்-1990 இல் காணலாம்.

மேற்சென்ற குர்ஆன் வசனத்திற்கும் ஹதீஸ்களுக்கும் விளக்கமாக பின்வரும் ஹதீஸை கவனியுங்கள்.

பிலால் (ரழி) அவர்கள் (பின்) இரவில் தொழுவதை அறிவிப்புச் செய்வார். எனவே (பஜ்ர் தொழுகைக்காக) இப்னு உம்மி மக்தூம் செய்யும் தொழுகை அறிவிப்பை நீங்கள் கேட்கும் வரை உண்ணுங்கள், பருகுங்கள். (முஸ்லிம்-1991)

இதுபோல பல ஹதீஸ்களை புகாரியிலும் முஸ்லிமிலும் ஏனைய ஹதீஸ் கிரந்தங்களிலும் பார்க்கலாம். பிலால் (ரழி) தஹஜ்ஜுத்துக்கும் இப்னு உம்மி மக்தூம் (ரழி) சுப்ஹுக்கும் பாங்கு சொல்வார்கள். ஸஹர் முடிவை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் நமக்கு ஆழமாக சொல்லித் தருகிறார்கள்.

சுப்ஹ் பாங்கு சொல்ல ஆரம்பமாவதே ஸஹர் முடிவாகும். உதாரணத்திற்கு ரமழான் கால சுப்ஹு பாங்கு 4.30 என்றால், சரியாக 4.29 உடன் ஸஹர் முடிவடைந்து 4.30 சுப்ஹு அதான் ஆரம்பமாகிறது. அதன் பின் ஸஹர் உணவு உண்ண முடியாது. அது இல்லாமல் ரமழான் கால சுப்ஹு பாங்கு நேரம் 4.30 மணி என்றால் 4.15க்கே ஸஹர் முடிவடைந்து விட்டது என்றால் பொறுப்புதாரிகள் அல்லாஹ்வைப் பயந்துகொள்ள வேண்டும்.

மார்க்கத்தில் தெளிவாகக் கூறப்பட்ட ஒன்றுக்கு மாற்றமாக நமது செயல்பாடு இருக்கும் என்றால், அவர்களை விட இறை வெறுப்புக்குரியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

இந்த ஸஹர் முடிவின் அடிப்படையில் ஒருவர் 4.15க்கு எழும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். இவர் இந்த நோன்பு கால‌ அட்டவணையில் உள்ள அல்லது வானொலி ஸஹர் முடிவை நம்பி அல்லது பள்ளிவாசல் விளம்பர பலகையில் உள்ள ஸஹர் முடிவை நம்பி ஸஹர் செய்யவில்லையானால் இதற்கு யார் பொறுப்பு?

பொறுப்புதாரிகளே! சிந்தியுங்கள். பள்ளி நிர்வாகிகளே சிந்தியுங்கள்! உலமாக்களே சிந்தியுங்கள்! மார்க்கத்தில் உள்ளதை சரியாகக் கூறுவோம். மார்க்கத்தில் இல்லாததை விட்டு விடுவோம். இல்லாத ஒன்றை இருக்கிறது என்றோ, இருக்கிற ஒன்றை இல்லை என்று கூறி, நாம் ஏன் பாவத்திற்கு ஆளாக வேண்டும்?

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொன்ன ஒன்றை நாம் நடைமுறைப் படுத்துவதா? அல்லது நாம் பரம்பரை பரம்பரையாக செய்து வருவதை எப்படி விடுவது என்று அல்லாஹ் மற்றும் ரஸூலுக்கு மாற்றமாக நடப்பதா? என்பதை எல்லா பொறுப்புதாரிகளும் சற்று ஆழமாக சிந்தியுங்கள்.

அல்லாஹ் குர்ஆனில்,
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்த பின்னர், அதற்கு மாற்றம் செய்வதற்கு முஃமினான ஆணுக்கும் அதிகாரம் கிடையாது. முஃமினான பெண்ணுக்கும் அதிகாரம் கிடையாது. எவர்கள் மீறி செயல்படுகிறார்களோ அவர்கள் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள். (33:36)

இந்த வசனத்தின்படி அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் தீர்மானித்த ஒன்றை மாற்றியமைக்க எவருக்கும் உரிமை கிடையாது. அப்படி மீறுவோர் வழிகேடர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதன்படி ஸஹர் நேர முடிவை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் தீர்மானித்த பின் நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை விளங்கி நடந்து கொள்ள வேண்டும்.

மார்க்கத்தில் எந்தக் கட்டாயமும் கிடை யாது. எவர் வந்து சொன்னாலும் நாங்கள் கேட்க மாட்டோம் என்றாலும் நமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள் என்ற அடிப்படையில் தரப்பட்ட ஆதாரங்கள் எங்கிருந்து தரப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள். விரும்பினால் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது தெளிவு கிடைத்த பின்னரும் முரண்டு பிடித்தால் நீங்களும் அல்லாஹ்வும் பார்த்துக் கொள்ளுங்கள்.

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – ஆசிரியர், சத்தியக் குரல், இலங்கை –

Courtesy : Islamkalvi

About நிர்வாகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *