Breaking News
Home / எழுத்தாக்கம் / [கட்டுரை] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 13

[கட்டுரை] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 13

அன்றைய சூஃபித்துவமும் இன்றைய தப்லீக் ஜமாஅத்தும்

சூஃபித்துவம் பற்றிய பகுதியில் அவர்களது அடிப்படைக் கொள்கைகள் பற்றி ஆராயும்போது அவர்களது சிந்தனைகள், கொள்கைகள் பற்றியெல்லாம் விரிவாக அலசவேண்டிய அவசியமில்லாத வகையில் ” லாயிலாஹ இல்லல்லாஹ்” எனும் கலிமாவுக்கு அவர்கள் கொடுக்கும் அர்த்தத்தை வைத்தே அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்று முடிவு செய்துவிட முடியும்.

இப்பிரபஞ்சத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறெதுவுமே இல்லை என்பதே அவர்கள் ” லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவுக்குக் கொடுக்கும் அர்த்தமாக உள்ளது என அறிந்தோம். அதே சூஃபித்துவத்திலே வாழையடி வாழையாக வந்தவர்களே தப்லீக் ஜமாஅத்தின் பூர்வீக காலம் தொட்டு இன்று வரை பொறுப்பு வகிக்கும் தப்லீக்கின் முக்கியஸ்தர்கள் என்பதுதான் ஆச்சரியமான உண்மை. இதனை ஜீரணிப்பது என்பது இதைப்படிக்கும் நமக்கு மிகவும் கடினமாக இருக்கிறதல்லவா ? ஆனால் அதுதான் உண்மை. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தப்லீகின் உயர் பொறுப்பில் இருக்கும் மவ்லானாக்கள், பெரியார்கள், அனைவரிடத்திலும் இதே சூஃபித்துவக் கொள்கைதான் இருந்தது, இன்றளவும் இருக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பதே இப்பகுதியின் முக்கிய நோக்கமாகும்.

ஆனால், மூன்று நாள் நாற்பது நாள், என்றெல்லாம் (வக்து) நாள்களைக் கொடுத்து வெளிக்கிழம்பிச் செல்லும் அப்பாவி மக்களுக்கு இது பற்றியெல்லாம் எதுவும் தெரிவதில்லை. அதுபற்றி அவர்கள் அலட்டிக்கொள்வதும் இல்லை. சூஃபித்துவ வாதிகள் எப்படி தம்மிடம் வரும் முரீதீன்களுக்கும், பக்தர்களுக்கும் தம்மீது முழு நம்பிக்கை வரும்வரை தமது இஸ்லாத்திற்கெதிரான விஷக்கருத்துக்கள் எதையும் வெளியிடுவதில்லையோ, அவ்வாறே இவர்களும் சாதாரண ஆரம்ப நிலையிலுள்ள தப்லீக் பக்தர்களுக்கு இதுபற்றியெல்லாம் எதுவும் சொல்வதில்லை.

ஆரம்பத்தில் தப்லீக்கில் செல்பவர்களுக்கு, தப்லீக்கின் அடிப்படை விதிகளான கலிமா, தொழுகை, இல்முத்திக்ரு, இக்ராம், இஹ்லாஸ், தப்லீக், ஆகியவற்றைப்பற்றி மாத்திரமே போதிக்கப்படும். தப்லீக் அமைப்பின்மீது மக்களுக்கு மரியாதையும், நம்பிக்கையும் ஏற்பட வேண்டும் என்பதற்காக செய்யப்படும் ஆரம்ப முயற்சிகளே இவை. இவ்வாறாக பல வருடங்கள் ஒருவர் பயிற்றுவிக்கப்பட்டதன் பின்பு, ஒருவருட ஜமாஅத், இரண்டு வருட ஜமாஅத், எனும் அளவிற்கு வக்து கொடுத்து, பயணித்து, டில்லி மர்க்கஸ், டிரைவின் மர்கஸுக்கெல்லாம் சென்று வந்து தப்லீக்கின் மவ்லானாக்கள், பெரியார்கள்மீது அசைக்க முடியாத பிடிப்பும், நம்பிக்கையும் ஏற்பட்டதை உறுதி செய்துகொண்ட பின்னரே, சூஃபித்துவ கருத்துக்கள் படிப்படியாக போதிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். இவற்றையெல்லாம் வெறும் கற்பனையாகவோ, வாய்வழிச் செய்தியாகவோ நாம் கூறவில்லை. ஆதாரப்பூர்வமான தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்துக்காண்பிப்போம் இன்ஷா அல்லாஹ்.

இவ்வாறாக பல ஆண்டுகள் தப்லீக்கில் கழித்தவர்களுக்கு, ” குர்ஆன் – ஹதீஸின் செய்திகள் எப்படி இருந்தாலும், அவற்றைப் பின்பற்றுவதைவிட, தனது மர்க்கஸ் மவ்லானா, டில்லி பெரியார்கள் சொல்வது மட்டுமே சரி என பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு மூளைச் சலவை செய்யப்படுகிறது.

வெளிப்பார்வைக்கு சூஃபித்துவ தரீக்காவின் தப்லீக்வாதிகள் ஆன்மீகத்தின் பக்கமும், தொழுகையின் பக்கமும் மக்களை அழைக்கிறார்கள் என பாமர முஸ்லிம்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டாலும், இறுதியில் சந்தர்ப்பம் கிடைக்கும்போது ” இஸ்லத்தின் அடிப்படைகளையே தகர்க்கக் கூடிய ” சூஃபித்துவக் கருத்துக்களை பரப்புகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான் உண்மை.

பொதுவாக நம்மில் அதிகமானவர்கள் ஏன் தப்லீக்கை ஆதரிக்கின்றார்கள் ? வெளிக்கிழம்பிச் செல்ல ஏன் விரும்புகிறார்கள் என ஆய்வுசெய்து பார்த்தால், குழப்பங்களும், நெருக்கடிகளும் நிறைந்த இன்றைய வாழ்க்கை சூழ் நிலையிலிருந்து விடுபட்டு, இஸ்லாமிய மார்க்கத்தின் வழிபாடுகளின் தன்னை ஈடுபத்துவதன் மூலம், மன நிம்மதியையும், இறைவனின் பொருத்தத்தையும் அடையலாம் என்ற ஆர்வத்தின் காரணமாக, தனக்கு வழிகாட்டக் கூடிய ஒருவரை தேடுகின்றனர். இவ்வாறு தேடக்கூடியவர்களை “தப்லீக் ஜமாஅத் மார்க்கத்திற்காக நேரத்தையும், பொருளையும், தியாகம் செய்து, இறைவழியில் மக்களை அழைக்கக் கூடிய பணியைச் செய்கிறது ” என்ற மேலோட்டமான விளம்பரம் கவர்ந்து விடுகிறது.

இவ்வாறு கவரப்பட்டவர்கள், தப்லீக் வாதிகளின் தொடர் முயற்சியாலும், சந்திப்பாலும் முதலில் மூன்று நாள்கள் மட்டும் வெளிக்கிழம்பிச் செல்கின்றனர். இவ்வாறு செல்லக்கூடிய மூன்று நாள்களில், குடும்ப சுமைகளும்-தொந்தரவுகளும் இல்லாமல், மனதில் உள்ள கவலை-கஷ்டங்களை மறந்து, சுதந்திரமாக நேரத்திற்கு தொழுகை-திக்ர்-பயான் என கழித்து, வேளாவேளைக்கு நன்றாக சாப்பிட்டு சந்தோசமாக வாழ்வது மிகவும் மனதிற்கு அமைதியை கொடுக்கிறது. இதுமட்டுமின்ற, செல்லும் இடமெல்லாம் நல்ல வரவேற்பும், மரியாதையும் கிடைக்கிறது. எவ்வித பிரச்சனைக்குரிய விசயங்களிலும் தலையிட வேண்டிய அவசியமில்லை. வேலைக்குச் செல்ல வேண்டும், சம்பாதிக்க வேண்டும், என்ற நிர்பந்தம் ஏதும் இல்லை. இவ்வாறான புதிய சூழ்நிலையில் பாமரர்களின் உள்ளங்கள் இதில் லயித்துவிடுகின்றன.

இதனால் தப்லீக்கில் இணையும் பாமர மக்கள் ” இவ்வாறு தப்லீக்கில் உள்ள மார்க்க முரண்பாடுகளையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது மட்டுமின்றை, இதுதான் மார்க்கம் என்றே விளங்கிக் கொள்கின்றனர். மேலும் தப்லீக்கில் இணையும் பெரும்பாலானவர்கள் மார்க்கத்தைப் பற்றிய எவ்வித அடிப்படையும் அறியாதவர்கள் என்பதாலும், தப்லீக் சேவையை குறைகாண்பவர்கள், தீனிலிருந்தே தூரமாக்கப்படுவார்கள் என்பன போன்ற போலி பயமுறுத்தலுக்கும் கட்டுப்பட்டு, எதைப்பற்றியும் ஆராய்வதற்கே அச்சம் கொண்டவர்களாக, ” தலைவன் எவ்வழியோ, தானும் அவ்வழியே ” என தொடர்ந்து செல்கின்றனர். ஏதேனும் ஒன்று மனதுக்கு உறுத்தலாக தோன்றினாலும், அதைப்பற்றி கண்டுகொள்ளாமலும், கேட்டால் தன்னை ஜமாஅத்தை விட்டு ஒதுக்கி விடுவார்கள் என்பதாலும், இதில் புதிதாக செல்பவர்கள் சிந்தனையற்றவர்களாகவே இருக்கின்றனர்.

இதனால்தான் பாமர மக்களுக்கு, தப்லீக் அமைப்பு மிகச்சிறந்த மார்க்க வழிகாட்டுதல் போன்ற போலியான பிம்பம் அனைத்து மக்களிடமும் வியாபித்துக் காணப்படுகிறது.

அரபுகளும் தப்லீகிற்கு ஆதரவளிப்பது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அரபுகளும் மனிதர்களே ! மலக்குகள் அல்ல ! அரபல்லாதவர்களை விட மார்க்க அறிவில் மிகவும் மட்டமான நிலையிலுள்ள அரபுகளும் நிறையவே இருக்கிறார்கள். படிப்பறிவில்லாத, குறைந்தபட்சம் ஃபாத்திஹா சூராவைக் கூட ஓதத்தெரியாத அரபுகளும் நிறையவே இருக்கிறார்கள். அரபுகள் தப்லீகில் ஈடுபடுவதால், எதுவும் மார்க்க நெறியாகவோ, மார்க்கத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகவோ ஆகிவிடாது. மார்க்க அங்கீகாரம் என்பது குர்ஆனும் – சுன்னாவும் தான். வேறு எதையும் நாம் அளவுகோலாக எடுத்துக்கொள்ள முடியாது.

இன்று தப்லீகில் ஈடுபாடு கொண்டுள்ள எம் சகோதரர்களுக்கு இக்கருத்துக்கள் ஆச்சரியத்தையும், ஆத்திரத்தையும் தரலாம். இதனையெல்லாம் ஏற்றுக்கொள்ள மனது மறுக்கலாம். ஆனால் உண்மையை அறிய விரும்பும் சகோதரர்கள் நடுநிலையாக இதில் கூறப்படும் கருத்துக்களை தப்லீக் அமைப்புடன் ஒப்பிட்டு ஆராயும்போது இன்ஷா அல்லாஹ் உண்மைகள் விளங்கும். உண்மைக்கு உறக்கம் கிடையாது. ஆனால் உண்மையை விரும்பாதவர்க்கு அது எளிதில் புலப்படாது. அதற்காகவே தப்லீக் ஜமாஅத்தின் வெளிப்படையான, இரகசியமான அனைத்து நடவடிக்கைகளும் குர் ஆன்-ஹதீஸுக்கு எந்த விதத்தில் முரண்படுகின்றன என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துக் காட்டுகிறேன்.

இன்னும் சிலர், தப்லீகில் குறைபாடு இருந்தால், இருந்துவிட்டுப் போகட்டும், எதில்தான் குறைபாடு இல்லை, குறைபாடுகளை விட்டு விட்டு நிறைய நல்லவைகள் இருக்கின்றன, அவற்றை எடுத்து நடப்போமே ” என்று நடு நிலைவாதம் பேசுகின்றனர். இத்தகைய வாதமும் அர்த்தமற்றதே !. உலகிலுள்ள அனைத்து விசயங்களிலும், சமூகத்திற்கு நன்மை-தீமை இரண்டுமே இருக்கின்றது. உதாரணத்திற்கு மதுபானத்தில்கூட நன்மையும் இருப்பதாக அல்குர் ஆன் சொல்கிறது.

(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” [ சூரத்துல் பகரா : 219 ]

இக்குர் ஆன் வசனத்தின்படி, நன்மை இருக்கிறதென்பதால், ஒரு விசயத்தை நல்லதென எடுத்துக்கொள்ள முடியாது. அதனால் ஏற்படும் விபரீதம்-தீமை எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் தீர ஆராய்ந்தே முடிவெடுக்க வேன்டும். அந்த வகையில் நான் சூஃபிகளிடம் இருப்பதாகக் கூறிய இஸ்லாத்தை தகர்த்தெறியும் ஷிர்க்கான – குஃப்ரான விசயங்கள் அனைத்துமே, தப்லீக் ஜமாஅத்தின் தலைமைகளில், ட்ரைவின் மர்கஸ் மவ்லானாக்களிடமும், டில்லிப் பெரியார்களிடமும் இருக்கின்றன. அதனையும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துக்காட்டுவோம்.

அதேபோன்று ஆறு நம்பருடைய வாழ்க்கை, அனைத்து மக்களிடமும் வரவேண்டும் என்பதில் ஒரே குறியாக இருக்கும் இப்பெரியார்கள் அந்த ஆறு நம்பர்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு, ஏனைய மார்க்க விசயங்களை எவ்வளவு சாதுர்யமாக புறந்தள்ளுகிறார்கள் என்பதையும், ஆறு நம்பரிலுள்ள விசயங்கள் வெளிப்படையில் நல்லவையாக தோன்றினாலும், அதற்கு அவர்கள் அளிக்கும் விளக்கம் எந்தளவு குறுகிய வட்டத்துக்குள் உள்ளது என்பதையும் முடிந்தளவு ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தவுள்ளேன். அதுமட்டுமின்றி சூஃபிகளின் கொள்கைகளை அப்படியே அச்சொட்டாக பின்பற்றும் இவர்களிடம் இபாதத்களாக கருதப்பட்டு வரும் ஏராளமான மார்க்க விரோத விசயங்களையும் முடிந்தளவு சுருக்கமாக தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தப்லீக் சகோதரர்கள் அனைவரினதும் ஒருமித்த வாதம் யாதெனில், ” சில வழிகெட்ட கூட்டத்தினர், தப்லீக் எனும் இந்த நபிமார்கள் செய்துவந்த மகத்தான வேலையைப் பற்றி இல்லாதது, பொல்லாததையெல்லாம் சொல்லுவார்கள், அவையெல்லாம் அவர்களின் பொறாமையின் வெளிப்பாடாகும். தூய்மையான இப்பணியின் காரணமாக எத்தனை இலட்சம் பேர் நேர்வழி பெற்றிருக்கிறார்கள். கொலை-கொள்ளை-போதை-அடாவடித்தனம்-வட்டி என்ற பெரும்பாவங்களில் இருந்தோரெல்லாம், இன்று திருந்தி தாடியும்-தொப்பியும்-மிஸ்வாக்குமாக காட்சியளிப்பதற்கு இப்பணிதானே காரணம், பூட்டிக்கிடந்த பல பள்ளிகள் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளதே, கலிமா கூட சொல்லத் தெரியாத பலபேர் இன்று இஸ்லாமிய வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே. இவையெல்லாம் தப்லீக் எனும் இப்பணி அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பணி என்பதற்கு போதுமானதாக இல்லையா ? ” என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே செல்வார்கள்.

உண்மையில் இவையெல்லாம் நல்ல மாற்றங்கள் என்பதிலும், தப்லீக் இயக்கத்தின் முயற்சியே இதற்கு முக்கிய பங்கு என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த நன்மைகளையெல்லாம் பாழாக்கக் கூடிய, இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரான நச்சுக் கருத்துள்ள கொள்கைகளை ஒரு பக்கமும், இஸ்லாத்தை குறுகிய வட்டத்துக்குள்ளாக்கி, இஸ்லாம் கூறிய பலவற்றை கத்தரித்து விட்டு, இஸ்லாம் கூறாத பல விசயங்களை இஸ்லாமிய சாயம்பூசி விளம்பரப்படுத்துகின்ற போக்கும் இவர்களிடம் அதிகமாக காணப்படுவதனால்தான் இதனை விமர்சிக்கும் நிலை ஏற்படுகின்றது. இதைப்பற்றி இன்னும் விபரமாக தொடர்ந்து சுட்டிக்காட்ட உள்ளோம்.

அதுபோலவே, ஒரு இயக்கத்திற்கு கிடைக்கும் தீவிர வளர்ச்சியும், பெரும்பான்மை மக்களின் ஆதரவும், சமூக வரவேற்பும், அது அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயக்கம் என்பதற்கு ஒருபோது சான்றாக ஆகாது. பத்ர் யுத்தத்தில் நபிகளாருடன் 313 பேரும், காஃபிர்கள் 1000-க்கு மேற்பட்டவர்களும், மூஸா நபியுடன் ஒரு சிறு கூட்டமும், ஃபிர் அவ்னுடன் ஒரு பெரிய பட்டாளமும் இருந்தது. பெரும்பான்மையை வைத்து சொல்வதென்றால், குறைஷிகளும், ஃபிர் அவ்னும் நேர்வழியில், சத்தியத்தில் இருந்தார்கள் என சொல்ல முடியுமா ? இன்றும் உலக் மக்கள் தொகையில், முஸ்லிம்களின் எண்ணிக்கையைவிட கிருஸ்தவர்களே அதிகம். எனவே, இஸ்லாத்தை விட கிருஸ்தவ மதமே உண்மையானது என சொல்ல முடியுமா ? மார்க்கம் என்பது பெரும்பான்மையை வைத்து முடிவு செய்யப்படுவத்ல்ல. அல்லாஹ்வின் அருளைப்பெற்ற, நேரான வழி எது என்பதைத்தான் ஒரு முஸ்லிம் பார்க்க வேண்டும். இதை தப்லீக் சகோதரர்கள் சிந்திக்க வேண்டாமா ?

எனக்கும் தப்லீக் ஜமாஅத்திற்கும் ஒரு காலத்தில் மிக நெருங்கிய தொடர்பு இருந்தது. அப்போது தப்லீக் பெரியார்கள் மார்க்க விரோத கருத்துக்களை கூறும்போது நானும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் நிலையில்தான் இருந்தேன். தப்லீக்கின் மீதிருந்து அபார பக்தியும், அபிமானமும் அதிலுள்ள குறைகளைக் கண்டுகொள்ளக் கூடிய மன நிலையை என்னில் இல்லாமல் ஆக்கிவிட்டன என்றே கூற வேண்டும். இதுபோன்ற மன நிலையில்தான் இதை வாசிக்கும் தப்லீக் அபிமானிகளும் இருப்பார்கள் என்றே நம்புகிறேன். இருப்பினும் உண்மை கசந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நபிவழிக்கு மாற்றமாக யாரின் செயல் இருப்பினும், அதனை புறக்கணித்தே ஆக வேண்டியுள்ளது. அது ஒரு இஸ்லாமியனின் தார்மீகக் கடமையாகும். எனவே குர்ஆன்-ஹதீஸின் ஆதாரத்துடன் தப்லீக் இயக்கத்தின் தவறுகள் நிரூபிக்கப்பட்டால், அதனை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வேன் என்ற உறுதியுடன் இதனை தொடர்ந்து வாசியுங்கள்.

இவை தவிர தனிப்பட்ட வகையில் எனக்கு தப்லீக்குடனோ, தப்லீக் சகோதரர்களுடனோ, எவ்வித காழ்ப்புணர்ச்சியோ, கசப்புணர்வோ கிடையாது. இன்று வரைக்கும் நான் தப்லீக் சகோதரர்களுடன் சகோதர வாஞ்சையுடன் பழகி வருகிறேன். ஒரு முஸ்லிம் தான் விரும்புவதை, தனது சகோதரனுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புவது நபிவழி என்ற அடிப்படையில், நான் இங்கு கூறும் விசயங்களை தப்லீக் சகோதரர்கள் படித்துவிட்டு, அதைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்பதே எனது அவா ..

அல்லாஹ்வின் மீது சத்தியமாக சொல்கிறேன், இன்றும்கூட குர் ஆனுக்கும், நபிவழிக்கும் பல கோணங்களில் முரண்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காகவே நான் தப்லீக்கை விட்டு ஒதுங்கியுள்ளேன். டில்லி மவ்லானாக்கள், பெரியார்கள், டிரைவின் மர்கஸ்களின் தொடர்பை கத்தரித்துவிட்டு, குர் ஆன் – ஹதீஸ் அடிப்படையில் செயல்படுவது என்ற நிபந்தனைக்கு கார்க்கூன்கள் சம்மதித்தால், இன்றிலிருந்தே நான் என் ஆயுள் முழுவதும் தப்லீக்கில் இணைந்து செயல்பட தயாராக உள்ளேன் என்பதை அல்லாஹ்வின்மீது சத்தியமிட்டுக் கூறுகிறேன். நான் மட்டுமல்ல குர் ஆன் – ஹதீஸ் அடிப்படையில் நடக்கும் அனைத்து சகோதரர்களும் இதற்கு சம்மதிப்பார்கள் என்றே நம்புகிறேன்.

நாம் அனைவரும் நிச்சயம் ஒரு நால் மரணிக்கக்கூடியவர்களே. அதன்பின் இறைவன் எழுப்பி கேள்விகள் கேட்கும்போது நபிவழியில் வாழ்ந்தவரால்தான் பதில் கூறி, வெற்றிபெற முடியும். நபியவர்களை நாம் மறுமையில் கவ்தர் எனும் ஆற்றின் பக்கம் சந்திக்க இருக்கின்றோம். அவ்வேளை நபிவழி நடந்தவருக்கே நீர் புகட்டப்படும். அதற்கு மாற்றமாக நடந்தவர்களை நபியவர்களே மலக்குகளிடம் கூறி “இவர்களை துரத்துங்கள், துரத்துங்கள் ” என்று விரட்டுவார்கள் என தெளிவான, ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளது. நமக்கு இந்த நிலை ஏற்பட்டால் நம் கதி என்ன ? எனும் சிந்தனையுடன் தொடர்ந்து வாசியுங்கள்.

அல்லாஹ்வின் நல்லடியார்களாக நாம் அனைவருமே வாழ்ந்து மரணிக்க வேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

தொடரும் …

About முஹம்மது ஜலீல் மதனீ

Check Also

[கட்டுரை] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 12

ஸூஃபித்துவமும் – தப்லீக் ஜமாஅத்தும் … ஸூஃபித்துவம் பற்றிய பகுதியில் அவர்களது அடிப்படைக் கொள்கைகள் பற்றி ஆராயும் போது அவர்களது சிந்தனைகள், ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *