Breaking News
Home / கட்டுரை / [ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 14

[ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 14

தப்லீக் ஜமாஅத்தின் தோற்றமும் கொள்கையும்

இந்தியாவின் வடபகுதியிலுள்ள தேவ்பந்த் எனும் ஊரிலுள்ள மேவாத் எனும் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மத் இல்யாஸ் காந்திஹ்லவி தேவ்பந்தி (ரஹ்) என்பவரால் துவக்கப்பட்டு, மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பே தப்லீக் ஜமாஅத் எனும் அமைப்பாகும். இந்த அமைப்பின் தலைமையகம், இன்றைய இந்தியாவின் தலைநகரான டில்லியில் அமைந்துள்ளது. தேவ்பந்த் என்பது டில்லியில் “ஹனஃபி” மத்ஹபை போதிக்கும் மதரஸாக்களில் மிகப் பழமையானதும், மிகப் பெரியதுமாகும். ” மதரஸத்துல் தாருல் உலூம் ” என்பது இதன் பெயராகும். முஹம்மது காஸிம் நானூத்துவியின் மேற்பார்வையில்: நபி (ஸல்) அவர்களே இதனை ஆரம்பித்ததாகவும், இந்த மதரஸாவுக்கு அடிக்கடி முஹம்மது நபியவர்கள் தமது கலீஃபா தோழர்களுடன் வருகை தந்து மதரஸாவின் வரவு-செலவு கணக்குகளைச் சரிபார்ப்பதாகவும் தப்லீக் முக்கியஸ்தர்கள் வாதிடுகின்றனர். (ஆதாரம் : தோ ரூஹானிய்யத் அரபு மொழிபெயர்ப்பு ‍ பக்கம் 434 )

இந்த மதரஸாவில் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை விளக்கம் (அகீதா) இஸ்லாத்துக்குப் பல்வேறு கோணங்களில் முரண்படும் “மாத்ரூதிய்யா” பிரிவினரின் கொள்கையின்படி போதிக்கப்படுகின்றது. மார்க்கச் சட்டங்கள் “ஹனஃபி” மத்ஹபின்படி கற்பிக்கப்படுகின்றது. மாத்ரூதிய்யா பிரிவும், ஹனஃபி மத்ஹபும் நபிவழிக்கு மாற்றமான ஆயிரக்கணக்கான சட்டங்களைப் போதிக்கின்றவை என்பது தனித் தலைப்பின் கீழ் கொண்டு வரலாம். அதைப்பற்றி குறிப்பிட இவ்விடம் போதாது. இங்கு நாம் சிந்திக்க வேண்டியது யாதெனில், அல்லாஹ் தனது இறைமறையில் கூறிய கொள்கைக்கு மாற்றமான நம்பிக்கைகளும், நபியவர்களின் ஹதீஸுக்கு (சொல்-செயல்-அங்கீகாரத்திற்கு) மாற்றமான சட்டங்களும் போதிக்கப்படும் மதரஸாவை நபியவர்களே தொடங்கி வைத்தார்கள் என்பது எப்படி சாத்தியமாகும். இது கேளிக்கையான விசயமல்லவா ? இப்படி, மார்க்கத்திற்கு முரணாக கற்பிக்கப்படும் மதரஸாவின் கணக்குகளை நபியவர்களே தனது கலீஃபாக்களுடன் நேரில் வந்து சர்பார்க்கிறார்கள் எனும் செய்தி சாத்தியமானதா ? நம்ப முடிகிறதா ?

இவை ஒருபுறமிருக்க இந்த தப்லீக் பெரியார்கள் அனைவருமே ஜிஸ்திய்யா தரீக்காவின் ஷைஹுமார்கள் என்பதும், இந்நிறுவனத்தின் தர்மகர்த்தாக்கள் என்பதும் ஆச்சரியமான விசயம். இந்த ஜிஸ்திய்யா தரீக்காவைச் சார்ந்தவர்கள், “ஹாஜா முஈனுத்தீன் ஜிஸ்தி” அவர்களை தமது ஆத்மீக வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

இவர்களது வெளியீடான “ஜிஸ்திய்யா தரீக்காவின் ஷைஹுமார்களின் வரலாறு” எனும் பெயரிலுள்ள நூலில், இவர்களது தரீக்காவின் அனைத்து ஷைஹு மார்களின் வாழ்க்கைத் தொகுப்பு உள்ளடக்கமாக உள்ளது. இதில் முதலாவது இடத்தில் நபி (ஸல்) அவர்களும், அதன் தொடர்ச்சியாக நான்கு கலீஃபாக்களையும் இடம்பெறச் செய்து, நபியவர்களே ஜிஸ்திய்யா தரீக்காவை துவங்கி, தலைமையேற்று நடத்தியது போலவும், தொடர்ச்சியாக கலீஃபாக்களின் வழியாகவும் மொத்த இஸ்லாமிய வரலாறே ஜிஸ்திய்யா தரீக்காவிலிருந்துதான் தோன்றியது என்பதுபோன்ற‌ நச்சுக்கருத்தை பாமர மக்களுக்கு போதிப்பதற்காக, ஒரு வழிகேடான மாயையை தோற்றுவித்து, நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, நபியவர்கள், அவர்களது மரணத்திற்குப் பிறகான‌ கப்ருடைய வாழ்க்கையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும், மரணித்தவர்கள் நபியாக இருந்தாலும், யாராக இருந்தாலும், மறுமை நாளில் எழுப்பப்படும்வரை மண்ணறையிலேயே இருப்பார்கள் என்பது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றாகும்.

மரணித்தவர்கள் மண்ணறையில் தங்களது கேள்வி கணக்கிற்குப்பிறகு, தாங்கள் சொர்க்கவாசிகள் என அறிந்து தங்களுக்கு கிடைக்கும் இன்பங்களையெல்லாம் கண்ணுற்றபிறகு, அவர்கள் உலகிற்கு வரவே விரும்ப மாட்டார்கள். உயிர்த்தியாகம் செய்த ஷஹீதாக இரூப்பவர்கள் மட்டும் மீண்டும் பல‌முறை தாங்கள் உலகிற்கு வந்து அல்லாஹ்வுக்காக போர் செய்து ஷஹீதாக வேண்டுமென விரும்புவார்கள் என்பது நபி மொழி

2795. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விடம் நற்பலன் பெறுபவராக இறந்து போகிற எந்த (நல்ல) அடியாரும் இந்த உலகமும் அதிலுள்ளவை அனைத்தும் அவருக்குக் கிடைக்கும் என்றிருந்தாலும் கூட உலகிற்குத் திரும்பி வர விரும்ப மாட்டார்; இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவரைத் தவிர ஏனெனில், உயிர்த்தியாகத்தின் சிறப்பை (மறுமையில்) அவர் காண்கிறார். எனவே, இந்த உலகிற்கு மீண்டும் வந்து மறுபடியும் ஒருமுறை (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்படுவதை அவர் விரும்புவார். (ஆதாரம் : புஹாரி )

இந்த நபிமொழிக்கு மாற்றமாக மரணத்திற்குப் பிறகும், ஒருவர் உலகிற்கு வந்து, மீண்டும் பல்வேறு செயல்களைச் செய்ய முடியும் என்பது வழிகெட்ட சூஃபிகள் கூறும் மாற்றுமதக் கொள்கையினையே இவர்களும் நம்பிக்கைகொண்டு, பின்பற்றுகின்றனர்.

இதனடிப்படையிலேயே நபியவர்கள் தேவ்பந்த் மதரஸாவின் கணக்கு வழக்குகளை சரிபார்க்க தனது தோழர்களுடன் அடிக்கடி வருவதாக இவர்கள் இட்டுக்கட்டிய பொய்யான செய்திகளை பரப்புகின்றனர். இத்தகைய தப்லீக் ஜமாஅத்  என்பது இஸ்லாத்திற்கு எதிரான சூஃபித்துவம் பிரசவித்த குழந்தைதான் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும். இது ஒன்று மாத்திரமே போதுமானது.

தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர் இல்யாஸ் மெளலானா (ரஹ்) அவர்களைப் பற்றிச் சொல்வதானால், இவர் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவராவார். துவக்கம் முதலே தன்னை சூஃபித்துவ பாதையில் ஈடுபடுத்திக் கொண்டவர். மார்க்க அறிவில் போதிய தேர்ச்சி இல்லாதவர். இருப்பினும் இஸ்லாத்தைப் பரப்ப வேண்டுமென்ற ஆர்வம் மிகுதியாகப் பெற்றவர். அவர் சார்ந்திருந்த சூஃபித்துவ தரீக்காவின் பக்கமே மக்களை ஒன்று சேர்த்து வழி நடத்த வேண்டுமெனவும், அதுவே மார்க்கப்பணி என்றும் தவறாக விளங்கியவர். எனவே இப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். மேலும், இவர் ரஸீத் அஹ்மத் கான்கோஹி, அஷரஃப் அலி தானவி போன்ற சூஃபித்துவ ஷைஹுமார்களிடம் பைஅத் எனும் குருஞானதீட்சை பெற்றவராகவும் இருந்தார். (ஆதாரம் : நஸ்ரத் அல் ஆபிரா ‍ பக்கம் 7,8 )

குருமார்களிடம் சென்று பைஅத் (ஞானதீட்சை) செய்வது இஸ்லாத்துக்கு முரனான செயல் என்பது இந்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இல்யாஸ் மெளலானா அவர்கள், தனது ஊரான மேவாத்தியிலுள்ள மக்கள் இஸ்லாத்தை விட்டும் தூரமான நிலையில், சிலை வழிபாடு நடத்தும் இந்துக்களின் கலாச்சாரத்தை முற்றிலும் தழுவிய நிலையில் இருப்பதைக் கண்டனர். இஸ்லாமிய வணக்க வழிபாடுகளோ, மார்க்க அறிவோ ஏதுமின்றி, வயலும் வாழ்வுமாக இருந்த அந்த அறியாமைக் கூட்டத்தை நேர்வழிப்படுத்த வேண்டும் என இல்யாஸ் அவர்கள் விரும்பினார்கள். எனவே, இதைப்பற்றி தனது சூஃபித்துவ குருமார்களிடம் ஆலோசனை செய்து, தனது திட்டத்தை தெரிவித்தபோது, குருமார்களும் சம்மதிக்கவே, இல்யாஸ் மவ்லானா அவர்கள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, மக்களை தொழுகையின் பக்கம் அழைக்கும் பணியை தொடங்கினார்கள். இவ்வாறு தொழுகைக்காக அழைக்கும் இயக்கமென தப்லீக் ஜமாஅத் என்ற பெயரில் மக்களிடம் அறிமுகப்படுத்தினார்கள் ( நள்ரத் அல் ஆபிரா பக்கம் 7,8 )

இங்கு நாம் குறிப்பிட வேண்டிய விசயம் யாதெனில், இல்யாஸ் அவர்கள் இஸ்லாமிய பற்றும், மக்களை நல்வழிப்படுத்த வேண்டுமென்ற அவர்களது முயற்சியும், பட்ட சிரமங்களும் மிகவும் பாராட்டுக்குரியதே. ஆனால் அவர்கள் எதன் பக்கம் மக்களை அழைத்தார்கள் என்பதே கேள்வி ? . சூஃபித்துவத்தைப் பற்றியும், அதன் கொள்கை கோட்பாடுகளைப் பற்றியும் நாம் ஏற்கனவே தெளிவாக சொல்லியுள்ளோம். அந்த சூஃபித்துவ தரீக்காக்களின் பக்கம்தான் மக்களை இல்யாஸ் மவ்லானா அழைத்தார்கள். தூய்மையான இஸ்லாத்தின் பக்கம் அல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதன் காரணம் யாதெனில், அன்றைய காலத்தில், அவர்கள் அறிந்துவைத்திருந்த இஸ்லாம் சூஃபித்துவ தரீக்காக்களின் வழிகாட்டுதலாகவே இருந்தது. இந்திய முஸ்லிம்களின் பெரும்பான்மை நிலையும் இவ்வாறாகவே இருந்தது. எனவே நாம் இல்யாஸ் மவ்லானா அவர்களை குறைகாண முடியாது. இஸ்லாமிய அடிப்படைகளும், குர்ஆன், ஹதீஸ் விளக்கங்கள் இவையெல்லாம், அன்றைய ஆலிம்கள்கூட அறிந்திருக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும். மத்ஹபு நூல்களை மார்க்க ஞானம் எனவும், சூஃபித்துவ கருத்துக்களை மெஞ்ஞானம் எனவும் பாமர முஸ்லிம்கள் நம்பி வாழ்ந்த காலம் அது.

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மக்கள் வாழவேண்டுமென ஆங்காங்கே ஓரிரு உலமாக்கள் பிரச்சாரம் செய்தாலும், அவர்களெல்லாம், குழப்பவாதிகள், வஹாபிகள் என்று தவறாக அடையாளப்படுத்தப்பட்டு, சமூகத்திலிருந்தே ஒதுக்கி வைக்கப்பட்ட காலமாக அது இருந்தது. எனவே மவ்லானா இல்யாஸ் (ரஹ்) போன்றவர்களிடம், இஸ்லாத்தில் தூய கொள்கை, சட்ட வழிகாட்டுதல்கள் சென்றடையவில்லை இஸ்லாமிய பிரச்சாரம் செய்யவேண்டும் என்ற ஆர்வம் ஓங்கியிருந்தபோதும், அதனைச் செயல்படுத்த, அவர்களிடம் இருந்த வழிமுறை சூஃபித்துவ தரீக்காக்களின் வழிமுறையாகவே இருந்தது. எனவே, தப்லீக் ஜமாஅத் தோற்றம் முதலே அதன் ஷைஹுமார்களும், முக்கியஸ்தர்களும், தூய இஸ்லாத்தை அறிந்திடாத, சூஃபித்துவ குருமார்களிடம் பைஅத் பெற்ற வழிகேடான கொள்கையின்பால் மக்களை அழைப்பவர்களாகவே இருந்தார்கள்.

எனவே சுருங்கச் சொல்வதாக இருந்தால், ஒரு இயக்கத்தின் ஸ்தாபகர் தன்னகத்தே கொண்டிருந்த நற்குணங்கள், பக்தி, இஸ்லாமிய பிரச்சாரத்தின்பால் கொண்ட ஈடுபாடு போன்றவற்றைக்கொண்டு, அவரது இயக்கம் இஸ்லாமிய மார்க்கத்திற்கான தூய இயக்கம் என வாதிட முடியாது. உதாரணமாக நூஹ் நபி, லூத் நபி போன்றோர் நல்லடியார்கள் என்பதால் அவர்களது மனைவி மக்களும் நல்லவர்கள் என வாதிடுவது எப்படி ஆபத்தானதோ, அதுபோன்றதுதான் மார்க்கத்திற்கு முரணான கொள்கையைக் கொண்டு, மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைக்கும் தப்லீக் செயல்பாடுகளும் என்பதை நாம் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஸஹாபாக்களை மிஞ்சும் அளவுக்கும் அதிகமாக இபாதத்களை செய்யக்கூடிய, நற்குணங்கள் நிறைந்திருந்த‌ கவாரிஜ்களை அவர்களது கொள்கை முரண்பாடுகளால்தான் இஸ்லாமிய சமூகம் “மார்க்கத்தை விட்டும் வெளியேறியவர்கள்” என அடையாளப்படுத்துகிறது.

எனவே, ஒரு இயக்கத்தை “இஸ்லாத்திற்கானது” என வரையறுக்க வேண்டுமெனில், அது இஸ்லாத்தின் (குர்ஆன் ஹதீஸ்) அடிப்படைக் கொள்கைகளை எவ்வாறு பின்பற்றுகிறது என்பதை வைத்தே வரையறுக்க முடியும். முரண்பட்ட கொள்கைகளை தங்களின் செயல்பாடுகளுக்கு அடிப்படையாகக் கொண்ட ஒரு இயக்கத்தை மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்யும் இயக்கமாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது.

எனவே, தப்லீக் ஜமாஅத்தின் அடிப்படைகள், சட்ட வரையறைகள், கொள்கைகள் ஆகியவற்றை மிகத் தெளிவாக படித்து விளங்க வேண்டியது அவசியமாகும். எனவே தப்லீக்கில் இருப்பவர்களும், அதனை ஆதரிப்பவர்களும் தயவுசெய்து மிகுந்த பொறுமையுடனும், விசால மனதுடனும் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பும், வேண்டுதலுமாகும்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும் …)

About முஹம்மது ஜலீல் மதனீ

Check Also

[கட்டுரை] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 12

ஸூஃபித்துவமும் – தப்லீக் ஜமாஅத்தும் … ஸூஃபித்துவம் பற்றிய பகுதியில் அவர்களது அடிப்படைக் கொள்கைகள் பற்றி ஆராயும் போது அவர்களது சிந்தனைகள், ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *