Breaking News
Home / எழுத்தாக்கம் / [ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 15

[ கட்டுரைத் தொடர் ] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 15

தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் ( ஆறு நம்பர் )

தப்லீக் ஜமாஅத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக அவர்கள் ஆறு விசயங்களை அமைத்திருக்கிறார்கள். ஆறு நம்பருடைய வாழ்க்கை வாழ வேண்டும் என்ற பிரச்சாரத்தையும் முன்வைக்கின்றனர். இல்யாஸ் (ரஹ்) அவர்களே இந்த ஆறு நம்பர்களை வகுத்து அறிமுகப்படுத்தியிருந்தாலும் கூட, அவர்கள் அடி நிலை மக்கள் தெளிவு பெறுவதற்காகவே இவற்றை முன் வைத்தார்களேயன்றி, இந்த ஆறு விசயங்கள் மட்டும்தான் இஸ்லாம் என ஒருபோதும் அவர் கூறவில்லை. மாறாக, ஏனைய மார்க்க்க விசயங்களையும் தெரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என்றே ஆர்வப்படுத்தியுள்ளார்கள்.

ஆனால், அதன் பின்பு வந்த முக்கியஸ்தர்கள், அளவு கடந்த குருபக்தியின் காரணமாக, அந்த ஆறு விசயங்கள் மட்டுமே இஸ்லாத்தின் அடிப்படை, அவையல்லாத அனைத்தும் இஸ்லாத்துக்கு அப்பாற்பட்டவை என்ற எண்ணம் ஏற்படும் அளவுக்கு ஏனைய மார்க்க விசயங்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, இந்த ஆறு விசயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க துவங்கிவிட்டனர். இதுமட்டுமின்றி இந்த ஆறு நம்பரிலுள்ள மார்க்க அம்சங்களுக்கு விரிவுரையோ, விளக்கமோ அவர்களது தஃலீம் நூலில் இருந்து மட்டுமே பெறப்படவேண்டும் என்ற போதனையும் மேல் மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை இரகசிய பாதுகாப்புப் பிரச்சாரமாக முன் வைக்கப்படுவது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஆனால், ஆரம்ப நிலை தப்லீக் சகோதரர்களுக்குப் போதனை செய்யப்படும்போது, “சில விசயங்கள் இருக்கின்றன, அவற்றைக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்தால், நாமும் முழு மனித சமுதாயமும் தீனின் படி வாழ்வது லேசாகிவிடும்” என்று சொல்லியே ஆரம்பிப்பார்கள். ஆறு நம்பர் என்பது முழுமையான தீன் அல்ல. தீன் நம்மிடம் வருவதற்கான வழிதான் என்றும் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் காலப்போக்கில் 40 நாள், நான்கு மாதம், ஒரு வருடம் என்றெல்லாம் வெளிக்கிழம்பி பெரியார்களைச் சந்தித்தன் பின்னரே, ‍ அங்கு மேற்கொள்ளப்படும் மூளைச்சலவைக்குப் பின்னரே, ஆறு நம்பரை விட்டு வெளியேறினால், தீனை விட்டே வெளியேறிவிட்டதற்கு சமமாகிவிடும் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றார்கள். இதனைப் பல்வேறு நிகழ்வுகளையும், சம்பவங்களையும் மேற்கோள்காட்டிப் பின்னர் விளக்குகிறேன்.

எனவே இந்த ஆறு நம்பருக்குள் மார்க்கத்தின் ஒருபகுதி மாத்திரம் உள்வாங்கப்பட்டு விட்டு, ஏனையவை புறக்கணிக்கப்படுகின்றன என்பது ஒருபுறமிருக்க, இந்த ஆறு நம்பரிலுள்ள மார்க்க விசயங்களுக்கே, இவர்கள் மிகவும் தவறான விளக்கங்களை கொடுக்கிறார்கள் மிகவும் வேதனைக்குரியதாகும். அவை என்ன என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

தப்லீக் ஜமாஅத்தின் ஆறு நம்பர் என்று சொல்லப்படும் ஆறு அடிப்படை அம்சங்களும் யாதெனில் :

  1. கலிமா (லாயிலாஹ இல்லல்லாஹ் ‍ முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் )
  2. தொழுகை ( தொழுகையை நிலை நாட்டல் )
  3. இல்மு ‍ ( திக்ரு )
  4. இக்ராம் ( பிற சகோதரர்களை கண்ணியப்படுத்துதல் )
  5. இஹ்லாஸ் ( உளத்தூய்மை )
  6. தப்லீக் ( குறித்த நேரத்தில் தொடர்ச்சியாக வெளிக்கிழம்பிச் செல்லுதல் )

இந்த ஆறு விசயங்களுக்கும் நோக்கம், சிறப்பு, முயற்சி என்று சில விசயங்களை இணைத்து அலங்கரித்துள்ளனர். இப்போது இந்த ஆறு விசயங்களையும் ஒவ்வொன்றாக விரிவாக பார்ப்போம்.

முதலாம் நம்பர் : கலிமா

ஆறு நம்பரில் முதலாவதான “கலிமா ‍ லாயிலாஹ இல்லல்லாஹ்” வின் நோக்கம்பற்றிச் சொல்லும்போது ” வஸ்துக்களுடைய நம்பிக்கையை உள்ளத்திலிருந்து போக்கி, வஸ்துக்களின் இறைவனான, அல்லாஹ்வின் நம்பிக்கையை இதயத்தில் பதிப்பதுதான் இதன் நோக்கம் என்கின்றனர். அதாவது நம்மைப் படைத்தது அவனே, உணவு, செல்வம், வறுமை, நோய், சுகம், கஷ்டம், உயர்வு, தாழ்வு இவை அனைத்தும் அவனது செயல் என நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கலிமா (ஷஹாதா)விற்கு விளக்கம் தருகின்றனர்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் குரைஷிக் காஃபிர்கள் மத்தியில் அன்று இந்தக் கலிமாவை முன்வைத்தபோது அதன் நோக்கம்பற்றி என்ன கூறினார்கள், அதற்கு எவ்வாறு விளக்கம் அளித்தார்கள் என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். குரைஷிக் காஃபிர்கள் அன்று கல்லையும், மண்ணையும், சிலைகளையும்தான் வணங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் அல்லாஹ்வைப் பற்றிய இறை நம்பிக்கை அவர்களிடம் எவ்வாறு இருந்தது என்பதுபற்றி அல்லாஹ் கூறுவது யாதெனில் :

 ‘நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்? என்று (நபியே!) நீர் கேட்பீராக!  (84) “அல்லாஹ்வுக்கே” என்று அவர்கள் கூறுவார்கள்; “(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?” என்று கூறுவீராக!  (85) “ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக.  (86) “அல்லாஹ்வுக்கே” என்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று கூறுவீராக!  (87) “எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)” என்று கேட்பீராக.  (88) அதற்கவர்கள் “(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)” என்று கூறுவார்கள். (“உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?” என்று கேட்பீராக.  (89) (முஃமினூன் : 84-88)

மேலும், (நபியே!) “நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?” என்று கேட்டால், “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்?  (அன்கபூத் : 61)

“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அமைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.  (யூனுஸ் : 31)

இதுபோன்ற குர்ஆன் வசனங்கள் பல்வேறு இடங்களில் இடம்பெற்றிருப்பதை காண முடிகிறது. எனவே, இந்த வசனங்களின்படி அன்றைய குரைஷிக் காஃபிர்களும், அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தவன், ஆக்குபவன், அழிப்பவன், காப்பவன், உணவளிப்பவன், நோயைக் குணப்படுத்துபவன் என்ற நம்பிக்கையோடுதான் வாழ்ந்தார்கள் என்பதை அல்லாஹ்வே கூறுகிறான்.

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :
மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்படடவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே) இணைவைக்கின்றனர்.  (அன்கபூத் : 65)

நபிகளாரின் பிறப்புக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாக, யெமன் நாட்டிலிருந்து அப்றஹா எனும் மன்னன் கஃபாவைத் தகர்ப்பதற்காக யானைப்படையுடன் மக்கா நோக்கி வந்தான். அப்பொழுது மக்காவுக்கு அருகில் மேய்ந்துகொண்டிருந்த ஒட்டகங்களை பிடித்துவைத்துக் கொண்டான். அவை அப்துல் முத்தலிப் ( நபிகளாரின் பாட்டனார் )அவர்களுக்கு சொந்தமானதாகும். எனவே, அப்துல் முத்தலிப் அப்றஹா மன்னனிடம் வந்து தனது ஒட்டகங்களை விடுவிக்குப்படி கேட்டார். ஆனால் அப்றஹா மன்னனோ ” நான் உங்களது இறையில்லமான கஃபாவையே இடிப்பதற்கு பெரும்படையுடன் வந்திருக்கிறேன்.. நீயோ அதைப்பற்றிக் கவலைப்படாமல் உனது ஒட்டகங்களைக் கேட்கின்றாயே ? என ஏளனமாகக் கேட்டான். அதற்கு அப்துல் முத்தலிப் அவர்கள் ” ஒட்டகங்களுக்கு சொந்தக்காரன் நான், அவற்றை நான் தான் பாதுகாக்க வேண்டும். கஃபாவின் சொந்தக்காரன் அல்லாஹ்… எனவே, அதை அவன் பாதுகாத்துக் கொள்வான் என்று கூறினார். அதுபோலவே அல்லாஹ்வும் அபாபீல் பறவைகளைக் கொண்டு, அப்றஹாவின் படைகளை அழித்தான். இது வரலாறு. இதில் நாம் விளங்க வேண்டியது என்னவென்றால், அப்துல் முத்தலிப் காஃபிராக இருந்தும்கூட அல்லாஹ்வின்மீது அவருக்கிருந்த அளப்பெரிய அசைக்க முடியாத நம்பிக்கையைப் படம்பிடித்துக் காட்டுடிறது. அப்படியானால் இக்கலிமா (ஸஹாதா)வின் நோக்கம்தான் என்ன என்ற கேள்வி நமக்குள் எழுகிறதல்லவா ?

ஆம், இக்கலிமாவுக்கு கலிமத்துத் தவ்ஹீத் ‍‍‍ஓரிறைக்கொள்கையின் வாசகம் என்று நாம் சொல்கிறோம். தவ்ஹீத் எனும்போது மேற்சொன்னவாறு அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்து நிர்வகிப்பவன் என்று நம்புவதும் ஒரு பகுதி மட்டுமே. ( இந்த நம்பிக்கை நபிகளாருடைய காலத்தில் வாழ்ந்த குறைஷி காஃபிர்களிடமும் இருந்தது.) அதைவிட முக்கியமாக அவனை மாத்திரமே வணக்கத்திற்குரியவனாக ஆக்கி, அவனல்லாத எந்த ஒரு படைப்பிற்கும் அல்லாஹ்வின் ஆற்றலில் எவ்வித பங்கும் இல்லை என உறுதியாக நம்பி, அனைத்து இபாதத்களையும் அல்லாஹுவுக்கு மட்டுமே என்ற உளத்தூய்மையுடன் செயல்படுத்துவதுவே இக்கலிமா ஸஹாதாவின் அடிப்படை நோக்கமாகும். இந்த நம்பிக்கையில்தான் குரைஷி காஃபிர்கள் தவறிவிட்டதாக அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகிறான். எனவே கலிமா ஸஹாதாவின் தெளிவான விளக்கம் என்ன என்பதுகூட சரியாக அறியாத கூட்டமாகவே தப்லீக்கினரை காணமுடிகிறது. வெறுமனே அல்லாஹ்வை இறைவனாக நம்பிவிட்டு, பின்னர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கும் ஆற்றலும் சக்தியும் வேறு சில மனிதர்களுக்கோ, சிலைகளுக்கோ அல்லது படைப்புகளுக்கோ இருக்கிறது என்ற நம்பிக்கையில், அல்லாஹ்விடத்தில் நமக்கு நெருக்கத்தை பெற்றுத்தர இவைகளால் இயலும் என்ற நம்பிக்கையிலும்தான் குரைஷி காஃபிர்கள் வாழ்ந்தார்கள். இதனைத்தான் நபியவர்கள் கண்டித்தார்கள், விமர்சித்தார்கள், எதிர்த்தார்கள். இதனால்தான் குரைஷிகளுக்கும் நபியவர்களை
நம்பியவர்களுக்கும் பல போர்கள் மூண்டன.

எனவே வெறுமனே கலிமாவை மட்டும் சொல்லிவிட்டு, அதற்கு தாங்களாகவே ஏதேனும் விளக்கத்தைச் சொல்லிக்கொண்டு, அதன்படி நம்பிக்கைகொண்டு வாழ்வது போலியான நம்பிக்கை என்றே அர்த்தம் கொள்ளப்படும். எனவே லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவின் அர்த்தமே, பக்தி எனும் பெயரில் தப்லீக் முக்கியஸ்தர்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு கட்டுப்படுவதும், அவர்களது வார்த்தைகளை வேத வாக்காக மதித்தலும், அவர்களுக்கு மாறுசெய்தால் சாபம் ஏற்பட்டுவிடும் என பயப்படுதலும், அவர்களது ஆசியால் நமக்கு பரக்கத் ஏற்படுமென நம்புதலும், இன்னும் தப்லீக் முக்கியஸ்தர்களுக்கு வேறுபல சக்திகள் இருப்பதாகக்கூட நம்புவதும், தப்லீக்கின் துவக்க நிலை கார்கூன்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகளாகும். இத்தகைய மூட நம்பிக்கைகள் அனைத்திற்கும் கலிமா ஸஹாதாவின் உண்மையான அடிப்படை நோக்கமும் விளக்கமும் முற்றிலும் எதிரானது என்பதை தப்லீக்கை ஆதரிப்போர் விளங்கிக்கொள்ள வேண்டும். மேலும் அதிகமான விளக்கங்களை அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள் ….

தொடரும் …

About முஹம்மது ஜலீல் மதனீ

Check Also

[கட்டுரை] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 13

அன்றைய சூஃபித்துவமும் இன்றைய தப்லீக் ஜமாஅத்தும் சூஃபித்துவம் பற்றிய பகுதியில் அவர்களது அடிப்படைக் கொள்கைகள் பற்றி ஆராயும்போது அவர்களது சிந்தனைகள், ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *