Breaking News
Home / கேள்வி - பதில் / [கேள்வி-பதில்] : மதுபான பாட்டில்கள் மற்றும் குடுவைகளில் நீர் வைத்து அருந்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் உள்ளதா ?

[கேள்வி-பதில்] : மதுபான பாட்டில்கள் மற்றும் குடுவைகளில் நீர் வைத்து அருந்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் உள்ளதா ?

மதுக் குடுவைகள், பாட்டில்கள் ஆகியவற்றை குடிநீர் உபயோகங்களுக்காக, அதிலும் குறிப்பாக குளிர்சாதனப்பெட்டிகளில் வைத்துக்கொள்ள வசதியானது என்பதற்காக பெரும்பான்மையான வீடுகளிலும், வியாபாரத்தளங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றிலும் உபயோகப்படுத்துவதைக் காணமுடிகிறது.  (அல்லாஹ் மிகவும் அறிந்தவன்) மதுபானம் இருந்த பாத்திரங்களையோ, குடுவைகளையோ நல்லமுறையில் சுத்தப்படுத்திவிட்டு உபயோகப்படுத்துவதில் தடையேதுமில்லை. தூதருடைய காலத்தில் துவக்கத்தில் இதற்கு தடையிருந்தாலும், பிற்காலத்தில் இத்தடை நீக்கப்பட்டதாகவே ஹதீஸ் கிரந்தங்களில் காணமுடிகிறது.

அதே நேரத்தில் நமது வீடுகளிலோ, வியாபாரத்த் தளங்களிலோ மதுபான குடுவை பாட்டில்களை நாம் குடிநீருக்காக உபயோகப்படுத்தினாலும், இதை பிறர் காணக்கூடிய சந்தர்ப்பத்தில் வீணான சந்தேகங்கள் எழுவதற்கு மிகுந்த வாய்ப்புள்ளது. அதாவது, ஒருவரில் வீட்டில் இவ்வாறான மதுபான பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டால், இதை காண்பவர், ” இவ்வீட்டில் யாரேனும் மது அருந்துபவர்கள் இருக்கலாம் ” என்றோ, இவர்களுக்கு எங்கிருந்து இப்பாட்டில்கள் கிடைத்தன என்றோ, இவர்களது குடும்பத்தில் மது அர்ந்துபவர்கள் யார் என்ற நோக்கில் அனைவரையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதோ, அல்லது ஹராமானவற்றைப் பயன்படுத்துவதில் இவர்களுக்கு ஆர்வம் உண்டோ என்றோ… இப்படி தேவையற்ற சந்தேகங்களும், குழப்பங்களும் ஏற்பட்டு, நல்ல உறவுகளுக்குள் பிணக்குகளும், நம்பகத்தன்மையற்ற நிலையும் வர வாய்ப்புள்ளது. இவை அவரவர் சிந்தனைக்கேற்ப பலகோணங்களில் மாறுபடலாம்.

எனவே, வீணான சந்தேகங்களை விட்டும், குழப்பங்கள் ஏற்படுவதை விட்டும் தன்னையும், தனது சூழலையும் பாதுகாத்துக்கொள்வது ஒவ்வொரு முஃமினது கடமையாகும். எனவே மதுபாட்டில்களை குடிநீர் தேவைக்காகவோ, அழகுக்காகவோ பயன்படுத்துவதை தவிர்த்தலே சிறந்த நிலைப்பாடாகும்.

அதேநேரத்தில் குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு மதுபாட்டில்கள் போன்றவற்றைத் தவிர, வேறு எந்த பாத்திரமும் கிடைக்காத / இல்லாத நிர்பந்தநிலை ஒருவருக்கு ஏற்படுமானால், அவர் அவற்றை நல்லமுறையில் சுத்தம் செய்து பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை என்பதே எமது நிலைப்பாடு (அல்லாஹ் மிகவும் அறிந்தவன் )

523. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அப்துல் கைஸ் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘நாங்கள் ரபீஆ எனும் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். (போரிடுதல்) விலக்கப்பட்ட மாதத்தில் தவிர (ஏனைய மாதங்களில்) உங்களிடம் நாங்கள் வர இயலாது. எனவே உங்களிடமிருந்து பெற்றுச் சென்று எங்களுக்குப் பின்னாலுள்ளவர்களையும் அதன் பால் அழைக்கக்கூடிய விஷயங்களை எங்களுக்குக் கட்டளையிடுங்கள்!’ என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான்கு காரியங்களை உங்களுக்கு ஏவுகிறேன். அவையாவன: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று உறுதியாக நம்புவது தொழுகையை நிலைநாட்டுவது, ஸகாத் கொடுத்து வருவது, கனீமத் (போரில் வென்ற பின் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட) பொருட்களில் ஐந்தில் ஒரு பகுதியை பொதுமக்கள் நன்மைக்காக) என்னிடம் ஒப்படைத்து விடுதல், நான்கு காரியங்களைவிட்டு உங்களை நான் தடுக்கிறேன். அவையாவன: (மது பானங்கள் வைத்திருந்த) சுரைக்குடுக்கை, வாய் குறுகலான சுட்ட மண் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம், பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியைக் குடைந்து செய்யப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை(ப் பயன்படுத்துவதை)விட்டும் உங்களைத் தடுக்கிறேன்’ என்று கூறினார்கள்.

குறிப்பு: போதைப் பொருள்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட இப்பாத்திரங்களைப் பயன்படுத்தலாகாது என்ற தடை, பின்னர் நபி(ஸல்) அவர்களால் விலக்கிக் கொள்ளப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்க!)  ( ஸஹீஹ் புஹாரி )

4066. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தோல் பாத்திரம் தவிர வேறெதிலும் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமென உங்களுக்கு நான் தடைவிதித்திருந்தேன். இனி, எல்லாப் பாத்திரங்களிலும் (ஊற்றி வைத்து) அருந்திக் கொள்ளுங்கள். போதை தரக்கூடியதை அருந்தாதீர்கள்.  இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.  ( ஸஹீஹ் முஸ்லிம் )

About முஜாஹித் இப்னு ரஸீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *