இஸ்லாமும் பாடல்களும் – 1

மனிதன் உலகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு,  சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் முழு அனுமதியையும் வழங்கி இருக்கின்றது. அதில் ஒன்றுதான் பாடல்களை கேட்டு ரசிப்பது. இஸ்லாத்தில்   பாடல்கள் கேட்பதற்கு எந்த தடையுமில்லை,

ஆனால் பாடல்கள் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

  • ஒன்று ஷிர்க்கில்லாத பாடலாக இருக்க வேண்டும்,
  • இரண்டாவது தவறான கருத்துக்களில்லாத பாடலாக இருக்க வேண்டும்.
  • மூன்றாவது இசை இல்லாத பாடலாக இருக்க வேண்டும்.

ஷிர்க்கில்லாத பாடலென்பதின் கருத்து, நாம் படிக்கும் பாடல்களோ அல்லது நாம் கேட்கும் பாடல்களோ அல்லாஹ்விற்குரிய தன்மைகளை பிறருக்கு கொடுக்கக்கூடிய கருத்துக்களை பொருந்தியதாகவோ அல்லது அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய வணக்கங்களை அல்லாஹ்வின் படைப்புகளுக்கு கொடுக்கத் தூண்டும்படியான பாடல்களாகவோ இருக்கக்கூடாது.

தவறான கருத்துள்ள பாடலென்பது, தவறான கலாச்சாரத்தையும் தவறான பழக்க வழக்கங்களையும் கூறக்கூடிய, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இரட்டை கருத்துள்ள பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய   வார்த்தைகளை கூறக்கூடிய பாடல்கள்,  இவை அனைத்தையும் இஸ்லாம் தடுக்கின்றது.

இத்துடன் பாட்டில் இசை கலந்திருக்கவும் கூடாது. இவைகள் அல்லாத பாடல்களை கேட்பதில் தவறில்லை.

இன்று நமது நாடுகளில் இஸ்லாமிய பாடல்கள் என்கிற பேரில் ஷிர்க் மற்றும் இசை கலந்த பாடல்கள் நமது வீடுகளில் வலம் வந்து கொண்டிருப்பது கவலைக்குரியதாகும். குறிப்பாக, அதிகாலையில் விழித்தெழுந்ததும் முதலில் கேட்பது நாகூர் E.M ஹனீபா மற்றும் அவர் போன்றவர்களின்  பாடல்களைத்தான். இவைகளுக்குப் பெயர், இஸ்லாமியக் கீதம்(?!).   இவைகள் இஸ்லாமியக் கீதமா? இஸ்லாத்திற்கு முறணான கீதமா? இஸ்லாத்திற்கு முறணான பல கருத்துக்களைக் கூறக்கூடிய, இந்த பாடல்களுக்கு  இஸ்லாமியக் கீதம் என்கிற முத்திரையையும் மக்கள் வழங்கியிருக்கின்றார்கள்.

இது போன்று மவ்லிது என்கிற பேரில் தெளிவான ஷிர்க்கியத்தான பாடல்களையும் நமது வீடுகளில் படிக்க வைப்பதற்கு, கூலிக்கு கூட்டி வந்து, நமக்கு தெரிந்தோ தெரியாமலோ பெரும் ஷிர்க்கையும் நமது வீடுகளில் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றோம்,  இதைப் பற்றிய தெளிவை மக்களுக்கு கூற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.   முதலில் பாடல்கள் இயற்றும் கவிஞர்கள் பற்றி இஸ்லாம் கூறுவதை காண்போம்   அல்லாஹ் கவிஞர்கள் பற்றி குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.

இன்னும் கவிஞர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?   இன்னும் நிச்சயமாக, நாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள்.   ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள். 26:224,227

அதாவது, கவிஞர்கள் உண்மைக்கு மாறாக பேசுபவர்கள், இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி, சொல்ல விரும்பும் செய்தியை எதைக் கூறியாவது நிலை நிறுத்தப்பார்ப்பவர்கள். ‘கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு அழகு பொய்’ என்று கூறுமளவு, கவிஞர்கள் பொய் கூறுவார்கள். இதுதான் இன்றைய உலக நடப்பும் கூட. ஒருவரை உயர்த்துவதற்காக  அவரை வானளாவ அளவுக்கு உயர்த்துவார்கள், ஒருவரை இகழ்வதற்காக அவரை தரைமட்டத்திற்கே இறக்கி கொண்டு வந்து விடுவார்கள். இதுதான் கவிஞர்களின் நிலையாகும்.

இவ்வாறு நபி(ஸல்) அவர்களுக்கு, நாம் கவிதையை கற்றுக் கொடுக்கவும் இல்லை, அது அவர்களுக்கு தேவையுமில்லை என்று திருமறை கூறுகின்றது.  இதுபற்றி அல்லாஹ்  திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல் இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை. 36:69

மேற்கூறப்பட்ட திருவசனங்களின் மூலம் பாட்டுப் பாடுவதும் அதை கற்றுக் கொள்வதும் அவசியமில்லாத ஒன்றாகும் என்றும், பாடகர்கள் பொய் சொல்லியே தங்களின் பாடல்களையும் கவிதைகளையும் மெருகூட்டுவார்கள் என்று கூறி அப்படிப்பட்ட பாடகர்ளை எச்சரிக்கின்றது இஸ்லாம். அதே நேரத்தில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டிலே சிறுமிகள் பெருநாள் தினத்தில் பாட்டுக்களை படித்துக் கொண்டிருக்கும் போது, அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை தடுத்த போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இது அவர்களின் பெருநாளுடைய தினம், பாடவிடுங்கள் என அனுமதி வழங்கினார்கள் என்று ஹதீது புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் பதிவாகியிருக்கின்றது.

மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைஷி கவிஞர்கள் கவிதை மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வசைபாடிய போது, ஹஸ்ஸான் இப்னு தாபிது ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கவிதை மூலம் விடை சொல்லும்படி கூறிய ஹதீது புகாரியில் பதிவாகியுள்ளது.

அதே போன்று, அகழ் போரில் நபித்தோழர்கள், பசியோடு வயிற்றிலே கற்களை கட்டியவாறு சில கவிதைகளை பாடினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அகழ் தோண்டப்படும் இடத்திற்கு சென்றபோது, முஹாஜிரீன்களும் அன்சாரிகளும் குளிரான காலை நேரத்தில் அகழ் தோண்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். அவர்களின் கஷ்டத்தையும் பசியையும் பார்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பின்வரும் கவிதைகளை பாடினார்கள்)

இறைவா! உண்மையான வாழ்க்கையென்பது, மறுமை வாழ்க்கையாகும் அன்சாரிகளுக்கும் முஹாஜிரீன்களுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விடை கொடுக்கும் முகமாக நபித்தோழர்கள் பின்வரும் கவிதைகளை பாடினார்கள்.

நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் உடன்படிக்கை செய்திருக்கின்றோம் உயிர்வாழும் வரை ஜிஹாத் செய்வதற்கு. (புகாரி)

(பின்வரும் கவிதைகளை) கூறிய நிலையில், அகழ்போர்களத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மண்ணை சுமந்து கொண்டு செல்வதை நான் பார்த்தேன், மண், அவர்களின் வயிற்றின் வெண்மை நிறத்தை மூடியிருந்தது,

நீ இல்லையென்றால், நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். இன்னும் தர்மம் செய்திருக்கவும் மாட்டோம் தொழுதிருக்கவும் மாட்டோம். ஆகவே எங்கள் மீது அமைதியை இறக்கி வைப்பாயாக!

நாங்கள் எதிரிகளை சந்தித்தால் (எங்களின்) கால் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! … என சில வரிகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாடினார்கள். (அறிவிப்பவர் : பராஉ ரளியல்லாஹு அன்ஹு, – புகாரி)

மேல் கூறப்பட்ட ஹதீதுகளின் மூலம், நல்ல கருத்துக்களுள்ள பாடல்களை படிப்பதும் கேட்பதும் ஆகுமென்றும், தவறான கருத்துள்ள பாடல்லகளை படிப்பதும் கேட்பதும்தான் தவறு என்பதும் தெளிவாகின்றது.

ஷிர்க்கான கருத்துள்ள பாடல்களை படிக்கவும் கூடாது, கேட்கவும் கூடாது என்று, நான் குறிப்பிட்டதைப்பற்றி உங்களில் சிலர் ஆச்சரியப்படலாம். ஆம், நமது பாடகர்கள் பாடும் பல பாடல்களில் ஷிர்க்கியத்தான வார்த்தைகள் மிகத் தெளிவாகவே இருக்கின்றது. உதாரணத்திற்கு ஒரு சிலவற்றை பார்ப்போம்.

நாகூர் E.M. ஹனீபா பாடலில் கூறப்படும் ஷிர்க்கான வார்த்தை
பாடகர் நாகூர் E.M. ஹனீபா அவர்கள் பாடும் ஒரு பாடலில், தெளிவாக கூறப்படும் ஷிர்க்கான ஒரு வார்த்தை பின்வருமாறு:

நமனை விரட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்காவிலே.. என்று பாடுகின்றார்.

நாகூர் தர்ஹாவில் நமனை விரட்ட மருந்து விற்குதாம். அன்பு நாணயம் கொண்டு சென்றால் பெறலாம் குரு நாதர் பதப் பூவிலே என்று பாடகர் பாடியுள்ளார்.

நமன் என்றால் எமன் என்று பொருள். இவ்வாறு தமிழ் அகராதி நூற்களில் காணப்படுகிறது. எமன் என்றால் உயிரை பறிப்பவன். உயிரை பறிப்பவர்கள், மலக்குகள் வானவர்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்யமாட்டார்கள். உயிர் பறிக்க வரும் மலக்குகளைக் கூட விரட்டிவிட அங்கு மருந்து விற்கிறது என்றால், அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக அங்கே நிகழ்ச்சி நடக்கிறது என்பது தானே பொருள்.

உண்மையில் நாகூர் மீரானே நமனால் கைப்பற்றப்பட்டு இறந்தபின் தானே நாகூரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்? அவரிடம் போய் நமனை விரட்ட மருந்து கிடைக்கும் என்றால் எப்படிபட்ட பொய்? ஆனால் அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.

ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும் வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள், முந்தவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 7: 34)

ஒருவரின் உயிர் கைப்பற்றப்படும் நேரம் வந்துவிட்டால், கொஞ்ச நேரம் முற்படுத்தப்படவுமாட்டாது, கொஞ்ச நேரம் பிற்படுத்தப்படவுமாட்டாது என திருமறை குர்ஆன் தெளிவாக கூறும் போது, இந்தப்பாடல் அதற்கு முற்றிலும் மாற்றமாக கூறுகின்றது. இவ்வாறு அல்லாஹ்வால் ஏற்கனவே நாள் குறிக்கப்பட்டு விட்ட மரணத்தை யாரும் தள்ளி வைக்கவோ அல்லது நீக்கிவிடவோ முடியுமா? இது குர்ஆனுடன் நேரடியாக மோதவில்லையா? அல்லாஹ்வின் ஆதிக்கத்தில் இன்னுமொரு அல்லாஹ்வின் படைப்புக்கு பங்கு வைத்துக் கொடுக்கும் இணைவைப்பில்லையா? இதை ஒரு முஸ்லிம் இஸ்லாமிய பாடல் என்று கூறி கேட்கலாமா? சிந்தியுங்கள்..

நமன் என்றால் எமன் என்ற பொருளல்ல. மாறாக நோய் என்று தான் பொருள் எனவும் சிலர் கூறுகின்றனர். நோய் என்று பொருள் கொண்டாலும் கூட தவறு தான்.

நோயை விரட்ட மருந்து நாகூர் தர்ஹாவில் விற்கிறது என்றால் தமிழகத்திலுள்ள எல்லா மருத்துவமனைகளையும் மூடிவிடலாமே! ஏன் அரசாங்கத்திற்கு வீண் செலவு. மக்களுக்கு வீண் செலவு. பேசாமல் நாகூர் தர்ஹாவிற்குப் போய் மருந்தையாவது அல்லது நோயையாவது வாங்கிக் கொண்டு வரலாமே?

அல்லாஹ் தான் நோய் நிவாரணம் அளிப்பவன் என்பது தான் இஸ்லாத்தின் அசைக்க முடியாத அடிப்படை.

”நான் நோயுற்றால் அவனே எனக்கு சுகமளிக்கிறான்” (அல்குர்ஆன் 26: 80) என்று இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியதாக அல்லாஹ் கூறுகிறான். எனவே நமன் என்பதற்கு எமன் என்று பொருள் கொண்டாலும் நோய் என்று பொருள் கொண்டாலும் தவறு தான் என அறிந்து கொள்ள முடிகிறது.

இன்னும் ஒரு பாடலையும் கேளுங்கள்.

”எங்கே எங்கே எங்கள் நாகூர் மீரானே உம் வாசல் தேடி வந்தோம் ஷாஹ் மீரானே”

என்று துவங்கும் பாடலை மற்றொரு முறை ஆழ்ந்து சிந்தனையுடன் கேட்டுப் பாருங்கள். இந்த அடிகளுக்குப் பின்னால் நாகூராரிடம் பலவிதமான உதவிகளைக் கேட்டு பாடகர் பாடியுள்ளார்.

என்றோ இறந்து போனவரிடம் நம் தேவைகளைக் கேட்கலாமா? கூடாதன்றோ? நாகூர் வலி (அவர் வலியுல்லாஹ்தானா என்பதை அல்லாஹ்வே மிக நன்கறிந்தவன்) உயிரோடு உள்ள போதே நாம் கேட்பதை எல்லாம் தர முடியாது. அல்லாஹ் மட்டுமே அனைத்தையும் தர வல்லவன். அவர் இறந்து போன பின்பு எப்படி நம் தேவைகளை நிறைவேற்றி வைக்க முடியும்?

பிரார்த்தனையை அல்லாஹ்விடத்தில் மாத்திரமே பிரார்த்திக்க வேண்டும், அவனைத்தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்று திருமறை கூறுகின்றது. அல்லாஹ் தனக்கு மாத்திரம் செய்யும்படி கட்டளையிடும் ஒரு வணக்கத்தில் அல்லாஹ்வின் படைப்பை சேர்த்துக் கொள்வது அல்லாஹ்விற்கு இணையில்லையா? (ஷிர்க்கில்லையா) பின்வரும் வசனங்கள் அதை தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.

1. ”உங்கள் இறைவன் கூறுகிறான்; ”என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன். எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.” (அல்குர்ஆன் 40: 60)
2. ”(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ”நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும். அப்பொழுதவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.” (அல்குர்ஆன் 2: 186)

நபிமொழிகள்

”நீ கேட்டால் அல்லாஹ்விடத்திலேயே கேள், இன்னும் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடத்திலேயே உதவி தேடு என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” ஆதாரம்: திர்மிதி

விளக்கம்: எல்லாத் தேவைகளையும் அல்லாஹ்விடத்தில் மாத்திரம் கேட்கும்படி அல்லாஹுவும் அவனுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கூறுவது ஒருபுறமிருக்க, மேல்கூறும் பாடல், ஷாஹுல் ஹமிது வலியுல்லாவிடம் (அல்லாஹ் மிக நன்கறிந்தவன்) தேவையை கேட்டு போகச் சொல்லுகின்றது, அல்லாஹுவிற்கு மாத்திரம் பிரார்த்திக்கும்படி சொல்லப்பட்ட வணக்கத்தை, அல்லாஹுவின் படைப்புக்கும் செலுத்தும்படி கூறுவது, அல்லாஹுவிற்கு இணைவைக்கும் செயலில்லாமல் வேறு என்ன?

நன்றி: ஹுசைன் – சுவனப்பாதை மாதஇதழ்
இன்ஷா அல்லாஹ் தொடரும்….