[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு

ஆஷூரா நோன்பு என்பது ஹிஜ்ரி வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் நோன்பு நோற்பதை குறிப்பதாகும். இதைப்பற்றிய மார்க்க விளக்கமும் சட்டமும் யாதெனில்,

அறியாமைக் காலத்தில் …

நபித்துவத்திற்கு முன்பு அறியாமைக் காலத்தில் மக்கா குறைஷியர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள் என்ற செய்தியை அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் (முஸ்லிம் கிரந்த‌) அறிவிப்பில் காணமுடிகிறது.

மதீனாவில் …

இதன் தொடர்ச்சியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்கு வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதைக் கண்டார்கள். இது குறித்து யூதர்களிடம் வினவப்பட்டபோது, “இந்த நாளில்தான் (இறைத்தூதர்) மூசா (அலை) அவர்களுக்கும் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாருக்கும் பிர்அவ்னுக்கெதிராக இறைவன் வெற்றியளித்தான். எனவே, இந்நாளைக் கண்ணியப்படுத்தும் முகமாகவே நாங்கள் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்” என யூதர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களைவிட மூசாவுக்கு அதிக நெருக்கமுடையவர்கள் நாங்களே” என்று கூறிவிட்டு, தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையுமிட்டார்கள், என்பதை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் (முஸ்லிம் கிரந்தம் ) வழியாக அறிய முடிகிறது.

முஹர்ரம் ஒன்பதாவது நாள் …

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டபோது. மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்” என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். என்ற செய்தியும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக முஸ்லிம் கிரந்தத்தில் காணக்கிடைக்கிறது.

நபிகளாரின் அறிவிப்பும் – சிறார்களும் …

மேலும், ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று காலையில் மதீனா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி “(இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர், தமது நோன்பைத் தொடரட்டும்; நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்” என்று அறிவிக்கச்செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் -அல்லாஹ் நாடினால்- நோன்பு நோற்கச்செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது, கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் நேரம்வரை (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விளையாட்டுப் பொருளைக் கொடுப்போம்” என்ற செய்தியும் முஸ்லிம் கிரந்தத்தில் காண முடிகிறது.

ரமளான் நோன்பு கடமையானதற்க்குப் பின்பு …

இதன் தொடர்ச்சியான செய்தியாக புகாரி கிரந்தத்தின் அறிவிப்பில் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கின்ற செய்தி யாதெனில், ” ஆஷூரா (முஹர்ரம் 10-ம் நாள்) என்பது அறியாமைக் காலத்தில் குறைஷிகள் நோன்பு நோற்கிற நாளாக இருந்து வந்தது. நபி(ஸல்) அவர்களும் அந்த நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்றபோது அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்கும் படி (முஸ்லிம்களுக்கும்) உத்தரவிட்டார்கள். ரமளான் (நோன்பின் கட்டளை) வந்தபோது ஆஷூரா தினம், விரும்பியவர்கள் நோன்பு நோற்கவும் செய்யலாம்; விரும்பாதவர்கள் நோன்பு நோற்காமலும் இருக்கலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டது. என்பதையும் அறிய முடிகிறது.

இது போலவே புகாரி கிரந்தத்தில் இப்னு உமர்(ரழி ) அறிவிக்கக்கூடிய செய்தி, ” அறியாமைக்கால மக்கள் (குறைஷியர்கள்) ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்று வந்தனர். ரமளான் (நோன்பு) கடமையானபோது நபி(ஸல்) அவர்கள், ‘(ஆஷூரா நோன்பை நோற்க) விரும்புகிறவர் அதை நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகிறவர் அதைவிட்டுவிடலாம்’ என்று கூறினார்கள். என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

ஆஷூரா நோன்பின் பலன்கள் …

மேலும் அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு “முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” என்றார்கள். (முஸ்லிம் கிரந்தம் )

இதனடிப்படையில் முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாவது மற்றும் பத்தாவது ஆகிய இரண்டு நாள்களிலோ அல்லது முஹர்ரம் மாதத்தில் பத்தாவது நாள் மட்டுமோ நோன்பு நோற்பது நபிவழியாகும்.

அதே நேரத்தில் நாம் கவனத்தில்கொள்ள வேண்டியது யாதெனில், ஆஷூரா நோன்பு நோற்பது விரும்பத்தக்க இறைவனிடம் நன்மையை பெற்றுத்தரக்கூடிய ஒரு நற்செயலாகும். இது அனைவருக்கும் கட்டாய கடமையல்ல. விரும்பியவர் நோன்பு நோற்பதும், விரும்பாதவர் நோன்பு நோற்காமலிருப்பதும் அவரவர் விருப்பத்தை பொறுத்ததாகும் .

இது தொடர்பாக முஸ்லிம் கிரந்தத்தில் வரக்கூடிய செய்தி அஷ்அஸ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நான் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான், “அபூ அப்திர் ரஹ்மான், இன்று முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) ஆயிற்றே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ரமளான் நோன்பு கடமையாவதற்கு முன்பு (ஆஷூரா நாளில்) நோன்பு நோற்கப்பட்டுவந்தது. ரமளான் நோன்பு கடமையானபோது அந்த (ஆஷூரா) நோன்பு கைவிடப்பட்டது. ஆகவே, நீங்கள் நோன்பை விட்டுவிட விரும்பினால் நீங்களும் (என்னுடன்) சாப்பிடலாம்” என்றார்கள். இதை அல்கமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இறைத்தூதர் அவர்கள் நன்மையை பெற்றுத்தரக்கூடியது என எவற்றையெல்லாம் நமக்கு கற்றுத்தந்தார்களோ அவையனைத்தையும் முழுமையாக பின்பற்றி இறைப் பொருத்தத்தை பெற்ற மக்களாக வாழ்ந்து மரணிப்பதற்கு எல்லாம்வல்ல இறைவன் அனைவருக்கும் அருள்புரிவானாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *