[கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – 10

சூஃபிகளின் மேலும் சில ஷிர்க்கான வழி கெட்ட கொள்கைகள்:

4 – பல உருவங்களில் அவதாரம் எடுக்கும் வழி கெட்ட சூஃபிகள்.

ஸெய்யித் முஹம்மத் குலைறி என்பவர்களும் மிகப்பெரும் சூஃபி மகானாகும். ஒரு முறை குத்பாப் பேருரை நிகழ்த்துமாறு மக்கள் இவரை அழைத்தனர். உடனே இவர் மிம்பரில் ஏறி ‘உங்களின் வணக்கத்துக்குத் தகுதியானவன் இப்லீஸைத் தவிர வேறெவருமில்லையென்று நான் சாட்சி கூறுகின்றேன்’ என்றார். இதனைக் கேட்ட மக்கள் குப்ர் .. குப்ர் .. என்று கோசமிட்டனர். உடனே இவர் கீழே இறங்கி வாளை உருவிக் கொண்டு

குப்ர் என்று சொன்ன மக்களை நோக்கி ஓடிவர அவர்கள் பள்ளியை விட்டு விரண்டோடினார்கள். மீண்டும் அவர் திரும்பி வந்து தனிமையிலேயே மிம்பரில் அஸர்த் தொழுகை வரைக்கும் நின்று கொண்டிருந்தார். பின் அவ்வூர்ப் பிரமுகர்கள் சிலர் வந்து அவரிடம் சமாதானம் பேசி வழிக்குக் கொண்டு வந்தனர். பின்னர் அக்கம்பக்க ஊர்களுக்கு இச்செய்தி பரவியபோது அவ்வூரவர்கள் மேற்படி ஷேய்க் தமது ஊரில் அதே தினம், அதே நேரத்தில் குத்பா ஓதியதாக வாதிட்டனர். இவ்வாறு கணக்கிட்டபோது முப்பது ஊர்களின் முப்பது இடங்களில் அதே நாள் அதே நேரத்தில் இவர் குத்பா ஒதியிருந்தமை தெரிய வந்தது. ஆனால் அவர் எங்களூரில் எங்கள் கண்ணெதிரேயே மிம்பரில் இருந்து கொண்டிருக்கக் கண்டோம் . . . (ஸூபிய்யா பீ மீஸானிஸ் ஸூன்னா 20)

அல்லாஹ் தான் அனுப்பிய எந்த நபிக்குமே இவ்வாறானதொரு அதிசயத்தைக் கொடுக்கவில்லை. இது உன்மையெனில் நபியவர்களுக்கு எப்போதாவது இப்படி நிகழ்ந்துள்ளதா? சிந்தியுங்கள்! அவர்களுக்கு எப்படியான இக்கட்டான நிலைகளெல்லாம் ஏற்பட்டன. இப்படி உருமாறி ஒரேநேரத்தில் பல இடங்களிலும் தோன்றும் விச‌யம் உன்மையெனில் சாத்தியமெனில் ஒரே நேரத்தில் உலகின் பல இடங்களுக்கும் சென்று இஸ்லாத்தைப் பரப்பியிருக்க முடியுமே? அந்த இடங்களுக்கெல்லாம் தோழர்களை அனுப்ப வேண்டியதில்லையே?

எனவே அல்லாஹ்வால் அருளப்பட்ட பகுத்தறிவில் அணுவளவேனும் பாக்கி வைத்திருக்கக்கூடிய ஒருவன்கூட இவ்வாறான செய்திகளை உண்மைப்படுத்த மாட்டான். வழிகெட்ட சூஃபிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டு பகுத்தறிவை மகான்களுக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்ட மூளையற்றவர்கள் வேண்டுமானால் இவ்வாறான விச‌யங்களை உண்மைப்படுத்தலாம். இவ்விச‌யம் ஒன்றில் திட்டமிடப்பட்ட வெறும் ஏமாற்று வேலையாக இருக்கும், இல்லாவிடில் சைய்த்தான்களின் உதவியுடன் செய்யப்படும் செட்டப்பாக இருக்க வேண்டும். சூஃபிகள் தமது இலக்கை அடைவதற்காக செய்த்தானுக்கு சிரம் பணிந்து சாஷட்டாங்கம் செய்யவும் தயங்கமாட்டார்கள்.

5 – குர்ஆன் ஹதீஸ் சட்டங்களை மறுக்கும் சூஃபித்துவம் .

ஸூபிகள் அல்குர்ஆனைப் பொறுத்த வரைக்கும் அது அல்லாஹ்வுடையது என்று ஏற்றுக் கொண்டாலும் அதன் சட்டங்களை மறுப்பதற்கு – நடைமுறைப் படுத்தாமல் புறக்கணிக்க இரண்டு வழிகளைக் கையாள்கின்றனர் .

அ – குர்ஆனின் சட்டதிட்டங்கள் அனைத்துமே அடிமட்டத்திலுள்ள- அல்லாஹ்வை நன்கு அறியாத பாமர மக்களுக்காகவே சொல்லப்பட்டிருக்கின்றன. உண்மையான மெஞ்ஞான அறிவைப்பெற்ற சூஃபி மகான்கள் எவ்வித வணக்க வழிபாடுகளும் செய்யவேண்டியதில்லை, அவர்கள் சரீஅத் சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டியதுமில்லை என்பார்கள் .

இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டவைகள் அனைத்தும் இவர்களுக்கு ஹலாலாகும். மது மாது உற்பட அனைத்துமே இவர்களைப் பொறுத்த வரைக்கும் இபாதத்கள் என்ற குப்ரான கருத்தைக் கொண்டிருக்கின்றனர். அப்படியானால் முஹம்மத் (ஸல்) உற்பட அனைத்து நபிமார்களுமே இறுதி மூச்சு வரை தொழுது கொண்டுதானே இருந்தார்கள்? நபியவர்கள் மரணப் படுக்கையிலிருக்கும்போதுகூட தமது தோழர்களின் உதவியுடன் இரு புறமும் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொள்ள பள்ளிக்குச் சென்று தொழுதார்களே அவர்களது வாழ்க்கை பற்றி அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா ‘நபியவர்களின் பண்புகள் அனைத்தும் குர்ஆனாகவே – குர்ஆனுக்கேற்பவே இருந்தது’ என்று கூறியுள்ளார்களே … அப்படியாயின் நபியவர்கள் அடிமட்ட பாமர மனிதரா ? அவர்களுக்கு இந்த மெஞ்ஞானம் கிடைக்கவில்லையா என்று கேட்டால் அதற்குத் தரும் பதில் குப்ரின் மேல் குப்ராகவே இருக்கின்றது . ஆம் அவர்கள் சொல்கின்றார்கள்; நபிமார்களுக்கு இந்த மெஞ்ஞானம் கொடுக்கப் படவில்லைதான். நபிமார்கள் மெஞ்ஞானம் எனும் அறிவுக் கடலின் கரையிலேயே நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் சூஃபிகளான நாங்களோ அந்த மெஞ்ஞானத்தின் ஆழ்கடல் வரைக்கும் சென்று மூழ்கியிருக்கின்றோம் என்கின்றனர். ஆதாரம் : (சூஃபித்துவத்தின் சுய ரூபம் 450.)

ஆ – அல்குர்ஆன் போதனைகளை மறுக்க இவர்கள் கடைப்பிடிக்கும் அடுத்த யுக்தி அல்குர்ஆனுக்கு உள் அர்த்தம் வெளி அர்த்தம் என இரண்டு வகையான அர்த்தங்கள் உள்ளன என வாதிடுகின்றனர். சாதாரண அறிஞர்கள் இதன் உள் அர்த்தங்களை அறிந்து கொள்ளமாட்டார்கள். சூஃபித்துவ மெஞ்ஞான மேதைகளுக்கே?? இதன் உண்மை அர்த்தம் புலப்படும் என்று கதையளக்கின்றனர்.

உதாரணத்திற்கு மூஸா நபிக்கு அல்லாஹ் நபித்துவத்தை வழங்கிய வேளை ‘உனது இரு காலணிகளையும் கழட்டு ஏனெனில் நீ புனிதமான ஒரு இடத்தில் இருக்கின்றாய்’ என்றான் இங்கு ‘இரண்டு காலணிகளையும் ‘ என்பதற்கு அர்த்தம் உலகஆசை, சொர்க்கத்து ஆசை ஆகியவற்றைக் களைந்து விடு என்பதாகும் என வாதிடுகின்றனர்.

அதே போன்று நபி இப்றாஹீம் அவர்கள் பிரார்த்திக்கும் போது ‘என்னையும் என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாற்றுவாயாக என்று பிரார்த்தித்தார்கள். அதற்கு விளக்கமளிக்கும் சூஃபிகள் ‘சிலைகள் என்பதன் அர்த்தம் தங்கம் வெள்ளி போன்றவற்றிலுள்ள உலக மோகம்தான், மாறாக உண்மையில் சிலை வணக்கத்தை விட்டும் அவர்கள் பாதுகாப்புத் தேடவில்லை ஏனெனில் சிலையும் அல்லாஹ்தான் என உளறுகின்றனர்.. (நூல் : சூஃபித்துவமும் கஸ்ஸாலியும் ப: 131 )

அல்லாஹ்வின் அன்பு மாத்திரம் தான் உள்ளத்தில் இருக்க வேண்டுமென வாதிடும் இந்தப் போக்கிரிகளின் கருத்துப்படி தங்கம் வெள்ளி உலக வஸ்த்துக்கள் கூட அல்லாஹ்தானே? பிறகு ஏன் அவற்றின் ஆசை மனதில் இருக்கக் கூடாது .? அவற்றை வெறுக்க வேண்டுமென பிரச்சாரம் எதற்கு? அல்லாஹ்வுக்கே வெளிச்சம்!! .

அவ்வாறே நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸ்களை, பொன் மொழிகளை மறுப்பதற்கு இந்தக் கயவர்கள் மற்றுமொரு யுக்தியைக் கையாள்கின்றனர் . இது பற்றி பிரபல சூஃபித்துவப் பித்தனும் கிறுக்கனுமாகிய இப்னு அறபி இவ்வாறு உளறுகின்றான்…….

‘எத்தனையோ ஹதீஸ்கள் அவற்றின் அறிவிப்பாளர்கள் வரிசையைப் பார்க்கும் போது அவை ஸஹீஹானதாக, ஏற்றுக்கொள்ளக் கூடிய அமைப்பில் உள்ளன. (அதன்படி மக்கள் அமல் செய்து கொண்டும் இருக்கின்றனர்.) ஆனால் துன்யா மோகம் எனும் போலித்திரைகள் நீக்கப்பட்ட சூஃபிகளில் ஒருவர் தனது கஷ்புடைய நிலையில் ஞானப் பார்வையால் நபியவர்களைச் சந்திப்பார். அவர்களிடத்தில் இந்த ஹதீஸ் பற்றிக் கேட்ட போது நபியவர்கள் நான் அப்படியொரு ஹதீஸைச் சொல்லவில்லையே அப்படியொரு தீர்ப்பை வழங்க வில்லையே எனக் கூறி மறுத்து விடுவார்கள். எனவே அந்த சூஃபிமகான் இந்த ஹதீஸ் போலியானது, பலவீனமானது என்பதை அல்லாஹ்விடமிருந்து நபி மூலம் நேரடியாகக் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் அறிந்து கொண்டு அதன்படி செயற்படுவதை விட்டு விடுவார். எனினும் பாமரர்கள் (அதாவது ஹதீஸ் கலை அறிஞர்கள்) அதன் அறிவிப்பாளர் வரிசை சரியாக உள்ளதே என்பதை மாத்திரம் பார்த்துக் கொண்டு அதன்படி அமல்ச் செய்து கொண்டிருப்பார்கள். யதார்த்தத்தில் உண்மை அதுவல்ல. (நூல் : குர்ஆன் தராசில் சூஃபித்துவம் ப: 17)

எனவேதான் சூஃபிகள் மார்க்கம் எனும் போர்வையில் தமது நச்சுக் கருத்துக்களைப் பரப்புவதற்கு ஏதுவாக தாம் அறிவை அல்லாஹ்விடமிருந்தும் நபி (ஸல்) அவர்களிடமிருந்தும் நேரடியாக தகவல்களை எடுப்பதாக நாடகமாடுகின்றனர் . ‘ஹத்த தனீ கல்பீ அன் றப்பீ’ என்னுள்ளம் எனது இறைவன் சொன்னதாக அறிவிக்கின்றது … என்று ஆரம்பித்து தம் விசக் கருத்தை மக்கள் மத்தியில் விதைப்பார்கள் .

இது பற்றி பிரபல வழிகேடன் இப்னு அறபி பேசுகையில்..

எங்களில் சிலர் நபியவர்களின் பிரதிநிதியாவார்கள். தமக்குக் தேவையான சட்டங்களை நேரடியாக நபியவர்களைச் சந்தித்துக் கேட்டறிந்து கொள்வார்கள், அல்லது தமது சுய ஆராய்ச்சியின் மூலம் அதற்குத் தீர்வு கண்டு கொள்வார்கள்.. எங்களில் இன்னும் சிலர் நேரடியாக அல்லாஹ்விடமிருந்தே தமக்குத் தேவையான சட்டங்களை எடுத்துக் கொள்கின்றனர் .இவர்கள் உலகிலுள்ள அல்லாஹ்வின் பிரதிநிதியாவார்கள். (ஆதாரம் தபகாத்துஸ் ஷஃரானி– சூஃபித்துவம் குர்ஆன்தராசில் 31 )

தொடரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *