[கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – 11

6– உலகத்தையே ஆட்சிசெய்யும் ‘ஸூபி ராஜ்ஜியம்’.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையே கடித்த குள்ள நரி என்ற முதுமொழிக்கேற்ப இந்த மதிகெட்ட சூஃபிகள் இஸ்லாத்தின் ஒவ்வொரு தூண்களிலும் சிறிது சிறிதாகக் கை வைத்து ஆட்டங்காணச் செய்து முதற்கட்டமாக தாம் இறை நேசச்செல்வர்கள் என்று புருடா விட்டு அதற்கப்பால் தமக்குக் கராமத் இருப்பதாகக் கூறி நபிமார்களுக்கு அல்லாஹ் கொடுத்த முஃஜிஸா அற்புதங்களைத் தோற்கடிக்கும் வகையில் போலி அற்புதங்களைப் புனைந்து,

அதற்கப்பால் ஒருபடி மேலே சென்று நபிமார்களை விடவும் தாம் உயர்ந்தவர்கள் என்று வாதாடி இறுதியில் அல்லாஹ்வையே நாங்கள் தோற்கடித்து விரட்டி விட்டு அவனிடமிருந்து ஆட்சிப் பொறுப்பைப் பறித்துக் கொண்டோம். என்று சொல்வதைப் போன்று அல்லாஹ்வுக்குரிய அனைத்து வல்லமைகள் அதிகாரங்கள் அனைத்தும் தமக்கும் இருப்பதாக வாதிக்கும் நிலைக்கு வந்து விட்டனர்.

இதனை சிலர் நம்பாமல் இருக்கலாம். ஏற்க மறுக்கலாம். அதற்காகத்தான் அவர்கள் கூறும் சில அதிசய நிகழ்வுகளை மாத்திரம் தொட்டுக் காட்டுகின்றேன். புட்டுக் காட்டுவதானால் அதற்கே தனியாக பெரியதொரு புத்தகம் எழுத வேண்டியிருக்கும். இச்சம்பவங்களை சில சூஃபித்துவ பக்தர்கள் ஆதாரமற்றவை, மகான்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டவை என்று கூடக் கூறலாம். ஆனால் இச்சம்பவங்கள் உண்மையா? என்று ஆராய்ந்தறிவதில் அர்த்தமில்லை. காரணம் இவற்றில் அனேக சம்பவங்களில் இடம்பெறும் பாத்திரங்களுக்கு முகவரியேயில்லை. என்றாலும் இச்சம்பவங்கள் அவர்களது புத்தகங்களில் உள்ளன. அவர்களால் போதிக்கப்படுகின்றன. அதற்கும் மேலாக அவர்களிடம் இந்த நம்பிக்கை புரையோடிப்போய் அவர்களின் இதயங்களில் சங்கமித்து நிற்கின்றன . அவற்றை இவர்கள் வெளிப்படையாகவே பேசுகின்றனர், பிரச்சாரம் செய்கின்றனர். எனவே அல்லாஹ்வின் சக்திகள் அனைத்தும் தமக்கும் இருப்பதாக சூஃபிகள் வாதிக்கின்றனர் என்பதை நிரூபிக்கவே பின்வரும் நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றேன் …

1- இப்படியும் பிள்ளை வரம்.

ஞான வழி நடந்த இறைநேசச் செல்வர்களில் ஒருவரிடத்தில் ஒருவர் வந்து தனக்காக ஒரு ஆண் குழந்தை கிடைக்க இறைவனிடம் துஆச் செய்யுமாறு வேண்டினார். அதற்கு ஷேக் அவர்கள் ‘அதற்காக பெருந்தொகைப் பணம் செலவாகுமே ஒரு தொகைத் தங்கக் காசுகள் ஸதகாச் செய்வதற்காக எனக்குத் தர வேண்டும் என்றார். அதற்குச் சம்மதித்த அவர் சொன்னபடி பணமுடிச்சைக் கொண்டு வந்து கொடுத்தார் . அதன் பின் ஆண் குழந்தை கிடைப்பதற்காக துஆச் செய்தார். ஆனால் அவருக்குப் பெண்குழந்தையே பிறந்தது. இதனால் ஆச்சரியப்பட்ட அவர் ஷேக் அவர்களே!! ஆண்குழந்தை கிடைக்குமென்றீர்களே பெண் குழந்தை தானே பிறந்துள்ளது என்றார். இதைக் கேட்ட ஷேக் ‘நீ தரவேண்டிய பணத்தில் குறைபாடு செய்து விட்டாய், அதனால் உனக்குக் கிடைத்த குழந்தையிலும் குறை ஏற்பட்டு விட்டது’ என்றார். அதனால் கைசேதப்பட்ட அந்த நபர் ஷேக் அவர்களே உண்மை தான். அதற்கு ஏதேனும் பரிகாரமுண்டா ? என வினவ ஆம் உண்டு. மிகுதிப்பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்றார். உடனே அந்த மனிதர் மிகுதிப் பணத்தைத் திருப்பிக் கொடுத்ததும் ஆம் இப்போது வீட்டுக்குச் சென்று பார் என்றார். என்ன ஆச்சரியம்!! வீட்டுக்குச் சென்று பார்த்ததும் அதே பெண் குழந்தை ஆண் குழந்தையாக மாறியிருந்தது. (கஸ்பு ஸூபிய்யா 444)

2- சொர்க்கத்தை விற்பனை செய்யும் சூஃபிகள்.

ஷேக் மத்யன் அஹ்மத் அவர்களும் பிரபல சூஃபி மகானாவார்கள். ஒருமுறை அவரிடத்தில் ஒரு பெண் வந்து முப்பது பொற்காசுகளைக் கொடுத்து எனக்கு மறுமையில் சொர்க்கம் வேண்டும் என்றாள் .அதற்கவர் இத்தொகை போதாது என்றார். இதைத் தவிர வேறெதுவும் தன்னிடம் இல்லையென்று அவள் கூறியதும் சிறிது யோசித்து விட்டு பின்னர் அவள் சுவர்க்கம் செல்வதற்குத் தான் பொறுப்பென ஒப்புக் கொண்டார். பின்னர் அப்பெண் இறந்ததும் அவளின் உறவினர்கள் இவ்வொப்பந்தம் செல்லாது என்று கூறி அப்பணத்தைக் கேட்டு ஷேக்கிடம் வந்தார்கள். அன்றிரவு அப்பெண் அவர்களின் கனவில் வந்து ‘ஷேக் அவர்கள் வாக்குறுதியளித்தவாறு எனக்கு சொர்க்கத்தைத் தந்து விட்டார்கள் .எனவே அவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்’ என்றாள். (தபகாத்துஷ;ஷஃரானி 2-102 )

3-சூஃபிகளின் ராஜ்ஜியமா? கேடிகளின் அராஜகமா?

லவ்ஹூல் மஹ்பூளில் உள்ளதை அறியும் ஸூபிகள்:
செய்யத் முஹம்மத் ஸூவைமிய் அவர்களும் பிரபல சூஃபித்துவ மகானாவார்கள். அவர்களுக்கு மரண வேளை நெருங்கிய போது மலக்குல் மௌத்தானவர் அவர்களிடம் உயிரைக் கைப்பற்ற வந்தார்கள். அதற்கு ஷேக்கவர்கள் நீர் தவறான தகவலினடிப்படையில் என்னிடம் வந்திருக்கின்றீர். எனக்கு இன்னும் அஜல் இருக்கின்றது இப்போது சென்று லவ்ஹூல் மஹ்பூள் பலகையைப்பார் என்றார். இதற்கேற்ப அவர் சென்று பார்த்தபோது இன்னும் பத்து வருடங்களுக்கு அவரது வாழ்நாள் நீடிக்கப்பட்டிருந்தது. பின் அவர்களுக்கு மரணவேளை நெருங்கிய போது தனதுமனைவியிடம் ‘தனக்குப்பின் நீ எவரையும் மணக்கக் கூடாது’ என்று கட்டளையிட்டார்கள்.

(அவரின் மனைவியுடன் அவர் ஒரு போதும் உடலுறவு கொள்ளாததால்) மனைவி கன்னிப் பெண்ணாகவே இருந்தார். இது பற்றி அப்பெண் உலமாக்களிடம் கேட்ட போது இச்சட்டம் நபியவர்களுக்கு மாத்திரமுள்ளது. எனவே நீ தாராளமாக மறுமணம் செய்யலாம் என்றார்கள் . இதன்படி அப்பெண் மறுமணம் செய்த போது முதலிரவில் கணவனுடன் இருந்த வேளை அந்த ஷேக் அங்கு தோன்றி அவளின் கணவனை ஈட்டியால் குத்திக் கொலை செய்துவிட்டார். அதன்பின் அப்பெண் மரணிக்கும் வரைக்கும் கன்னியாகவிருந்தே இருந்து இறந்தார். (தபகாத்துஷ்ஷஃரானி 2-103)

4-கர்ப்பத்திலுள்ளதையும், லவ்ஹூல் மஹ்பூளையும் அறிந்த சூஃபிமகான்.

ஜாக்கீர்கர்த்தீ என்பவர் பிரபல சூஃபியாவார்கள். இவர் ஒருமுறை வீதியால் செல்லும் போது பெண்கள் கூட்டமாகச் செல்வதைக் காண நேர்ந்தது. உடனே ஷேக் அவர்கள் ஒரு பெண்ணைச் சுட்டிக்காட்டி இப்பெண் காளை மாட்டின் மூலம் கர்ப்ப முற்றிருக்கின்றாள். அதன் நிறம் சிவப்பு அதன் வடிவம் இன்னது என்று சொன்னார். பின்னர் அப்பெண் பிரசவித்த பின் காளை மாட்டின் குழந்தையை அறுக்க நேர்ச்சை செய்து அதற்கென ஒரு நபரையும் நியமித்தார். மற்றுமொருவர் அவரிடம் வந்து தான் கடற்பயணம் செய்ய விருப்பதாகக் கூறினார். அதற்கு அந்த மகான் கடலில் உனக்கு ஏதேனும் இன்னல்கள் ஏற்பட்டால் உடனே என் பெயரைக் கூறி அழைத்து அபயம் தேடு. நான் அபயமளிப்பேன் என்றார். அதன் பின் ஷேக் கூறினார். நான் ஒருவரைப் பாதுகாப்பதாக வாக்குறுதியளிப்பதென்றால் அவரின் பெயரையும் அவர் பற்றிய தகவல்களையும் லவ்ஹூல் மஹ்பூள் எனும் ஏட்டைப் பார்த்து அறிந்து கொண்டதன் பின்னரே வாக்குறுதியளிக்கின்றேன் என்றார். (தபகாத்துஷ்ஷஃரானி 2-106)

5 – மாண்டோரை மீட்டு உயிர் கொடுக்கும் சூஃபி.

ஷேக் அதிய் அவர்களிடம் நான் ஒரு முறை சென்றிருந்தேன். அப்போது வெளியூரிலிருந்து ஹூஸைன் என்பவரின் தலைமையில் ஒரு கூட்டத்தினர் அவரைச் சந்திக்க வந்திருந்தனர். அப்போது ஷேக்கவர்கள் வாருங்கள் இந்தத் தோட்டத்தைச் சுற்றி சுவரமைப்போம் என்றார். உடனே அனைவரும் அவருடன் சென்று மலையைப் பெயர்த்துக் கற்களை எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பாறாங்கல் ஒருவர் மீது விழ அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்து அவரது உடல் சின்னாபின்னமாகி விட்டது. இதனை மக்கள் ஷேக் அவர்களிடத்தில் முறையிட்ட போது ஷேக் வானத்தின் பக்கம் கையை உயர்த்தினார். உடனே அம்மனிதர் எவ்வித மாற்றமுமின்றி முன்பிருந்தது போல் உயிர் பெற்றெழுந்தார். (ஜாமிஉன் நப்பஹானி 2- 297 )

பார்த்தீர்களா? … இந்தச் சூஃபியாக்கள் எவ்வளவு தந்திரமாக பாமர மக்களின் ஈமானுடன் விளையாடியிருக்கின்றார்கள். அல்லாஹ்வின் தனிப்பட்ட வல்லமைகளில் எதையுமே விட்டு வைக்காது ஆக்கல், அழித்தல், காத்தல், உயிர் கொடுத்தல், பிள்ளை கொடுத்தல் உலகில் அதிகாரம் செலுத்தல் போன்ற அல்லாஹ்வின் தனிப்பட்ட வல்லமைகள் அனைத்தையும் தமக்கு இருப்பதாக வாதிக்கும் இப்போலிச் சாமியார்களை ஓட ஓட விரட்டிக் கொல்ல வேண்டும். இவர்களால் எத்தனை லட்சோபலட்சம் மக்கள் ஈமானை இழந்து இவர்கள் காலடியில் தவம் கிடந்து நரகச்சீட்டைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.

கராமத் காட்டுகின்றார்களாம் !!

முதலில் கராமத் எல்லாம் இப்படி இறைவனை மறுத்து நான் தான் அல்லாஹ் என்பதாக வாதிடும் ஷைத்தான்களுக்கு ஏற்படுமா? அப்படியே நடந்தாலும் அது கராமத் அல்ல, ஷைத்தானின் சூழ்ச்சி !!. இது போன்ற சூழ்ச்சிகளை இவர்களென்ன சிலை வைத்து வணங்கும் இந்துசாமிகளும், மடாதிபதிகளும் சன்னியாசிகளும் கூடச் செய்கின்றார்கள் தானே ! அப்படியெனில் அவர்களும் இறைநேசச் செல்வர்களோ?

எனவே கராமத் என்பது அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்து நடக்கும் நல்லடியார்களில் சிலருக்கு அல்லாஹ் தன் புறத்திலிருந்து அம்மனிதனின் எவ்வித விருப்பு வெறுப்பின்றி அவரிடம் வெளிப்படுத்தும் சிலவற்றைக் குறிக்கும். இவ்வாறு கராமத் ஏற்படாதவர்கள் கராமத் உள்ளவர்களை விட அல்லாஹ்விடம் நெருங்கியவர்களாகவும் இருக்கலாம். ஏனெனில் நபியவர்களுக்கடுத்து அல்லாஹ்வின் அன்புக்குரியவர்கள் ஸஹாபாக்கள். இவர்களில் அதிகம் பேருக்கு எவ்விதமான கராமத்துகளும் இடம்பெற வில்லை. ஒரு முஃமின் தனக்கு சில வேளை கராமத் நடந்தாலும் கூட அதை மறைத்து மக்கள் பார்த்து விடக் கூடாதேஎனப் பயந்து – ஒரு வேளை ஷைத்தானின் சூழ்ச்சியாக இருக்குமோ, அல்லது அல்லாஹ்வின் சோதனையாகவிருககுமோ என அஞ்சி அடக்கத்துடன் இருப்பான். இப்படித்தான் உண்மையிலேயே கராமத் கொடுக்கப்பட்ட சில நல்லடியார்கள் கூட வாழ்ந்திருக்கின்றார்கள். இவர்கள் ஒரு வேளை அல்லாஹ் நம்மைச் சோதிப்பதற்காகத்தான் இப்படித் தந்திருக்கின்றானோ என அஞ்சி நடுங்குவார்கள். மற்றவர்கள் அதைப் பார்த்து விட்டால் பிரபலப்படுத்தி விடுவார்களேயென்று பயப்படுவார்கள்.

நபி ஸூலைமான் (அலை) அவர்களுக்கு உலகின் அனைத்தையும் வசப்படுத்தி நினைத்ததை நடத்திக் காட்டும் அற்புதத்தை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்திருந்தான். பல்கீஸ் ராணியின் சிம்மாசனம் ஒரு நொடிப்பொழுதில் தன்னிடத்தில் இருக்கக் கண்ட அவர்கள் என்ன சொன்னார்கள் …

‘அவர் சிம்மாசனம் தன் முன்னால் இருப்பதைக் கண்டதும் நிச்சயமாக இது அல்லாஹ் எனக்கருளிய அருளாகும். நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா ? அல்லது மாறுசெய்கின்றேனா ? என என்னைச் சோதிப்பதற்காகவே எனக்கு இதைத் தந்துள்ளான்’ என்றார்கள். (ஸூரா அந் நம்ல் 40 ம் வசனம்.)

எனவே அல்லாஹ்வுக்கு அடிபணிந்து நடக்காத – அவனுடைய வல்லமையுடன் போட்டிபோடும் இச் சூஃபிகளிடம் வெளிப்படுவது உண்மையில் ஷைத்தானிய சேஷ்டைகளே ! என்பது தெளிவாகின்றது. எனவே இவர்களின் சதி வலையில் வீழ்ந்து ஈமானை இழந்து விடாமல் குர்ஆன். ஹதீஸின் பக்கம் திரும்பி ஸஹாபாக்களின் வாழ்வு வாழ்ந்து இறை நேசர்களாக மரணிப்போமாக . . ஆமீன்

தொடரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *