[ கட்டுரை ] – நபித்தோழர்கள்

நபித்தோழர்கள் ( ஸஹாபாக்கள் ) என்பதற்கான வரையறை யாதெனில்,

 1. நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும்.
 2. அல்லாஹ்வை ஏக இறைவனாகவும், நபி (ஸல்) அவர்களை இறைவனின் தூதராகவும் நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கையுடன் மரணித்திருக்க வேண்டும்.

மேற்கண்ட இவ்விரு நிலையிலிருந்தோர் “ஸஹாபி” என்ற வரையறைக்குள் இருப்பர். மேலும் நபி (ஸல்) அவர்களை நேரில் சந்தித்திருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை.

நபிமார்களுக்குப் பிறகு, மனித சமூகத்தில் சிறந்தவர்கள் நபித்தோழர்கள். அவர்கள் அனைவருமே தலைசிறந்த நல்லோர்கள். அவர்களை நபி (ஸல்) அவர்களின் தோழர்களாக அல்லாஹ்தான் தேர்ந்தெடுத்தான். அல்லாஹ்வே அவர்களை பரிசுத்தப்படுத்தி, பொருந்திக்கொண்டான். மனிதகுலத்தில் நபிமார்களுக்குப் பிறகு இத்த‌ கைய உயர்ந்த அந்தஸ்தத்தை பெற்றவர்களே ஸஹாபாக்கள். இவர்களைப்பற்றி திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் :

مُّحَمَّدٌ رَّسُولُ اللَّـهِ ۚ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ ۖ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّـهِ وَرِضْوَانًا ۖ سِيمَاهُمْ فِي وُجُوهِهِم مِّنْ أَثَرِ السُّجُودِ ۚ ذَٰلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ ۚ وَمَثَلُهُمْ فِي الْإِنجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَىٰ عَلَىٰ سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ ۗ وَعَدَ اللَّـهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

﴿ سورة الفتح ٢٩﴾

முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்;  அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும்   (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்;  இதுவே தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி (ய பின்) அதை பலப்படுத்துகிறது. பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவாசியிகளை மகிழ்வடையச்செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது. இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோபமூட்டுகிறான் – ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான். (ஸூரா அல்ஃபத்ஹு : 29)

இத்தகைய அந்தஸ்தத்தைப் பெற்ற நபித்தோழர்களின் சிறப்புகளில் சில படித்தரங்களும் உண்டு. இருப்பினும் ஸஹாபாக்கள் அனைவரையுமே மிகவும் சிலாகித்து பல குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளையும் காணமுடிகிறது.

இத்தகைய சிறப்புப்பெற்ற ஸஹாபாக்களில்  மக்காவிலிருந்து மதீனாவுக்கு அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக நாடு துறந்து அகதிகளாக வந்தவர்கள் முஹாஜிர்கள் என்றும்,  முஹாஜிர்களுக்கு அடைக்கலம் தந்து அவர்களுக்கு தங்களின் உடமைகள் அனைதையும் பங்கிட்டு கொடுத்த  மதீனாவாசிகள் அன்சாரிகள் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்கள்.

இவர்களில் அன்சாரிகளைவிட முஹாஜிர்களை சிறப்பித்து கீழ்வரும் வசனம் பேசுகிறது. அல்லாஹ் கூறுகிறான் :

وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّـهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

﴿ سورة التوبة ١٠٠﴾

இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக,  மகத்தான சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும். (9:100)

அதுபோலவே ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன்னர் எவர்கள் அல்லாஹ்வுக்காக செலவு செய்து, அல்லாஹ்வுக்காக போரிட்டார்களோ அவர்கள், அதன்பின்னர் அல்லாஹ்வுக்காக செலவு செய்து, போரிட்டவர்களைவிட சிறந்தவர்கள் என்றும் குர்ஆன் கூறுகிறது. இதைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான் :

لَّقَدْ رَضِيَ اللَّـهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا ﴿ سورة الفتح ١٨﴾

முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான். (48 : 18)

وَمَا لَكُمْ أَلَّا تُنفِقُوا فِي سَبِيلِ اللَّـهِ وَلِلَّـهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ لَا يَسْتَوِي مِنكُم مَّنْ أَنفَقَ مِن قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَ ۚ أُولَـٰئِكَ أَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِينَ أَنفَقُوا مِن بَعْدُ وَقَاتَلُوا ۚ وَكُلًّا وَعَدَ اللَّـهُ الْحُسْنَىٰ ۚ وَاللَّـهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ ﴿ سورة الحديد ١٠ ﴾

(மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார், (மக்காவின் வெற்றிக்குப்) பின், செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள், எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (57 : 10)

மேற்கூறப்பட்ட சிறப்புக்களையுடைய ஸஹாபாக்களில் நான்கு கலீஃபாக்கள் அதிக‌ சிறப்புக்குரியவர்களாக நபி (ஸல்) அவர்களால் குறிப்பிட்டு சொல்லப்பட்டவர்கள் யாரெனில் :

 1. அபூபக்கர் சித்தீக் (ரழி)
 2. உமர் இப்னு கத்தாப் (ரழி)
 3. உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி)
 4. அலீ இப்னு அபுதாலிப் (ரழி)

ஆகிய நால்வர் ஆவார்கள். இவர்கள் மட்டுமின்றி இவ்வுலகில்  வாழும்போதே “சுவர்க்கவாசிகள்” என நபி(ஸல்) அவர்களால் நற்செய்தி சொல்லப் பட்ட முதல் பத்து (10) நபர்களில் மேற்சொன்ன நால்வரும் அதன் பின்னர்

 1. அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி)
 2. ஸஅது இப்னு அபீவக்காஸ் (ரழி)
 3. தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி)
 4. சுபைர் இப்னு அவ்வாம் (ரழி)
 5. அபூஉபைதா ஆமிர் இப்னு ஜர்ராஹ் (ரழி)
 6. ஸஅது இப்னு ஜைத் (ரழி)

ஆகிய ஆறுபேரும் ஆவர். இவையல்லாமலும் பல சந்தர்ப்பங்களில், நபி (ஸல்) அவர்கள் பல நபித்தோழர்களுக்கு சுவர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் கூறியுள்ளார்கள். இவ்வாறாக பலவகையில் சிறப்புப்பெற்ற ஸஹாபாக்களில் யாரெல்லாம் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சார்ந்த நபித்தோழர்களோ, அவர்கள் அனைவரும் ஏனைய‌ நபித்தோழர்களைவிட மிகச்சிறந்தவர்கள் ஆவர். இதற்கு ஆதாரமாவது யாதெனில் ஒவ்வொரு முறையும் நபி (ஸல்) அவர்கள்மீது ஸலவாத்து சொல்லப்படும்போதும் நபிகளாரின் குடுப்பத்தினர்மீதும் (வ அலா ஆலி முஹம்மதின்) ஸலவாத்து சொல்லப்படுகிறது.

இவ்வளவு சிறப்புகளுக்கும் உரித்தான நபித்தோழர்கள் விஷயத்தில் நமது நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்றால் :

நபித்தோழர்களை நேசிப்பது அவசியமாகும்.  அவர்களில் அனைவரையும் நாம் நேசிக்க வேண்டும். அவர்களுக்கிடையே எவ்வித பாகுபாடும் ஏற்படுத்துவது கூடாது. அனைத்து ஸஹாபாக்களுமே நமது கண்ணியத்திற்கும் நேசத்திற்கும் உரித்தானவர்கள் என்ற உறுதியான நிலைப்பாடு வேண்டும். அவர்கள் அனைவருக்காகவும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும்.  அவர்கள் அனைவரைப் பற்றியும் உள்ளத்தில் நல்லெண்ணம் கொள்ள வேண்டும். இதைப்பற்றி ஏக இறைவனாகிய அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு பிரார்த்திக்கும்படி கூறுகிறான்.

وَالَّذِينَ جَاءُوا مِن بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ

﴿ سورة الحشر ١٠ ﴾

“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். (59 : 10)

நபித்தோழர்களை ஏசுவதோ, கண்ணியக்குறைவாக கருதுவதோ, பேசுவதோ பாவச்செயலாகும். இதைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

யார் எனது தோழர்களை ஏசுகின்றார்களோ, அவர்கள் மீது அல்லாஹ்வும், வானவர்களும், மற்றும் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தினரது சாபமும் உண்டாகட்டும், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) – நூல் : தப்ராணி )

மக்களில் சிறந்தவர்கள் என் சமுதாயத்தினர் ஆவர். அதற்குப் பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள், அதற்குப் பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ( அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரழி ) – நூல் : புகாரி, முஸ்லிம் )

எனவே உத்தம நபிகளாரின் உன்னத தோழர்களாம் ஸஹாபாக்களை நேசிப்பதும், அவர்களது விசயத்தில் கண்ணியத்தோடு அணுகுவதும் ஒவ்வொரு முஃமினுடைய கட்டாய கடமையாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கிறான்.

ஆக்கம் : எம். ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி, ஜுபைல் – சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *