[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்

நபிவழியில் நம் ஹஜ்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

ஹஜ் கடமையை நிறைவேற்றும் நாட்கள் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. அல்குர்ஆன் சுன்னா அடிப்படையில் தமது ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வம் உள்ள சகோதரர்கள் பல நூற்களையும் குறுந்தகடுகளையும் வாங்கிப் படித்து தங்கள் அமலை முறைப்படி செய்ய முயற்சிக்க வேண்டும். ஏற்கனவே ஹஜ் பற்றி பல புத்தகங்கள் பல அறிஞர்களால் எழுதப்பட்டு விட்டன. அந்த வரிசையில் பஸ்யாலையைச் சேர்ந்த நமது தஃவா சகோதரர்களில் ஒருவரான பைஸர்தீன் அபூ பஜ்ர் அவர்கள் இது சம்பந்தமாக ஒரு சிறு வழிகாட்டல் நூலைத் தொகுத்துள்ளார்.

அவர் சில வருடங்களுக்கு முன் ஹஜ் செய்வதற்காகப் படித்தவைகளை வைத்தும், ஹஜ்ஜின் போது அவர் கண்ட மார்க்கத்திற்கு முரணான வழிகாட்டல்களைக் கண்டு சரியானதை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் விளைவுதான் இந்த நூல். இந்த நூலை  மீள்வாசிப்புச் செய்ய என்னிடத்தில் வந்த போது அவர் முன்னிலையில் சில முக்கிய திருத்தங்கள் அதிகரிப்புகள் மேலதிக விளக்கங்கள் என சில மாற்றங்கள் செய்தேன். மக்களுக்குக்குச் சென்றடையும்போது இலகுவில் புரிந்துகொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்ற அவரது எண்ணத்திற்கேற்ப அந்த நூல் இலகு நடையிலே இருந்தது. இன்ஷா அல்லாஹ் அந்த நூலை  அவரது அனுமதியுடன் முழுமையாக‌ பதிவு செய்கிறேன்.

وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ

“அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் பூரணமாக நிறைவேற்றுங்கள்.”(2:96)

எல்லாப் புகழும் வல்லவன் அல்லாஹ்வுக்கே சொந்தம். ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள் தோழர்கள் மீதும், அவரை பின்தொடர்ந்து வாழ்ந்த, வாழக்கூடிய எல்லா முஸ்லிம்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக!

அறிமுகம்

இஸ்லாமிய மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமை ஹஜ் கடமையாகும். இக்கடமையைச் சரிவரச் செய்து அதை அல்லாஹ் ஏற்றுக்கொண்டால் அவர்  கடந்த காலங்களில் செய்த எல்லாப் பாவங்களும் மன்னிக்கப் பட்டு தூய்மையானவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் நாம் செய்யும் எல்லா விதமான செயல்களையும் அல்லாஹ்வின் தூதர் காட்டித் தந்த வழியில் மட்டுமே செய்யவேண்டும். ஏனென்றால் அவரிடமே அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆசை வைப்பவருக்கு அழகிய முன்மாதிரி உண்டு என அல்லாஹ் கூறியுள்ளான். அதே போன்று “ஹஜ் கடமையை என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அந்த வகையில் புனித ஹஜ் கடமையை எமது வழிகாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில்தான் நிறைவேற்ற வேண்டும்.

ஆகவே அல்லாஹ்வின் அருளால் என்னால் முடிந்தவரை நபிகளாரைப் பின்பற்றி ஹஜ் கடமையை நிறைவேற்றிய அனுபவங்களுடன் எல்லா முஸ்லிம்களும் இக்கடமையை பூரணமாக நபி வழியில் நிறைவேற்ற வேண்டும் என்ற தேவை உணர்வுடனும்,  இந்தச் சிறு நூலை உங்களிடம் சமர்பிக்கிறேன். ஹஜ் உம்ரா செய்வோர் இதன் மூலம் பயனடைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. !

அன்புடன்.

முஹம்மத் பைஸர்தீன் அபூ பஜ்ர்

நிய்யத் :-

ஹஜ் கடமைக்குறிய நிய்யத் மூன்று வகைப்படும். தமத்துஃ,  கிரான்,  இப்ராத்,  இம் மூன்றில் ஏதாவது ஒன்றில் நிய்யத் செய்து ஹஜ் கடமையை நிறைவேற்றலாம்.

முதல் வகை :- தமத்துஃ

எமக்குறிய மீகாத் எல்லையைச் சென்றடைந்ததும் உம்ராவிற்கு மாத்திரம் லப்பைக்க உம்ரதன் என்று கூறி நிய்யத் செய்து இஹ்ராம் கட்டிக்கொள்ளவேண்டும்.1 பின்னர் மக்கா சென்று உம்ராவை செய்து முடித்ததும் இஹ்ராமை கலைந்து விடலாம். பின்னர் நாம் தங்கியிருக்கும் இடத்திலிருந்தவாரே துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் லப்பைக்க ஹஜ்ஜன் என்று நிய்யத் செய்து ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி1 ஹஜ்ஜுடைய கடமைகளை செய்ய வேண்டும். இந்த முறையில் ஹஜ் செய்பவர் குர்பானியும் கொடுக்கவேண்டும்.

(1.லப்பைக உம்ரதன்….என்ற வார்த்தையை சொல்வதுதான் இஹ்ராம். அந்த வார்த்தை சொல்லும் வேளையில் இஹ்ராமுக்குறிய ஆடையை அணிந்தவர்களாக இருக்கவேண்டும்.)

இரண்டாவது வகை  :- கிரான்

இது மீகாத் எல்லையைச் சென்றடைந்ததும் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்குமாக லப்பைக்க ஹஜ்ஜன் வ உம்ரதன் என்று நிய்யத் செய்து மக்கா சென்று தவாபுல் குதூம் எனும் தவாபை செய்து விட்டு ஸபா மர்வாவுக்கு வந்து ஹஜ்ஜையும் உம்ராவையும் நினைத்தவறாக ஸயீ செய்யவேண்டும். இந்த ஸயீயை ஹஜ்ஜுடைய தவாபுக்குப் பின் செய்யவும் முடியும். எனினும் (இப்பொழுதே) தவாபுல் குதூமுக்கு பின்னால் செய்வதுதான் சிறப்பானதாகும். இந்த வகையில் ஹஜ் செய்பவர் இஹ்ராமை கலையாமல் எட்டாம் நாளிலிருந்து செய்ய வேண்டிய ஹஜ்ஜின் கடமைகளை செய்துவிட்டு பத்தாம் நாளன்றுதான் இஹ்ராமை கலைய வேண்டும். இவர் குர்பனியும் கொடுக்கவேண்டும்.

மூன்றாவது வகை :-  இப்ராத்

இது மீகாத் எல்லையை சென்றடைந்ததும் ஹஜ்ஜுக்கு மாத்திரம் லப்பைக்க ஹஜ்ஜன் என்று நிய்யத் செய்து இஹ்ராம் கட்டிக்கொண்டு மக்கா சென்று தவாபுல் குதூம் எனும் தவாபை செய்து விட்டு இஹ்ராமைக் கலைந்து விடாது எட்டாம் நாளிலிருந்து செய்ய வேண்டிய ஹஜ்ஜின் கடமைகளை செய்துவிட்டு பத்தாம் நாளன்று இஹ்ராமிலிருந்து விடுபடல். இம்முறையில் ஹஜ் செய்பவர் குர்பானி கொடுக்கவேண்டிய அவசியமில்லை.

உம்ரா செய்யும் முறை :-

1-உம்ரா செய்யும் ஒருவர் தனது நகங்களை வெட்டி, மர்மஸ்தான, அக்குள் முடிகளை எல்லாம் அகற்றி, குளித்து தன்னைத் சுத்தமாக்கிக் கொண்டு, நறுமணங்கள் பூசி, தலைக்கும் தாடிக்கும் எண்ணை தடவிய பின் இஹ்ராம் ஆடையை அணிந்து மீகாத் எல்லையை அடைந்ததும் லப்பைக்க உம்ரதன் (உம்ராவை நாடி அல்லாஹ்வே உன்னிடம் (நான்) வந்துவிட்டேன்.) என்று கூறி நிய்யத் செய்து கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து ஹரம் எல்லையைச் சென்றடையும் வரையில் ஆண்கள் சப்தத்தை உயர்த்தியும் பெண்கள் தங்களுக்குள் மட்டும் கேட்கும் வகையிலும் பின் வரும் தல்பியாவை சொல்ல வேண்டும்.

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ
إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ

(லப்பைக் – அல்லாஹும்ம‌ லப்பைக் – லப்பைக் லா ஷரீக லக லப்பைக் –  இன்னல் ஹம்த – வன்னிஃமத – லக வல்முல்க் – லா ஷரீக்க லக்)

பொருள் : அல்லாஹ்வே! உனக்கு நான் முற்றாக செவி சாய்க்கின்றேன். இதோ நான் ஆஜராகி விட்டேன். உனக்கு எவ்வித‌ இணையும் கிடையாது. நிச்சயமாக புகழ், அருள் அனைத்தும் உனக்கே உரியவை. ஆட்சி அதிகாரம் அனைத்தும் உனக்கே சொந்தமானவை.

2-பின்னர் மக்காவில் மஸ்ஜிதுல் ஹராம் புனிதப் பள்ளிவாசலை அடைந்ததும் பொதுவாக மஸ்ஜிதுகளில் நுழையும் போது ஓதும் துஆவாகிய “அல்லாஹும் ம‌ஃப்தஹ்லி அப்வாபர் ரஹ்மதிக”  (அல்லாஹ்வே! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக!) என்று ஓதிய வண்ணம் வலது காலை முன்வைத்து கஃபதுல்லாவுக்குள் நுழைந்து முதலில் நாம் தவாபை ஆரம்பிக்க வேண்டும். (கஃபாவை ஏழு தடவைகள் சுற்றுவது ஒரு தவாபாகும்) தவாபை ஆரம்பிக்க ஹஜருல் அஸ்வத் கல்லின் பக்கம் சென்று அதைத் தொட்டு முத்தமிடவேண்டும். முடியாவிட்டால் அதன் பக்கம் திரும்பி கையால் சைகை செய்துகொண்டு அல்லாஹு அக்பர் (கையால் சைகை செய்தவர் தனது கையை முத்தமிடவேண்டிய அவசியமில்லை.) என்று கூறியவாறு தவாபை ஆரம்பிக்கவேண்டும்.

முதலாவதாக செய்யும் தவாபான தவாபுல் குதூமை செய்யும் போது பின்வரும் விடயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, தவாப் முடியும் வரை ஆண்கள் இல்திபாஃ எனும் வகையில் தனது இஹ்ராம் ஆடையை இடது கையின் தோற் பகுதியை மூடி வலது கையின் தோற் பகுதியை திறந்த  நிலையில் அமையுமாறு அணிந்து கொள்ள வேண்டும். முதலாவது  மூன்று சுற்றிலும் ஆண்கள் உடம்பு குழுங்கும் அளவுக்கு மெதுவாக‌ ஓடவேண்டும்.

கஃபாவை எமது இடது புறமாக வைத்து தவாபை ஆரம்பித்து சுற்றி வரும்போது ருக்னுல் யமானி எனும் மூலையை அடைந்துவிட்டால் அதனைத் தொடவேண்டும். (முத்தமிடக் கூடாது) நெருக்கத்தின் காரணத்தால் தொட முடியாது போனால் குற்றமில்லை. யமானி மூலையிலிருந்து ஹஜருல் அஸ்வத் கல்லு பதிக்கப்பட்டிருக்கும் மூலைவறையில் பின்வரும் துஆவை ஓதிக் கொள்ளவேண்டும்.

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

( ரப்பனா – ஆதினா – ஃபித்துன்யா ஹஸனத்தன் – வஃபில் ஆஃஹிரத்தி ஹஸனத்தன் – வகினா அதாபன்னார் )

பொருள் : அல்லாஹ்வே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மையளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! நரக வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!

ஹஜருல் அஸ்வத் கல்லை அடைந்ததும் அதை தொட்டு முத்தமிட வேண்டும். முடியாது போனால் கையால் சைகை செய்து அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறியவாறு அடுத்த சுற்றை ஆரம்பிக்கவேண்டும். யமானி மூளையை அடையும் வரை அனுமதிக்கப்பட்ட துஆக்கள், திக்ருகளை ஓதுவதோடு இன்னும் எமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்திக்கலாம்.

தவாபை முடித்துக் கொண்டதும், ஆண்கள் வலது கையின் தோற் பகுதியை மூடி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஏழு முறை கஃபாவை சுற்றி தவாப் செய்து முடிந்து விட்டால் மகாமு இப்ராஹீம் எனும் இடத்தில் இரண்டு ரக்அத்கள் சுன்னத் தொழ வேண்டும். அவ்விடத்தில் தொழ சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் கஃபாவின் எந்த இடத்திலும் தொழலாம். அத்தொழுகையில் முதலாவது ரக்அத்தில் பாதிஹா சூராவுடன் குல் யா அய்யுஹல் காபிரூன் என்ற சூராவையும்  இரண்டாம் ரக்அத்தில் பாதிஹா சூராவுடன் குல் ஹுவல்லாஹு அஹத் எனும் சூராவையும் ஓதவேண்டும். இதுவே நபி வழியாகும்.

பின்னர்  முடியுமானால் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட வேண்டும். (முடியாவிட்டால் குற்றமில்லை.)

3-பின்னர் ஸஃபா மலைக்குச் சென்று அம்மலையை நெருங்கும் போது

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ

(இன்னஸ் ஸஃபா வல் மர்வத மின் ஷஆஇரில்லாஹ்)

எனும் குர்ஆன் வசனத்தை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து கஃபாவை முன் நோக்கியவாறு ஸஃபாவில் நின்றுகொண்டு பின்வரும் துஆவை மூன்று முறை ஓத வேண்டும்.

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كَلِّ شَىْءٍ قَدِيرٌ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ

وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ

 ( லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஐஷஇpன் கதீர் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு அன்ஜஸ வஃதஹு வனஸர அப்தஹு வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு )

பொருள் : வணக்கத்துக்குறிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை இல்லை. அவனுக்கே புகழ், ஆட்சி அனைத்தும் சொந்தம். அவன் எல்லாவற்றின் மீதும் சக்தியுடையவன். அவன் வாக்கை நிறைவேற்றிவிட்டான். தனது அடியானுக்கு உதவி செய்தான். அவனே பகைவர்களை ஒழித்தான்.

ஒவ்வொரு தடவைக்குப் பின்னரும் எமக்குத் தேவையானவைகளை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்திக்கலாம். பின்னர் ஸஃபாவிலிருந்து இறங்கி மர்வாவை நோக்கி நடக்க வேண்டும். நடக்கும்போது இடையில் பச்சை அடையாளம் வந்ததும் அப்பகுதியில் ஆண்கள் மெதுவாக உடம்பு குழுங்குமளவுக்கு ஓட வேண்டும். அடுத்த பச்சை அடையாளத்தை அடைந்ததும் சாதாரணமாக நடந்து சென்று மர்வாவை அடைய வேண்டும். இவ்வாறு ஸயீ செய்யும் போது அனுமதிக்கப்பட்ட திக்ருகளை ஓதுதல், குர்ஆன் ஓதுதல், இன்னும் தனது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்தித்தல் போன்றவற்றில் ஈடுபடலாம்.

மர்வாவை அடைந்ததும் அம்மலையில் நின்று கஃபாவை முன் நோக்கியவாறு ஸஃபாவில் ஓதிய அதே துஅவை மூன்று முறை ஓத வேண்டும். ஒவ்வொரு தடவைக்குப் பின்னரும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்துவிட்டு அப்படியே ஸஃபாவை நோக்கி நடக்க வேண்டும். இவ்வாறு ஸபா மர்வாவுக்கிடையே ஏழு முறை நடக்க வேண்டும். இறுதியாக மர்வாவை அடைந்ததுவிட்டால் ஸஈ செய்வது முடிந்து விடும். அத்துடன் அங்கு துஆச் செய்துவிட்டு,

4.ஆண்கள் தமது தலைமுடியை  பூரணமாக குறைத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் தங்களது தலை முடியை சற்று கத்தரித்துக்கொள்ள வேண்டும். (ஹஜ் அல்லாத காலங்களின் உம்ராவின் போது ஆண்கள் தலை முடியை குறைப்பதைவிட சிரைப்பதே ஏற்றதாகும்.) இத்துடன் உம்ராவின் சகல கடமைகளும் முடிந்துவிடும். இஹ்ராமைக் கலைந்து எமது வழமையான ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.

1.துல் ஹஜ் எட்டாம் நாள் :-

1.தமத்து முறையில் நிய்யத் செய்த ஹாஜிகள் தாம், தங்கியிருக்கும் இடத்தில் இருந்தவாறு  ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்ள வேண்டும். ஹாஜிகள் இஹ்ராம் கட்டுவதற்கு முன்னதாக நகங்களை வெட்டி, மேல் மீசையை கத்தரித்து, சிரைக்க வேண்டிய முடிகளை சிரைத்து, குளித்து சுத்தமாகி இஹ்ராம் துணியை அணிந்து கொள்வது சிறந்ததாகும்.

ஆண்கள் தலையை மூடக் கூடாது. பெண்கள் முகத்தை மூடாமலும், கைகளில் மணிக்கட்டு வரையிலுள்ள பகுதியை மூடாமலும் மற்ற எல்லா உறுப்புக்களையும் மூடும் வகையில் ஆடை அணிந்துகொள்ள வேண்டும். (அணியும் ஆடை கருப்பாக இருந்தால் சிறப்பானதாகும்) இஹ்ராம் கட்டியிருக்கும் போது ஆண்கள் தமது இரண்டு தோற்புயங்களையும் மறைக்கும் வகையில் தமது ஆடையை அமைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் எல்லா ஹாஜிகளும் லப்பைக்க ஹஜ்ஜன்” (ஹஜ்ஜை நாடி அல்லாஹ்வே உன்னிடம் (நான்) வந்துவிட்டேன்.)  என்று நிய்யத் செய்துகொள்ள வேண்டும். இஹ்ராம் கட்டிய ஹாஜிகள் அதிகமதிகம் தல்பியாவைக் கூறிக்கொள்ள வேண்டும். பத்தாம் நாள் ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும் வரையில் தல்பியாவைக் கூறிக்கொண்டே இருக்கவேண்டும். இறுதிக் கல்லையும் எறிந்தவுடன்  தல்பியாவை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

(இப்ராத் மற்றும் கிரான் முறையில் ஹஜ் செய்கின்றவர்கள் வேறுபடுகின்றர்)

2.எட்டாம் நாள் சுபஹுக்குப் பின் ழுஹருக்கு முன்னதாக ஹாஜிகள் தல்பியா சொல்லியவாறு மினாவுக்கு சென்று அங்கே ழுஹர், அஸர், மஃரிப் இஷா ஆகிய தொழுகைகளை குறித்த நேரத்தில் நான்கு ரக்அத்களை இரண்டாகச் சுருக்கியும் மஃரிபை மூன்றாகவும் தொழுதுகொள்ள வேண்டும். அத்துடன் இந்த இரவு மினாவிலே தங்கி இருக்கவேண்டும். ஒன்பதாம் நாள் சுபஹ் தொழுகையையும் மினாவிலேயே தொழவேண்டும்.

2. ஒன்பதாம் நாள் (அரபாவுடைய நாள்) :-

 1. சுபஹ்த் தொழுகையைத் தொழுது விட்டு அதிகாலை சூரிய உதயத்துக்குப்பின் தல்பியா சொல்லியவாறு அரபாவை நோக்கி புறப்பட வேண்டும்.
 2. முற்பகலில்  குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட வேண்டும்;. அப்பிரசங்கத்தில் இஸ்லாமிய சகோதரத்துவத்தை வலியுறுத்தி உரை நிகழ்த்துவதோடு அரபா தினத்தின் சிறப்பையும், அன்றைய நாளில் ஹாஜிகள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் தெளிவுபடுத்தி உபதேசிக்கவேண்டும்.
 3. பின்னர் ஒரு பாங்கு இரண்டு இகாமத்துக்கள் கூறி ழுஹரை இரண்டு ரக்அத்களாகவும், அஸரை இரண்டு ரக்அத்களாகவும் சேர்த்து சுருக்கி ஜமாத்தாக தொழுதுகொள்;ள வேண்டும்.
 4. இந்த நேரத்தில் முக்கியமாக நாம் அரபாவின் எல்லைக்குள் நுழைந்து விட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். குறிக்கப்பட்ட அரபாவின் எல்லைக்குள் எங்கும் இருந்துகொள்ளலாம். (சந்தர்ப்பம் கிடைக்குமாயின் ரஹ்மா மலைக்குப் பக்கத்தில் இருந்துகொள்ளலாம்.) அம்மலைக்கு ஏறுவது நபி வழிக்கு உட்பட்டதல்ல!
 5. ஹஜ் என்றால் அரபாதான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகையால் அத்தினத்தில் நாம் கிப்லாவை முன்நோக்கி அதிகமதிகம் திக்ருகளை ஓதிக்கொள்வதோடு, எமக்காகவும், எமது தாய்-தந்தையருக்காகவும், சகோதர சகோதரிகளுக்காகவும், மனைவி மக்களுக்காகவும், உறவினர்களுக்காகவும், ஊரவர்களுக்காகவும், உலக முஸ்லிம்களுக்காகவும் இம்மை மறுமை நற்பலனை கேட்டுப் பிரார்த்திக்க வேண்டும். அத்துடன் எமது பாவங்களை உணர்ந்து பச்சாதாபப்பட்டு அல்லாஹ்விடம் மனறாடி மன்னிப்புக் கேற்கவேண்டும். ஒருவர் பிரார்த்திக்க மற்றவர்கள் ஆமீன் கூறுவது நபி வழிக்கு முரணானதாகும். மேலும் நபி (ஸல்) அவர்கள் மீது  ஸலவாத்து கூறிக் கொள்ளவேண்டும். நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது எமது கைகளை உயர்த்தி மௌனமாகவும், பணிவாகவும் பிரார்த்திக்க வேண்டும்.
 6. சூரியன் நன்றாக மறையும் வரை அரபாவில் தங்கி இருந்து விட்டுபின்னர் மறைந்ததும் மஃரிபை தொழாமல் அரபாவை விட்டும் வெளியாகி முஸ்தலிபாவை நோக்கிச் செல்ல வேண்டும். முஸ்தலிபாவிற்குச் செல்லும் போது அவசரமின்றியும் அமைதியாகவும் செல்வது நபிவழியாகும் முஸ்தலிபாவைச் சென்றடைந்ததும் அங்கு ஒரு பாங்கு இரண்டு இகாமத்துக்கள் கூறி மஃரிபை மூன்று ரக்அத்கள் ஆகவும், இஷாவை இரண்டு ரக்அத்கள் ஆகவும் சேர்த்து சுருக்கித் தொழுதுகொள்ள வேண்டும். பின்னர் பஜ்ர் வரை அங்கே படுத்துறங்க வேண்டும். பலஹீனமானவர்களுக்கும், பெண்களுக்கும் நடு இரவிலேயே மினாவுக்கு செல்ல அனுமதி உண்டு.
 7. முஸ்தலிபாவில் சுபஹை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுது விட்டு மஷ்அருல் ஹராம் என்ற இடத்தை அடைந்து அங்கு கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வை திக்ரு செய்ய வேண்டும், பிரார்த்திக்க வேண்டும். அத்துடன் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ வேண்டும்.

 3. பத்தாம் நாள் :-

 1. மஷ்அருல் ஹராமில் நன்றாக விடியும் வரை அந்நிலையிலே இருந்துவிட்டு ஹாஜிகள் அனைவரும் தல்பியாவை முழங்கியவாறு மினாவை நோக்கிப் புறப்படவேண்டும். மினாவில் ஜம்ரதுல் அகபாவில் எறிவதற்கான ஏழு சிறு கற்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். முஸ்தலிபாவிலோ அல்லது மினாவிலோ எடுத்துக்கொள்ளலாம். மினாவில் எடுப்பதே சிறந்ததாகும். மினாவை வந்தடைந்த ஹாஜிகள் அனைவரும் ஜம்ரதுல் அகபா என்ற கல்லெறியுமிடத்துக்குச் சென்று ஏழு கற்களையும் தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறியவாறு  எறிய வேண்டும். கல்லெறியும் போது நெருங்கியடித்தலோ, சண்டையோ, சச்சரவோ கூச்சல் போடவோ கூடாது.
 1. பின்னர் குர்பானி அறுத்து அதிலிருந்து தாங்களும் புசித்து ஏழைகளுக்கும் கொடுக்கவேண்டும்.(இப்ராத் முறையில் ஹஜ் செய்தவர்களுக்கு குர்பானி கிடையாது.)
 1. அடுத்ததாக ஆண்கள் தலை முடியை சிரைத்துக்கொள்ள வேண்டும். அல்லது பூரணமாக குறைத்துக் கொள்ளவேண்டும். (குறைப்பதை விட சிரைப்பதே விரும்பத்தக்க சுன்னாவாகும்.) பெண்கள் சிறிளவு தங்கள் தலை முடியை கத்தரித்துக்கொள்ள வேண்டும். பின்னர் இஹ்ராம் உடையை கலைந்து குளித்து சுத்தமாகி எமது வழமையான உடைகளை உடுத்துக்கொள்ளலாம். மேற்கூறப்பட்டவைகளை செய்து முடிப்பதன் மூலம் உடலுறவைத் தவிர இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட ஏனையவைகள் அனைத்தும் ஆகுமாகிவிடும்.
 1. பின்னர் மக்கா சென்று கஃபாவை தவாப் செய்து இரண்டு ரக்அத்கள் தொழுது தவாபை ( தவாஃபுல் இஃபாழா ) செய்யவேண்டும். தமத்துஃ முறையில் ஹஜ் செய்தவரும், கிரான் முறையில் நிய்யத்துச் செய்து முன்னர் ஸஈ செய்யாதவரும் ஸஈ செய்யவேண்டும். மேற்கூறப்பட்ட அனைத்துக் கடமைகளையும் பத்ததம் நாளன்றே நிறைவேற்றுவதே மிகச்சிறந்ததாகும் அதுவே நபிவழியாகும்.

மேற்கூறப்பட்ட அனைத்துக் கடமைகளையும் பூரணப்படுத்திவிட்டால் இஹ்ராமின் மூலம் தடுக்கப்பட்டிருந்த அனைத்துக் காரியங்களும் ஆகுமாகிவிடும்.

பத்தாம் நாளுக்குறிய இக்காரியங்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக செய்யவேண்டிய அவசியம் இல்லை. சிலதை முட்படுத்தியும், பிட்படுத்தியும் செய்யலாம்.

ஸம்ஸம் நீரை அறுந்துவதும் முடியுமானவர்கள் பாத்தாம் நாளின் ளுஹர் தொழுகையை மக்காவில் தொழுவதும் நபி வழியாகும்.

பின்னர் மினாவுக்குச் சென்று ஏனைய மூன்று இரவுகளை மினாவில் கழிக்க வேண்டும்.

 4. பதினோராம் நாள் :-

மினாவில் தங்கும் 11, 12, 13 ஆகிய நாள்கள் சாப்பிட்டு, குடித்து, அல்லாஹ்வை தியானிக்க வேண்டிய நாள்களாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே, நாம் அந்நாள்களை வீணாக்கி விடாமல் அல்லாஹ்வைப் புகழ்ந்து, தொழுது, தியானித்து, இயன்றவறை குர்ஆனையும் ஓதிக்கொண்டிருப்பதோடு, இம்மை, மறுமையின் தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்தித்தவர்களாகவும், அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சி பாவமன்னிப்பு கேற்கக்கூடியவர்களாகவும் இருக்கவேண்டும்.

பதினொராம் நாள் கல்லெறியும் இடத்திற்குச் சென்று நன்பகல் சூரியன் உச்சிக்கு வந்து சாய்ந்தவுடன் (ஜம்ரதுல் ஊலா)  கல்லெறியும் (முதலாவது) இடத்தில் ஏழு சிறிய கற்களை எறியவேண்டும். ஒவ்வொறு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூறவேண்டும். அத்துடன் சற்று முன்னேறிச் சென்று கிப்லாவை முன்னோக்கி நின்று தமது கைகளை உயர்த்தி துஅச் செய்யவேண்டும்.

பின்னர் (ஜம்ரதுல் வுஸ்தா இரண்டாவது) கல்லெறியும் இடத்தில் ஏழு சிறிய கற்களை எறியவேண்டும். ஒவ்வொறு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூறவேண்டும். பின்னர் இடப்புறமாக சற்று நடந்து சென்று கிப்லாவை முன்னோக்கி நின்று தமது கைகளை உயர்த்தி துஅச் செய்யவேண்டும்.

பின்னர் (ஜம்ரதுல் அகபா மூன்றாவது) கல்லெறியும் இடத்தில் ஏழு சிறிய கற்களை எறியவேண்டும். ஒவ்வொறு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூறவேண்டும். ஆனால் அங்கு துஆச்செய்ய நிற்காமல் சென்றுவிடவேண்டும்.

குறித்த நேரத்தில் கல்லெறிய முடியாவிட்டால் மற்றைய நேரங்களில் கல்லெறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் குறித்த நேரத்தில் எறிவதற்குண்டான முயற்சிகள் செய்வதே நபி வழியாகும். மேலும், அன்றைய இரவையும் மினாவிலேயே கழிக்கவேண்டும்.

5. பன்னிரண்டாம் நாள் :-

அன்றைய நாளையும் அல்லாஹ்வைப் புகழுதல், தொழுதல், திக்ரு செய்தல், குர்ஆன் ஓதுதல், பிரார்த்தித்தல், பாவமன்னிப்புத் தேடுதல் போன்ற காரியங்களில் கழிக்கவேண்டும். அத்துடன் முதலாம் நாள் செய்தது போன்று இன்றும் கல்லெறியும் இடத்துக்குச் சென்று மூன்று ஜமராக்களுக்கும் கல்லெறிய வேண்டும். துஅச் செய்யவேண்டும்.

பன்னிரண்டாம் நாள் கல்லெறிந்த பின் தனது வணக்கத்தை முடித்துக்கொள்ள விரும்பும் ஹாஜிகள் மீது எவ்விதக் குற்றமும் இல்லை. அவர்கள் சூரியன் மறையும் முன் மினாவை விட்டும் வெளிப்பட்டு மக்காவுக்குச் செல்லவேண்டும். உடனடியாக ஊர் செல்ல நாடுவோர் தாவாபுல் வதாஃ என்னும் விடைபெரும் தவாபை செய்து விட்டு வெளியேறிச் சென்று விடலாம்.

பதிமூன்றாம் நாளும் கல்லெறியும் ஹாஜிகள் அன்றைய இரவும் மினாவிலே தங்கியிருந்து பதிமூன்றாம் நாளும் சூரியன் உச்சிக்கு வந்து சாய்ந்தவுடன் மூன்று இடங்களுக்கும் கல்லெறிந்து விட்டு செல்ல வேண்டும். அவர்கள் மீதும் எவ்வித குற்றமும் இல்லை.

அப்தஹில் தங்குதல்

13ம் நாளன்று மினாவில் கல்லெறிந்து விட்டு மக்காவுக்குச் செல்லும் வழியில் அப்தஹ் எனும் இடத்தில் ழுஹரையும் அஸரையும் மஃரிபையும் இஷாவையும் சுருக்கி உரிய நேரத்தில் தொழுது விட்டு அங்கே சிறிது நேரம் தங்கிச் செல்வது நபி வழியாகும்.

பின்னர் மக்கா சென்று மக்காவைவிட்டு வெளிப்பட்டு செல்வதற்கு முன் கடைசி தவாபான தவாபுல் வதாஃ செய்ய வேண்டும். மாதவிடாய் போன்றவைகள்; ஏற்பட்டுள்ள பெண்கள் இத்தவாபை செய்ய வேண்டிய அவசியமில்லை. இத்துடன் ஹஜ்ஜின் எல்லாக் கடமைகளும் பூர்த்தியாகி விட்டது. அல்ஹம்துலில்லா!

இஹ்ராமின் போது கடைபிடிக்கப்பட வேண்டியவை :-

 1. இஹ்ராம் கட்டிய ஆண்கள் சட்டையோ, தலைப்பாகையோ, தொப்பியோ, அணியக்கூடாது. (ஆனால் வெயில் படாமல் குடை போன்றவற்றைப் பிடித்துக் கொள்ளலாம்.) கால் சட்டையும் அணியக்கூடாது. மஞ்சல் சாயம் தேய்க்கப்பட்ட ஆடைகளையும் அணியக்கூடாது. செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறையும் அணியக்கூடாது. காலுறை அணிவதாயின் கரண்டைக்குக் கீழே இருக்குமாறு வெட்டிவிட வேண்டும்.
 1. இஹ்ராம் கட்டிய பெண்கள் தனது முகத்தையும், மணிக்கட்டு வரை கைகளையும் மறைக்கக் கூடாது.
 1. இஹ்ராம் கட்டும் போது குளித்துவிட்டு நறுமணம் பூசிக்கொள்ள அனுமதியுண்டு. ஆனால் இஹ்ராம் கட்டிய பின்னர் நறுமணம் பூசவோ, நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தவோ கூடாது.
 1. இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக்கூடாது, பிறருக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பாளியாக இருக்கவும் கூடாது.
 1. கணவன் மனைவியாக ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் நாற்களில் உடலுறவில் ஈடுபடவோ, இச்சையை தூண்டும் காரியங்களில் ஈடுபடவோ கூடாது. கெட்டவார்த்தைகள் பேசுவது கூடாது. சண்டை சச்சரவு செய்துகொள்வது கூடாது. மேலும் வீணான விவாதங்களில் ஈடுபடவும் கூடாது.
 1. இஹ்ராம் கட்டியவர் எந்த உயிர் பிராணியையும் கொல்லக் கூடாது. வேட்டையாடவும் கூடாது. தனக்காக வேட்டையாடுமாறு மற்றவர்களை தூண்டவும் கூடாது. ஆனால் கடல் வேட்டையாடுவதற்கு அனுமதி உண்டு.
 1. இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜுடைய கடமைகளை செய்து முடிக்கும் வரை முடிகளை நீக்கவோ, நகங்களை வெட்டவோ கூடாது.தவிர்க்க இயலாத காரணங்களினால் முடியை வெட்ட வேண்டி வந்தால் அதற்குப் பரிகாரமாக மூன்று நாற்கள் நோன்பு நோற்க வேண்டும். அல்லது  ஆறு ஏழைகளுக்கு உணவு  கொடுக்க வேண்டும். அல்லது ஒரு ஆட்டை குர்பான் கொடுக்க வேண்டும்.

ஹாஜிகளால் நடைபெறும் சில முக்கியமான தவறுகள்

ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் அறிந்தோ அறியாமலோ சில தவறுகளைச் செய்கிறார்கள். அத்தவறுகளிலிருந்து அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவைகள் இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றன.

 1. இஹ்ராம் கட்டிய பின் தல்பியா சொல்லாது மௌனமாக இருத்தல்.
 1. தல்பியாவை ஒருவர் சொல்ல மற்றவர்கள் அதைத் தொடர்ந்து கூட்டமாகச் சொல்லல். ( தல்பியாவை தனித்தனியாக ஒவ்வொருவரும் சொல்லவேண்டும். ஆண்கள் சப்தமிட்டுச் சொல்ல வேண்டும். )
 1. கஃபாவைக் காணும் போது அல்லது அதற்குள் நுழையும் போது குறிப்பான சில திக்ர், துஆக்களை ஓதுதல்.
 1. தவாப் செய்யும்போது கூட்டமாக அல்லது தனியாக சத்தத்தை உயர்த்தி பிரார்த்தித்தல்.
 1. ஸபா மர்வா மலையில் இரண்டு பச்சை அடையாளங்களுக்கு இடையில் பெண்கள் ஓடுதல்.
 1. ஸபாவிலிருந்து மர்வாவுக்கும் மர்வாவிலிருந்து ஸபாவுக்கும் நடப்பதை ஒன்றாகக் கணித்தல்.
 1. அரபாவில் பிரார்த்திக்கும் போது கிப்லாவை முன்னோக்காமலும், கைகளை உயர்த்தாமலும் பிரார்த்தித்தல்.
 1. அரபாவில் ஒருவர் சத்தத்தை உயர்த்தி பிரார்த்திக்க மற்றவர்கள் அதற்கு ஆமீன் கூறிவிட்டு நாங்கள் பிரார்த்தித்துவிட்டோம் என்று எண்ணிக் கொள்ளல்.
 1. அரபாவில் இருக்கும் ரஹ்மா மலைக்கு வணக்கம் என்ற எண்ணத்துடன் ஏறுதல், ஏற முயற்சித்தல்.
 1. மினாவில் எறிவதற்குறிய கற்களை முஸ்தலிபாவில் எடுத்துக்கொள்வது சுன்னத்து என்று நினைத்தல், எறிவதற்கு முன்னர் கற்களைக் கழுவுதல், எல்லாக் கற்களையும் ஒரே தடவையில் எறிதல்.
 1. முதலாம் இரண்டாம் இடங்களில் கல்லெறிந்த பின் பிரார்த்திக்காமல் சென்றுவிடுதல்.
 1. தனக்குச் சக்தியிருந்தும் கற்களை தான் எறியாமல் பிறரை எறியுமாறு பணித்தல்.
 1. பெரிய கற்கள், பாதணிகள், பாட்டில்கள் போன்றவைகளை எறிதல்.
 1. வயது பூர்த்தியாகாத, குறைகள் உள்ள பிராணிகளை அறுத்துப் பழியிடல்.
 1. பத்தாம் நாளன்று ஹாஜிகள் தமது தாடியை சவரம் செய்தல் அல்லது வெட்டுதல். பொதுவாக தாடியை பூரணமாக வைப்பது கடமையாகும்.
 1. ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட மற்றவர்களை நோவினை செய்யும் அளவுக்கு; முண்டியடித்துக்கொண்டு செல்லல்.
 1. கஃபாவின் ஒவ்வொரு மூலைகளையும் சுவர்களையும் வாய்வைத்து முத்தமிடல், அல்லது தொட்டு முத்தமிடல்.
 1. ருக்னுல் யமானியை முத்தமிடல்.
 1. கஃபாவை தவாப் செய்யும் போது ஹிஜ்ர் (இஸ்மாயில்) எல்லைக்குள்லால் வருதல்.
 1. சைகை மூலம் கஃபாவுக்கு பிரியாவிடை சொல்லல், மேலும் கடைசித் தவாப் செய்த பின்னும் மக்காவில் தங்குதல்.
 1. நபிகளார்அவர்களின் கப்ரை தரிசிக்கச் செல்வதை ஹஜ் வணக்கத்தில் ஒன்று எனக் கருதுதல்.

இவைகள் இன்றைய ஹாஜிமார்களால் தெரிந்தோ, தெரியாமலோ நடைபெறும் தவறுகளாகும். எனவே இவைகளை தவிர்ந்து நபிகள் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியைப் பின்பற்றி சிறந்த முறையில், அல்லாஹ் ஒப்புக்கொள்ளக்கூடிய வகையில் இக்கடமையை நிறைவேற்றுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *