[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன ?

ஒழுச் செய்வதற்கான தண்ணீரின் தன்மை பற்றிய சட்டங்கள் யாதெனில்,

மழை நீர்

உங்களை அதைக்கொண்டு தூய்மை படுத்துவதற்காகவே, (அல்லாஹ்வாகிய) அவன் வானத்திலிருந்து உங்கள்மீது மழையை இறக்கிவைத்தான். [ அல் அன்ஃபால் : 11 ]

மனிதர்களே! அல்லாஹ்வாகிய நாம்தான் வானத்திலிருந்து பரிசுத்தமான நீரை இறக்கி வைக்கிறோம் [ அல் ஃபுர்கான் : 48 ]

மேற்கூறிய இரண்டு குர் ஆன் வசனங்களும் மழை நீர் தூய்மையானது. அதன்மூலம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளலாம் என்று தெளிவுபடுத்துகிறான். ஆறு, குளம், ஏரிகளிலுள்ள தண்ணீரும் மழையினால் கிடைத்தது எனில் அவையும் தூய்மையானதாகும் என்பது தெளிவு.

கடல் நீர்

கடல் நீரில் நாங்கள் ஒழுச் செய்யலாமா ? என்று நபித்தோழர்கள் கேட்டபோது, “அதன் தண்ணீர் தூய்மையானது. (கடல் பிராணிகளில்) தானே செத்தவைகளும் ஹலாலாகும் ” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். [ அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) – நூல்கள் : அஹ்மது, அபூதாவூது, நஸாஈ, திர்மிதீ, இப்னுமாஜா ]

கடல் நீரில் ஒழுச்செய்யலாம் என்பதற்கு இது போதிய சான்றாகும்.

கிணற்று நீர்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஜம் ஜம்” கிணற்று நீரைக் கொண்டுவரச் செய்து குடித்தார்கள், அதில் ஒழுவும் செய்தார்கள் [ அறிவிப்பவர் : அலி ( ரழி) – நூல் : அஹ்மது ]

இந்த நபிவழி மூலம் கிணற்று நீர், ஊற்று நீர் ஆகியவைகளில் ஒழுச் செய்யலாம் என்று எவரும் விளங்கலாம்.

உறைபணி, ஆலங்கட்டி

வானிலிருந்து விழும் பனிக்கட்டிகளாலும் ஆலங்கட்டிகளாலும் ஒழுச் செய்யலாம் என்பதை பின்பரும் நபிமொழி நமக்குத் தெளிவு படுத்துகிறது

” யா அல்லாஹ் ! என் தவறுகளை தண்ணீராலும், ஆலங்கட்டியாலும், பனிக்கட்டியினாலும் நீ கழுவி விடு ” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ செய்துள்ளார்கள் [ அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) – நூல் : முஸ்லிம், அஹ்மது, அபூதாவூது, நஸாஈ, இப்னுமாஜா ]

இந்த துஆவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூய்மை செய்யும் பொருள்களாக பனிக்கட்டியையும், ஆலங்கட்டியையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே மழை நீர், கடல் நீர், கிணற்று-ஊற்று நீர், உறைபணி, ஆலங்கட்டி போன்றவற்றைக் கொண்டு ஒழுச்செய்யலாம் என்பது தெளிவாகிறது.

தூய்மையான பொருள்கள் கலந்த நீர் :

அதுபோலவே தூய்மையான பொருள்கள் நீரில் கலந்துவிட்டால் அதைப் பயன்படுத்தலாமா என்பதற்கான விளக்கமாவது :

நபி (ஸல்) அவர்களும், அவர்களின் துணைவியார் மைமூனா (ரழி) அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளித்தனர். அந்தப்பாத்திரத்தில் குழைத்த மாவின் அடையாளம் இருந்தது என உம்முஹானி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். [ நூல் : அஹ்மது, நஸாஈ, இப்னுகுஜைமா ]

நபி (ஸல்) அவர்கள் குழைத்த மாவில் சிறிது ஒட்டிக்கொண்டுள்ள பாத்திரத்தில் குளித்தார்கள் என்பதிலிருந்து, அந்த மாவுடைய துகள்கள் அந்தத் தண்ணீரில் இருப்பதை நாம் உணரலாம். குறைந்த அளவில் தூய்மையான பொருள்கள் நீரில் கலந்துவிட்டால் அந்த நீரைப் பயன்படுத்தலாம் என்பதை இதிலிருந்து அறியமுடிகிறது.

நபியவர்கள் மகளார் ஜைனப் (ரழி) அவர்கள் மரணமடைந்தபோது, மூன்று முறை, அல்லது ஐந்து முறை, நீங்கள் விரும்பினால் அதைவிட அதிகமாக, தண்ணீர் மற்றும் இலந்தை இலையின் மூலம் குளிப்பாட்டுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். [ அறிவிப்பவர் : உம்மு அதியா (ரழி) – நூல்கள் : புகாரி, முஸ்லிம் ]

தண்ணீரில் இலந்தை இலையை போடும்போது அந்நீரில் இலந்தை இலையின் மணமும் நிறமும் நிச்சயம் கலந்துவிடும் என்பது நிதர்சனம். அத்தகைய நீரைக்கொண்டு ஜனாஸாவை குளிப்பாட்டும்படி நபியவர்கள் கூறியுள்ளார்கள். எனவே மேற்கூறிய இரண்டு ஹதீஸ்கள் மூலம் தண்ணீரில் தூய்மையான பொருள்கள் சிறிதளவு கலந்துவிட்டாலும் அந்த நீரை ஒழுச்செய்ய பயன்படுத்தலாம்.

அசுத்தம் கலந்த நீர் :

அசுத்தமானவைகள் நீரில் கலந்து விட்டால் அதன் சட்டம் யாதெனில்,

தேங்கி நிற்கும் தண்ணீரில் ஒருவர் சிறு நீர் கழிக்கவும், கடமையான குளிப்பை நிறைவேற்ற அதில் குளிக்கவும் வேண்டாம் [ அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழி) – நூல்கள் : முஸ்லிம், அஹ்மது, அபூதாவூது, இப்னுமாஜா ]

‘புளாஆ” என்ற கிணற்றில் நாய்களின் மாமிசம், மாதவிடாய் துணிகள், மனிதர்களின் கழிவுப் பொருள்கள் போடப்பட்டு வந்தன. அதைப்பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்டபோது, ” தண்ணீரை எந்தப்பொருளும் அசுத்தப்படுத்த முடியாது “ என்று கூறினார்கள் [ அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி) – நூல்கள் : அபூதாவூது ]

முதலாவது ஹதீஸுக்கும் இரண்டாவது ஹதீஸுக்கும் முரண்பாடு உள்ளதுபோல தோன்றுகிறதல்லவா ? இரண்டு ஹதீஸ்களுமே ஆதாரப்பூர்வமாக உள்ளதால் இரண்டையுமே நாம் செயல்படுத்தியே ஆக வேண்டும்.

இரண்டு ஹதீஸ்களுக்கும் முரண்பாடு இல்லாத வகையில் நாம் விளங்க கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் முரண்படக்கூடிய இரண்டு கருத்துக்களை சொல்லியிருக்க மாட்டார்கள்.

முதல் ஹதீஸின் அடிப்படையில் ‘ சிறு நீர் போன்ற அசுத்தங்கள் கலந்துவிட்ட தண்ணீரில் குளிக்கலாகாது ‘ என்று குறிப்பிட்டது, அவ்வாறு செய்வது விரும்பத்தக்கதல்ல என்ற பொருளில்தான் இருக்க வேண்டும். இரண்டாவது ஹதீஸின் ‘ தண்ணீரை எந்தப் பொருளும் அசுத்தப்படுத்தாது ‘ என்று கூறியது, ‘ அதைப் பயன்படுத்துவதற்கு அனுமதியுண்டு ‘ என்ற பொருளில்தான் இருக்க வேண்டும்

இந்தக் கருத்தைத்தான் அன்னை ஆயிஷா, உமர், அப்துல்லாஹ், இப்னு மஸ் ஊத், இப்னு அப்பாஸ், ஹஸன், அன்னை மைமூனா, அபூஹுரைரா, ஹுதைபா (ரழியல்லாஹு அன்ஹும் அஜ்மயீன்) போன்ற ஸஹாபாக்களும், அஸ்வத் இப்னு யஸீத், அப்துர்ரஹ்மான் இப்னு யஸீத், இப்னு அபீலைலா, ஸயீத் ஜுபைர், இப்னுல் முஸய்யப், முஜாஹித், இக்ரிமா, காஸிம், இப்னு முஹம்மத், ஹஸன் பஸரீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹிம்) போன்ற தாபியீன்களும், இமாம் மாலிக், இமாம் அஹ்மது, இமாம் கஸ்ஸாலி, இமாம் ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, இமாம் இப்ராஹிம் நகயீ, இமாம் தாவுதுள்ளாஹிரீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹிம்) போன்றோர்களும் கொண்டுள்ளனர். [ ஆதாரம் : ஸுபுலுஸ்ஸலாம் பிதாயத்துல் முஜ்தஹித் ]

இந்த அடிப்படையில் இரண்டு ஹதீஸ்களையும் இணைத்துப் பார்க்கும்போது, சுத்தமான நீரையே பயன்படுத்த வேண்டும். சுத்தமான் நீர் கிடைக்காத நேரத்தில், அசுத்தங்கள் கலந்த நீரை பயன்படுத்தவும் அனுமதியுண்டு. எனினும் அது விரும்பத்தக்கதல்ல. அந்த தண்ணீரில் அசுத்தங்கள் கலந்து, அ ந் நீரின் வாடை, சுவை, நிறம் போன்றவை மாற்றமடையாமல் இருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அசுத்தங்கள் கலந்துவிட்ட நீரில் மாறுதல் ஏற்பட்டிருக்குமானால், அந்த நீரை பயன்படுத்த முடியாததாகிவிடும் என்பதில் ஸஹாபாக்கள் மற்றும் அறிஞர்கள் எவரும் கருத்து முரண்பாடு கொண்டிருக்கவில்லை.

ஸஹாபாக்கள் நபியவர்கள் ஹதீஸ்களை இவ்வாறுதான் புரிந்து வைத்திருந்தார்கள்.

தண்ணீர் விசயத்தில் நபியவர்கள் இவ்வளவு சலுகை வழங்கியுள்ளார்கள். தண்ணீர் தாராளமாக கிடைக்கின்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இச்செய்திகள் மிகவும் ஆச்சரியத்தை அளிக்கலாம். இவ்வுலகில் ஒரு குவளைத் தண்ணீருக்கும் கஷ்டப்படக்கூடிய பகுதிகள் ஏராளம் உண்டு.

இஸ்லாம் வளமான பகுதிகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல. இஸ்லாத்தின் சட்டங்கள் வளமான பகுதி மக்கள் மட்டும் பின்பற்றும் விதத்தில் அமைந்திருக்கவில்லை. மாறாக இஸ்லாம் ஒரு உலகளாவிய மார்க்கம் என்பதை புரிந்து கொண்டால், நபியவர்களின் கூற்று எவ்வளவு தீர்க்கமானது என்பதை உணரலாம்.

அல்லாஹ் மிகவும் அறிந்தவன்… அல்ஹம்துலில்லாஹ்.

அஷ்ஷைஹ் முஹம்மது இக்பால் மதனீ, தமிழகம், இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *