[கேள்வி-25/200]: “உண்மைப்படுத்துதல்” என்ற நிபந்தனைக்கு அல்குர்ஆன், நபிமொழி ஆகியவைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள் எவை?

அல்லாஹ் கூறுகின்றான்;

الم ﴿١﴾ أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ ﴿٢﴾ وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ ۖ فَلَيَعْلَمَنَّ اللَّـهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ ﴿٣﴾ سورة العنكبوت

அலிஃப், லாம்,மீம். (1) “நம்பிக்கை கொண்டோம்” என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா”? (2)  நிச்சயமாக அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான். (3) ( அல்அன்கபூத் 1-3 )

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் தனது உள்ளத்தால் உண்மைப்படுத்தி “அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்துக்குரிய) இறைவன் வேறு யாருமில்லை முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்” என எவர்  சாட்சி கூறுகின்றாரோ அவரை அல்லாஹ் கட்டாயமாக நரகத்திலிருந்து தடைசெய்து விடுவான்.

தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (அவர் சற்றுத்தொலைவில் இருந்ததால்) அவரது குரலை எங்களால் கேட்க முடிந்ததே தவிர, அவர் என்ன சொல்கிறார் என்பதை எங்களால் அறிய முடியவில்லை. பின்னர் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நெருங்கினார். அப்போதுதான் அவர் இஸ்லாத்தைப் பற்றி வினவுகிறார் என்று எங்களுக்குப் புரிந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

“(நாளொன்றுக்கு) பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (நிறைவேற்றுவது இஸ்லாத்தின் விதியாகும்)” என்று பதிலளித்தார்கள். உடனே அவர், “இவற்றைத் தவிர வேறு (தொழுகைகள்) ஏதேனும் என்மீது (விதியாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, “இல்லை; நீயாக விரும்பித்தொழும் (கூடுதலான) தொழுகையைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அடுத்து ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது (இஸ்லாத்தின் விதியாகும்) என நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) கூறினார்கள். அவர், “இதைத் தவிர வேறு (நோன்புகள்) ஏதேனும் என்மீது (விதியாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, “இல்லை; நீயாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், ஸகாத் (வழங்குவது இஸ்லாத்தின் விதி என்பது) பற்றியும் அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறினார்கள். அவர், “இதைத் தவிர வேறு ஏதேனும் (தர்மம்) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” எனக் கேட்க, “இல்லை; நீயாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தர்மத்தைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவுமாட்டேன்; இதைக் குறைக்கவுமாட்டேன்” என்று கூறியபடி திரும்பிச் சென்றார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் வெற்றியடைந்துவிட்டார்” என்று சொன்னார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *