[கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக் ஜமாஅத் – 3

(தொடர்-3)

 ஸூஃபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள்:

  1. ஷரீஅத் – (மார்க்கம் .)
  2. தரீக்கத் — ( ஆன்மீகப் பயிற்சி பெறல்)
  3. ஹக்கீக்கத் — ( யதார்த்தத்தை அறிதல் )
  4. மஃரிபத் -( மெஞ்ஞான முக்தியடைதல் )

என இவர்கள் இஸ்லாத்தில் இறைவைனை நெருங்குவதற்கான வழிகளாக  நான்கு படித்தரங்களை வகுத்து, அதன்படி நம்பிக்கை கொண்டு செயல்படுபவர்கள் மட்டுமே மறுமையில் வெற்றிபெற முடியும், இதுவே இறைவனை நெருங்குவதற்கான ஒரே வழி என பிதற்றுகின்றனர். இவை பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து வைத்திருப்பது நல்லது .

 1. ஷரீஅத்:

ஸூஃபிகளிடத்தில் ஷரீஅத் எனப்படுவது யாதெனில், ” தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற அடிப்படை மார்க்க வணக்க வழிபாடுகளைக் குறிக்கும். இவர்களின் கருத்துப்படி மார்க்க விசயங்களில் ஆரம்ப நிலையிலுள்ள, உண்மை – யதார்த்தத்தை அறியாத பண்படாத சாதாரண பாமர மக்களுக்குரிய ஆன்மீகப் பயிற்சி நெறிகளே இவ்வகை வணக்கங்களாகும். இந்த ஷரீஅத் நிலையில் உறுதியாக இருப்பதால் மட்டும் ஒருவரால் தரீக்காவுடைய நிலைகளை அடைந்துவிட முடியாது.

இந்த ஷரீஅத் எனும் முதல் நிலையால் மனிதனுக்கு எவ்வித பயனும் இல்லை. நெல்மணியை மூடியிருக்கும் உமி போன்றதே ஷரீஅத் சட்டங்கள். உள்ளேயிருக்கும் அரிசியைப் போன்றதுதான் ஹக்கீக்கத்.

ஆரம்பப் பருவத்தில் உள்ளிருக்கும் அரிசியைக் கெடாமல் காக்க உமி அவசியமானது, எனினும் காலப்போக்கில் கதிர் முற்றியதும் அறுவடை செய்த பிறகு உமியை நீக்கித் தூர வீசி விடுவது போன்று ஹக்கீக்கத்தை அறிந்தவுடன் ஷரீஅத்தை – மார்க்க வணக்க வழிபாடுகளைத் தூக்கி எறிந்துவிட வேண்டும் என்பதே இவர்களின் கோட்பாடு .

ஆரம்பத்தில் ஒரு பயிற்சி நோக்கிலேயே வணக்க வழிபாடுகளை ஒருவன் செய்கின்றான். நெல்லின் உள்ளிருக்கும் அரிசியை அடைய விரும்புபவன் உமியைத் தூக்கி வீசி விடுவது அவசியம். அதுபோலவே ஒருவன் யதார்த்தத்தை அறிந்ததும் வெளிப்படையான அமல்களை – மார்க்க வணக்க வழிபாடுகளை விட்டு விட வேண்டும் என்பதே இவர்களது கோட்பாடு.

பிரபல ஸூபியான கஸ்ஸாலி இமாம்தான்,  தனது “இஹ்யாஉலூமுத்தீன்” எனும் நூல் வழியாக இவ்வழிகெட்ட கொள்கையை அப்பாவி சமூகத்தின் மத்தியில் புகுத்தி லட்சக் கணக்கான மக்களின் வழிகேட்டுக்குக் காரணமாயிருந்தவர் . இவர் ஒரு மார்க்க அறிஞரும் கூட . எனினும் ஸூபித்துவத்தால் கவரப்பட்டு இந்நிலைக்கு ஆளாகி விட்டார்.

இவர் இறுதித் தருவாயில் இவ்வழிகெட்ட கொள்கைகள் அனைத்தையும் விட்டு மீண்டு தவ்பாச் செய்து விட்டதாகவும், அஹ்லுஸ்ஸூன்னத் வல்ஜமாஅத்தினரின் கொள்கைக்கு மாறி விட்டதாக வாக்குமூலம் கொடுத்ததாகவும் வரலாறு உண்டு. இருப்பினும் இவரது “இஹ்யாஉலூமுத்தீன்” எனும் பிரபலமான நூல் இன்றும் எண்ணற்றோரை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நூல் நான்கு பகுதியாகப் பின்வருமாறு வகுக்கப்பட்டுள்ளது: 

  1. இபாதாத் – வணக்கங்கள் .
  2. ஆதாத் – பழக்க வழக்கங்கள் .
  3. முஹ்லிகாத்- மனிதனை அழித்துவிடத்தக்க பாவங்கள் .
  4. முன்ஜியாத் – நரகை விட்டும் பாதுகாக்கக் கூடியவைகள் .

இப்படி நான்கு பகுதிகளாகப் பிரித்து விட்டு நான்காவது பகுதி இருக்கின்றதே – அதாவது முன்ஜியாத் – நரகை விட்டும் பாதுகாக்கக் கூடியவைகளின் பட்டியலில் அவர் குறிப்பிடுவது என்ன தெரியுமா ?  நரகை விட்டும் பாதுகாக்கும் ஒரே வழி தரீக்கத் மாத்திரமே !! தரீக்கத்தை – அதாவது ஆன்மீகப் பாதையை அடைய வேண்டுமா?  ஷைகு என அறியப்படும் ஒருவரிடம் பைஅத் செய்து,  அவருக்கு அடிமையாக இருந்து, அவரிலே அல்லாஹ்வைக் கண்டு , அவர் சொல்வதை மட்டும் செய்யவேண்டும். 

இவ்வாறு தரீக்கத்தின் வழிமுறையில், ஷரீஅத்தை கடந்து சென்றால்தான் ஹக்கீக்கத்தை அடைய முடியும், ஹக்கீக்கத்தை அறிவதுதான் நரகை விட்டும் காக்கும் என்பதே அதன் விளக்கம் . இதன்படி “இபாதத்கள், தொழுகை, நோன்பு , ஹஜ் போன்ற வணக்கங்கள் செய்வது எதுவுமே ஒரு முஸ்லிமை நரகை விட்டும் காப்பாற்றாது. மாறாக ஹக்கீக்கத்தைத் தெரிந்தால்தான் சுவர்க்கம்”  என்பது தான் கஸ்ஸாலியின் கொள்கை என்பது தெளிவாகின்றது . 

ஆனால் அல்குர்ஆனிலோ அல்லாஹ் கூறுகையில் … 

நரக வாதிகளைப் பார்த்து சுவர்க்க வாதிகள் நீங்கள் நரகத்துக்கு வரக் காரணம் என்ன என்று கேட்ட போது அவர்கள் என்ன பதில் கூறுவார்கள் என்று இவ்வாறு அல்லாஹ் கூறுகின்றான் ..

Soofiththuvam 03

நபி (ஸல் ) அவர்களிடம் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே.. நான் கடமையான தொழுகையைத் தொழுது, ரமழானில் நோன்பு நோற்று, ஹலாலானவற்றை எடுத்தும் ,ஹராமானவற்றைத் தவிர்ந்தும் வாழ்கின்றேன் .இது தவிர வேறு எதுவுமே நான் செய்யவில்லை . இப்படியிருக்க நான் சுவர்க்கம் செல்வேனா? என்று கேட்க நபியவர்கள் “ ஆம் “ என்று கூறினார்கள் . ( ஆதாரம் முஸ்லிம் 18 ) 

இவ்விரு ஆதாரங்களின் மூலமாகத் தொழாதிருத்தல், இபாதத் செய்யாதிருத்தல்தான் ஒருவன் நரகம் செல்லக் காரணமாகின்றது என்பதும், தொழுவதும் இதர இபாதத்களைச் செய்வதும் சுவனம் சேர்க்கும் என்பதும் தெளிவாகின்றது . ஆனால் கஸ்ஸாலியோ தரீக்காவில் சேராவிட்டால் சொர்க்கமேகிடையாது என்கின்றார். 

இவ்வாறே கஸ்ஸாலி இமாமவர்கள் அறிவை இரண்டு வகையாக உலக அறிவு , மறுமையின் அறிவு என்று பிரிக்கின்றார். மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் சரிதானே .. இதிலென்ன தவறு என்பார்கள் . ஆனால் கஸ்ஸாலி அதற்குக் கூறும் விளக்கம் என்னவென்றால் … 

உலக அறிவென்பது உலகில் செய்யும் இபாதத்,  நல்ல கெட்ட காரியங்கள் ஹராம் ஹலால் பற்றிய அறிவாகும். மறுமையின் அறிவென்பது ஹக்கீகத்துடைய அறிவாகும். அதாவது அல்லாஹ், தானே இந்தப்பிரபஞ்சமாக வெளியாகியுள்ளான் எனும் ஹக்கீக்கத்தை-யதார்த்தத்தை ஸூஃபித்துவப் பாசறையில் தரீக்காவின் வழியில் பயின்று அறிவதே மறுமையின் அறிவாகும். 

இந்த அறிவு அதாவது (ஹகீக்கத்தை அறிதல்) மறுமை அறிஞர்களின் (ஸூஃபியாக்களின்) தீர்ப்புப்படி ஒவ்வொருவருக்கும் பர்ழு ஐன் – கட்டாயக் கடமையாகும் . எப்படி ஒருவன் உலக அறிவைச் சார்ந்த இபாதத்களைச் செய்யாவிட்டால் உலக உலமாக்களின் தீர்ப்புப் பிரகாரம் அப்பகுதி அரசனின் வாளுக்கு இரையாக நேரிடுமோ அதே போன்று மெஞ்ஞான அறிவான தரீக்காவின் அறிவைக் கற்காது புறக்கணிப்பவர்கள் மறுமையில் அரசருக்கெல்லாம் அரசனான அல்லாஹ்வின் தண்டனைக்குள்ளாகி அழிந்து (நரகம் செல்ல) வேண்டியேற்படும் என்று கஸ்ஸாலி சொல்கின்றார்.  (இஹ்யாஉலூமுத்தீன் பக்கம் 1-114)

இவ்வாறு முதல் கட்டமாக இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ள வந்த எதுவுமறியா அப்பாவி முஸ்லிமை அழைத்து அவனது மூளையைச் சலவை செய்து இவ்வாறான ஷைத்தானிய சிந்தனைகளை ஊட்டி அவர்களைத் தமது தரீக்காவுக்குள் (தரீக்கத்துன்நார் – நரகத்தின் பாதை என்பதே மிகப் பொருத்தம்) அழைத்துச் செல்கின்றனர் . இனி அங்கே என்ன நடைபெறுகின்றது என்று பார்ப்போம்.

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *