[கட்டுரை]: சூஃபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக் ஜமாஅத் – 1

முன்னுரை

புகழனைத்தும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது.  சாந்தியும் சமாதானமும் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் , குடும்பத்தவர்கள், அவர்களின் வழி நடந்தோர் அனைவர்மீதும் உண்டாகட்டுமாக . ஆமீன்

தரீக்காக்களின் வரலாறு என்பது மிக நீண்ட காலம் தொட்டே முஸ்லிம் மக்களின் மனதிலே புரையோடிப் போய் தவறானதொரு கணிப்பில் பவனி வந்து கொண்டிருக்கின்றதென்றால் அது மிகையாகாது. இந்தத் தரீக்காக்களின் சுயரூபம் பற்றி அறிவதற்குமுன் இதன் ஸ்தாபகர்களும் இயக்குனர்களுமான சூபிகள் பற்றி – இவர்களது கொள்கை கோட்பாடுகள் பற்றி அறிவது இன்றியமையாததாகும் .

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில்; ‘ தரீக்காக்கள், சூஃபித்துவம், சூஃபிகள் ” போன்ற சொற்பிரயோகங்கள் அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் இதன் கருத்தோட்டம் எவ்வாறு மக்காள் மனதில் பதிந்துள்ளது என்பதை சற்று கவனித்தால்,  ஆச்சரியம் கலந்த வேதனையை அளிப்பதாகவே இருக்கிறது.

ஆம் … இன்றைய முஸ்லிம்களில் பாமரர் முதல் மார்க்கம் படித்த மிகப்பெரிய ஆலிம்கள் வரை, “சூஃபிகள்” என்றால் அவர்கள்தான் இறைவனுக்கு மிக நெருக்கமானவர்கள், இபாதத் எனும் வணக்க வழிபாகளில் அவர்கள் மிக உண்ணத நிலையில் உள்ளவர்கள், மறைவான ஞானங்களை பெற்றவர்கள், அவர்களில் படித்தரம் இறைவனிடத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் உள்ளதாகும், சாதாரண மனிதர்களைப்போன்று அவர்களை நினைப்பது கூடாது” , இப்படியான போலியான ஒரு கருத்தாக்கம் பெரும்பாலான முஸ்லிம்களின் உள்ளங்களில் ஏற்படுத்தப்பட்டு, புரையோடிப் போயிருப்பதை வருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது .

எனவே சூஃபித்துவம் என்றால் என்ன?  இது எங்கிருந்து தோற்றம் பெற்றது?  இதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம்?  இதுபற்றி இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?  இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கைகளுக்கு இது எந்தளவு முரண்பட்டு நிற்கின்றது போன்ற விடயங்களைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்துவதே இத்தொடரின் நோக்கமாகும்.

அதுபோலவே இன்று நவீன சூஃபித்துவமாக உருப்பெற்று,  இதே சூஃபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகளின் நிழலில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் ஒரு அமைப்புதான் தப்லீக் ஜமாஅத் எனும் அமைப்பாகும்.

இது இன்று பாமர மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்று தீன் வழி நடக்கும் ஒரே அமைப்பு என்றும், இதிலே தம்மை ஈடுபடுத்திக்கொள்ளாதவர்கள் தீனை விட்டும் தூரமானவர்கள் என்றும் தப்புக்கணக்குப் போட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் அமைப்பாகும்.

இவ்வமைப்பின் அடிப்படை விதிகள் எப்படி சூஃப்பித்துவக் கருத்துக்களைச் சார்ந்திருக்கின்றன என்றும், இதன் ஆரம்ப ஸ்தாபகர்கள் மற்றும் சமகால முக்கியஸ்த்தர்கள் ஆகியோருக்கு சூஃப்பித்துவத்துடன் இருக்கும் தொடர்பு பற்றியும் முடிந்தளவு சுட்டிக் காட்டுவதும் இத்தொடரின் நோக்கமாகும்.

அத்துடன் உலகிலுள்ள முக்கிய மார்க்க அறிஞர்கள், முஃப்திகள் போன்றோர், சூஃபித்துவம் – தப்லீக் ஜமாஅத்  பற்றி வெளியிட்டுள்ள ஃபத்வாக்களை  எடுத்துக் காட்டுவதுடன்,  நபியவர்களுடைய தூய ஸூன்னாவுக்கு எத்தகைய‌ வகையில் இவர்களின் செயல்முறைகள் முறண்பட்டு நிற்கின்றன என்றும் சுட்டிக் காட்டுவதே இத்தொடரின் நோக்கமாகும்.

எனவே அல்லாஹ் எம்மனைவருக்கும் இஸ்லாத்தை குர்ஆன் மற்றும் நபிகளாரின் ஆதாரப்பூர்வமான தூய ஸூன்னாவின் ஒளியில் நபித் தோழர்களும், தாபியீன்களும் மார்க்கத்தை விளங்கிய அதே வழியில், நாமும் விளங்கி அதன்படி செயல்பட்டு ஈருலகிலும் வெற்றியடைய எல்லாம்வல்ல அல்லாஹ் அருள் செய்வானாக… ஆமீன் …

மேலும், சூஃபித்துவத் தரீக்காக்கள் பற்றி தமிழக, இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமின்றி, அரபுலக முஸ்லிம்களில் கணிசமானோரிடம் கூட இன்று வரைக்கும் சரியான கருத்துக் கண்ணோட்டம் வரவில்லையென்றே சொல்லவேண்டும் . காரணம் சூஃபித்துவம் மற்றும் தப்லீக் ஜமாஅத் ஆகிய‌ இவர்களைப்பற்றிய உண்மையான அறிமுகம் தமிழுலக உலமாக்களாலோ, இஸ்லாமிய எழுத்தளர்களாலோ, தூய வடிவில் முன்வைக்கப்படவில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

எனவே இதுபற்றிய உண்மைகளை அல்குர்ஆன் அல்ஹதீஸின் ஒளியில்; தோலுரித்துக் காட்டுவதற்காகவே இத்தொடர் மீள்பதிவு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்கள் விளங்க உதவுவதுடன் இந்தத் தரீக்காக்களுக்கும் , சூபிகளுக்கும் – தூய இஸ்லாமியக் கொள்கைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்பதை எடுத்துக் காட்டுவதும் எமது நோக்கமாகும்.

எனவே முடிந்தளவு ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் இதைத் தொகுத்துள்ளேன். இருந்தபோதிலும் மனிதன் தவறிழைப்பவன் எனும் வகையில் எனக்கும் பல தவறுகள் ஏற்படலாம். அவ்வாறு உங்களுக்குப் புலப்படுமிடத்து அதனை என் கவனத்துக்குக் கொண்டு வருமாறு வாசக சகோதரர்களான உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

வஸ்ஸலாம்

உங்கள் சகோதரன்…

ஏ.சீ முஹம்மது ஜலீல் ( மதனீ )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *