[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு

இறுதியாக “தர்யிய்யா’ என்ற ஊரில் ஹிஜ்ரீ 1158 ஆம் ஆண்டு “அப்துர்ரஹ்மான் பின் சுவைலிம்’ “அஹ்மது பின் சுவைலிம் ” என்பவர்களிடம் விருந்தாளியாக தங்கினார்கள். மக்கள் இமாம் முஹம்மதின் பிரச்சாரத்தை ஏற்றுக் கொள்ளாமல், அவர்களுக்குப் பல தொல்லைகள் கொடுக்கின்ற இந்நிலையில், நாம் இமாம் முஹம்மதிற்கு ஆதரவு கொடுப்போமானால், “தர்யிய்யாவின்” அமீர் ஏதும் செய்துவிடுவாரோ. என இப்னு சுவைலிம் அஞ்சினார். ஆனால் உறுதியான ஈமானுடைய இமாம் முஹம்மது அவர்கள், இப்னு சுவைலுமுக்கு அமைதிகூறி பல உபதேசங்களைச் செய்து, நிச்சயமாக அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு ஆதரவு கொடுக்கின்றவர்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நேருவதில்லை எனக் கூறி ஊக்கமூட்டினார்கள்.

இவர்களின் பிரச்சாரத்தின் உண்மையை அறிந்த “தர்யிய்யா” ஊரின் முக்கியஸ்தர்கள், இமாம் முஹம்மதை இரகசியமாக சந்தித்தபோது அவர்களுக்கு தவ்ஹீதின் விளக்கங்களையும், தம் பிரச்சாரத்தின் உண்மைகளையும் எடுத்துக் கூறினார்கள்.

அமீர் முஹம்மது பின் சவூதிற்கு “மஷாரி” “தினைய்யான்” என்று சகோதரர்கள் இருவர் இருந்தனர். இவர்கள் இமாம் முஹம்மதை இரகசியமாக சந்தித்து, அவர்களின் பிரச்சாரத்தின் உண்மைகளை அறிந்தபின் அவற்றை தம் ச்கோதரரான அமீர் முஹம்மது பின் சவூதிடம் விளக்கினார்கள். அதாவது “இமாம் முஹம்மதவர்கள் முஹம்மது பின் சுவைலிம் என்பவரிடம் விருந்தாளியாகத் தங்கியுள்ளார்கள். இவர் இறைவனால் உங்கள் பக்கம் அனுப்பப்பட்டவராகவே நாங்கள் கருதுகிறோம். எனவே இறைவன் உங்களுக்கென அருளிய இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்” எனக்கூறி இமாம் முஹம்மதை சந்திப்பதின்பால் ஆசையூட்டினார்கள். தம் சகோதரர்களின் விருப்பத்திற்கிணங்க அமீர் முஹம்மது பின் சவூதும் இமாம் முஹம்மதைச் சந்தித்தார்.

அமீருக்கு ஏகதெய்வக் கொள்கையின் உட்பொருளை விளக்கி, இந்த ஏகதெய்வக் கொள்கையை நிலை நாட்டவே ரஸூல்மார்கள் அனுப்பப்பட்டார்கள் என்பன போன்றவற்றைக் குறிக்கும் இறைவசனங்களையும் ஒதிக்கான்பித்தார்கள். மேலும் நஜ்து மாகாணத்தில் நடக்கின்ற இணைவைத்தல், கப்ரு வணக்கம், அறியாமை, கொலை, கொள்ளை இவற்றைச் சுட்டிக்காட்டினார்கள். மக்கள் மார்க்கத்தில் பலவீனர்களாகவும், இஸ்லாமிய ஷரீஅத்துச் சட்டங்களை அறியாதவர்களாகவும் பிற்போக்கான நிலையிலுள்ளார்கள்; எனவே முஸ்லிம்களை ஒன்று சேர்க்கின்ற ஒரு தலைவராக இருந்து அரசு பொறுப்பேற்று நடத்தி, தமக்குப்பின் தம் மக்களுக்கு ஆட்சிப் பொறுப்பை விட்டுச் செல்லுமாறு அமீர் சவூதிடம் இமாம் முஹம்மது அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

இதனால் அமீர் முஹம்மது பின் சவூதின் உள்ளத்தை இறைவன் திறந்து கொடுத்து, இமாம் முஹம்மதின் பிரச்சாரம் உண்மையானதென அறியச்செய்தான். எனவே, தாம் இமாம் முஹம்மதின் பிரச்சாரத்திற்கு உதவுவதாகவும், பிரச்சாரத்தை எதிர்க்கின்றவர்களோடு போர் புரியத் தயாராக இருப்பதாகவும் அமீர் முஹம்மது பின் சவூது வாக்களித்து, சில நிபந்தனைகளை விதித்தார்.

  1.  இறைவன் உங்கள் பிரச்சாரத்திற்கு வெற்றி அளித்தால் எங்களை விட்டுச் செல்லக்கூடாது.
  2.  ‘தர்யிய்யா’ ஊர் மக்கள்மீது விதிக்கப்பட்டுள்ள வரியை வாங்கத் தடை செய்யக்கூடாது.

இமாம் முஹம்மது முதல் நிபந்தனையை ஏற்றுக்கொண்டார்கள். ” இறைவன் உங்களுக்குப் பல வெற்றிகளை அருளி அதன் வாயிலாக தற்போது கிடைப்பதை விட அதிகமான பொருளாதார வசதியை தரக் கூடும். எனவே, மக்களிடம் வரி வாங்காமல் இருப்பது நல்லது என இரண்டாவது நிபந்தனைக்கு பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின்பால் மக்களை அழைத்து, இறைவழியில் போர் செய்து, பெருமானார் (ஸல்) அவர்களின் சுன்னத் எனும் நடை, உடை, பாவனைகளை முற்றிலும் பின்பற்றி, நல்லவற்றை ஏவி, தீயவற்றை தடுத்து; இஸ்லாமிய மார்க்கத்தின் சின்னங்களை நிலை நாட்டத் தயாராவதாக அமீர் முஹம்மது பின் சவூது, இமாம் முஹம்மதுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

இமாம் முஹம்மதைத் தம் ஊரைவிட்டு வெளியேற்றிய ” சுலைமான் பின் முஅம்மர்” இமாம் முஹம்மதிற்கு மாபெரும் ஆதரவு கிடைத்திருப்பதை அறிந்தபோது தம் ஊர்ப் பெரியவர்களுடன் அவர்களை சந்திப்பதற்காக “தர்யிய்யா” சென்று அவர்களிடம் மன்னிப்புக்கோரி, இமாம் அவர்களை தங்களது ஊருக்குத் திரும்பி வருமாறு அழைத்தார். ஆனால் அமீர் முஹம்மது பின் சவூத் இதனை அனுமதிக்கவில்லை.

இமாம் முஹம்மதிடம் மக்கள் கூட்டம் கூட்டமாக பல பாகங்களிலிருந்தும் வந்து கல்வி பயின்றனர். நாட்டுப் பொருளாதார நிலை குன்றியிருந்ததால் கூட்டம் கூட்டமாக அறிவுதேடி வருகின்றவர்களுக்குப் போதிய வசதி செய்து கொடுக்க முடியவில்லை. இவர்களில் சிலர் கல்வி அறிவு பெறவேண்டுமென்ற ஆவல் நிரம்பப் பெற்றிருந்ததால், இரவில் கூலி வேலை செய்தும், பகலில் இமாம் முஹம்மதவர்களிடம் கல்வி கற்றும் வந்தனர். இவ்வாறு வருகின்றவர்களுக்கு “லாயிலாஹ் இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாவின் உண்மையான உட்பொருளை விளங்கிக்கொடுப்பதில் இமாம் முஹம்மது பெருமுயற்சி எடுத்தார்கள்.

“லாயிலாஹ” வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்ற இல்லாமையையும் “இல்லல்லாஹ்” அல்லாஹ்வைத் தவிர (அவன் மட்டும்தான் வணக்கத்திற்கு தகுதியானவர்) என்ற உறுதிப்பாட்டையும் கொண்டதுதான் ஏகத்துவக் கலிமா என்பதையும், அல்லாஹ் ஒருவனையே பயந்து, நேசித்து அவனிடம் ஆதரவுதேட வேண்டுமென்பதையும் விளக்கினார்கள். இவர்களின் இப்போதனைகளால், இருள் சூழ்ந்திருந்த உள்ளங்கள் ஒளி பெற்றன. சிந்தனைகள் தூய்மையாகி, கொள்கைகள் உண்மையானவையாக மாறின. இதனால் மக்கள் இமாம் முஹம்மதை ஆழ்ந்து நேசித்தார்கள்.

நஜ்து மாகாணத்தின் ஒவ்வோர் ஊர்த் தலைவருக்கும் கடிதம் எழுதி, இணைவைப்பை விட்டுவிட்டு உண்மையின் பக்கம் திரும்புமாறும்; அல்லாஹ் ஒருவனுக்கே வழிப்படுமாறும் வேண்டினார்கள். சிலர் ஏற்றார்கள்; வேறு சிலர் இவர்களை அறிவீனர் எனக்கூறி கேலி செய்தனர். இன்னும் சிலர் இவர்களை சூனியக்காரர் என்றனர். மற்றவர்கள் இவர்மீது பல தவறுகளை இட்டுக்கட்டினர். ஆனால், இமாம் முஹம்மது அவர்கள் மக்கள் தூற்றுபவற்றை விட்டும் தூய்மையாகவே வாழ்ந்தார்கள்.

இம்மூட மக்களுக்கு அறிவிருக்குமானால, அறிவீனர் மிக உறுதியான, தெளிவான ஆதாரங்களை காட்ட முடியாதென்பதையும், சூனியக்காரர் நல்லதை ஏவி, தீயதை தடுக்கமாட்டார், என்பதையும் அறிந்திருப்பார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் சென்றுபோன நபிமார்களையும், ஸலஃபுஸ்ஸாலிஹீன்களையும் மக்கள் இவ்வாறே கூறினார்கள்.

இமாம் முஹம்மது இரவு பகலாகத் தம் பிரச்சாரத்திலும், புத்தகங்கள் எழுதுவதிலும், ஈடுபட்டார்கள். அமீர் முஹம்மது பின் சவூது அவர்கள், தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வந்தார். ஆனால் பிரச்சாரத்தின் எதிரிகள், இதை எதிர்ப்பதற்காக மக்களை ஒன்று திரட்டி பிரச்சாரத்தை ஒழிக்க அனைத்து வழிகளையும் மேற்கொண்டனர். ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்குப் பல தொல்லைகளையும் அளித்தனர். இதனால் மார்க்கப் போர்கள் பல ஆண்டுகள் நடைபெற்று முஹம்மது பின் சவூது வெற்றிமேல் வெற்றி கிடைக்கப்பெற்றார். கிராமங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவர் தம் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. சிலர் பிரச்சாரத்தின் உண்மைகளை அறிந்து விருப்பத்துடன் அவர்களுடன் சேர்ந்தார்கள்.

ஆனால் முதலில் மக்கள் எவ்வாறு அடம்பிடித்திருந்தார்கள், எவ்வாறு ஒப்பந்தத்திற்கு பலமுறை மாறுசெய்தார்கள் என்பன போன்ற விசயங்களை அறிய விரும்பினால் “உன்வானும் மஜ்து” என்ற கிதாபை படித்துப் பாருங்கள். தூய்மையான பிரச்சாரத்தின் பாதையில் ஏற்பட்ட தடைகளை நீக்கி, எதிரிகளால் இட்டுக் கட்டப்படுவதை தடுத்து நிறுத்துவதுமே இப்பிரச்சாரத் தலைவர்களின் நோக்கமாக இருந்தது.

“ரியாத்” நகர் ஹிஜ்ரி 1187 ஆம் ஆண்டு அப்துல் அஸீஸ் பின் சவூது அவர்களால் வெற்றிகொள்ளப்பட்டு, அரசு விசாலமானது. இவ்வெற்றியால் பெரும்பாலான தொல்லைகள் தீர்ந்தன. எனவே இமாம் முஹம்மது தனது ஆட்சிப்பொறுப்புக்களை அமீர் சவூதுடைய மகன் அப்துல் அஸீஸிடம் ஒப்படைத்துவிட்டு வணக்கத்திலும், மார்க்கத்தை போதிப்பதிலும் தம் வாழ்க்கையை கழிக்கலானார்கள்.

முஹம்மது பின் சவூதும், அப்துல் அஸீஸும் தங்களுக்கு ஏற்படுகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும், மார்க்க அடிப்படையிலான தீர்ப்புகளை இமாம் முஹம்மதிடன் கேட்டு, அதன்படி செயல்பட்டார்கள்.

அழகிய நற்பண்புகளையுடைய இமாம் முஹம்மதவர்கள் ஹிஜ்ரி 1206-ல் இறையளவில் சேர்ந்தார்கள். அல்லாஹ் இமாம் அவர்களுக்கு தனது விசாலமான சுவர்க்கத்தை கொடுத்தருள்வானாக ! ..

தொடரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *