[தொடர்: 10-100] ஜமாஅத் தொழுகை

  • சந்தர்ப்பவாதிகளுக்கு மிகப் பாரமான தொழுகை இஷாவும் ஃப்ஜ்ருமாகும். இவ்விரண்டிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிந்துகொள்வார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். “ தொழுகை நிலைநாட்டப்பட நான் கட்டளையிட்டு பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறி பிறகு என் வாலிப நேயர்களிடம் விறகுக்கட்டைகளைச் சேகரிக்கும்படி செய்து அவர்களுடன் சென்று ஜமாஅத்துக்கு வராதவர்களை அவர்களின் வீட்டோடு தீயிட்டுக்கொளுத்த நான் நினைத்தேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்;- அபூஹுரைரா (ரழி) நூல்: புஹாரி (657) முஸ்லிம்.
  • கண்பார்வையற்ற ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னை பள்ளிக்கு அழைத்து வருபவர் யாருமில்லை. எனவே வீட்டிலேயே தொழுவதற்கு அனுமதிக்குமாறு வேண்டினார். நபி (ஸல் ) அவர்கள் அவருக்கு அனுமதி வழங்கி அவர் சென்று கொண்டிருக்கும்போது அவரை அவர்கள் அழைத்து தொழுகைக்காக பாங்கு சொல்லப்படுபவதை நீர் கேட்கிறீரா? என்றனர், அதற்கவர்“ஆம்”என்றதும் அந்த அழைப்புக்கு நீ (ஜமாஅத்துக்கு வருவதன் மூலம்) பதிலளிப்பீராக! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:-  அபூஹுரைரா (ரழி) நூல்:  முஸ்லிம்)
  • நாளை மறுமையில் தாம் முஸ்லீமான நிலையில் இறைவனை சந்திக்க விரும்புவோர் இத்தொழுகைகளை அவற்றிற்காக பாங்கு சொல்லப்படும் இடத்தில் (பள்ளிவாசலில்) முறையாக பேணி (தொழுது) கொள்வாராக! திண்ணமாக அல்லாஹ் உங்களுடைய நபிக்கு நேரிய வழிமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான். பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழும் இத்தொழுகைகளும் நேரிய வழியில் ஒன்றாகும். ஜமாஅத்தில் கலந்து கொள்ளாது தன் வீட்டில் தொழுபவரைப் போல நீங்களும் உங்கள் வீடுகளில் தொழுவீர்களானால் உங்கள் நபியின் வழிமுறையை கைவிட்டவர்களாவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டீர்களானால் நிச்சயம் நீங்கள் வழி தவறிப்போவீர்கள்.
  • எவர் உளூச்செய்து அதை நல்லமுறையில் செய்து இப்பள்ளிகளில் ஏதேனும் ஒன்றை நாடி வருகின்ரோ அல்லாஹ் அவருக்கு அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் பதிலாக ஒரு நன்மையை எழுதி, ஒரு பதவியை உயர்த்துகின்றான். மேலும் ஒரு தீமையை அவரை விட்டும் அகற்றுகின்றான். எங்களிடையே நான் பார்த்திருக்கிறேன் பகிரங்கமான சந்தர்ப்பவாதியைத் தவிர வேறெவரும் ஜமாஅத்துக்கு வராமல் இருக்கமாட்டார். திண்ணமாக இயலாதவரைக்கூட இரண்டுபேர் கைத்தாங்கலாக அழைத்து வந்து வரிசையில் நிறுத்தப்படும் என்று இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்;- முஸ்லிம்

பயன்கள்:-

  1. ஜமாஅத்துடன் தொழுவது ஆண்களுக்கு கடமையாகும்.
  2. ஜமாஅத்துக்கு வராமலிருப்பது நயவஞ்சகர்களின் அடையாளங்களில் ஒன்றாகும்.

( எழுத்தாக்க உதவி: சிங்கை ஷாஜஹான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *