[ தொடர் : 02 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் கல்வி மற்றும் அறிவு தேடலுக்கான பயணங்கள்

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்

தம் தந்தையிடம் ஹன்பலி மத்ஹபின் ஃபிக்ஹையும், குர்ஆன், ஹதீஸ் விளக்கங்களையும் கற்றார்கள். இவர்கள் சிறிய வயதிலிருந்தே திருக்குர் ஆன், ஹதீஸ் விளக்கங்களையும், இஸ்லாத்தின் கொள்கைகளையும் அறிவதில் மிக ஆர்வமுடையவராக இருந்தார்கள். இப்னு தைமிய்யா, இப்னு கையூம் போன்ற மேதைகள் எழுதிய புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவற்றை அதிகமாக படித்துவந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து புனித மக்காவுக்குச் சென்று ஹஜ்ஜுக் கடமைய நிறைவேற்றிய பின் மதீனா சென்று பெருமானார் (ஸல்) அவர்களின் பள்ளியை தரிசித்தார்கள். அதன் பின் பெருமானார் (ஸல்) அவர்களையும், அவர்களது உத்தம ஸஹாபாக்களையும் ஜியாரத்து செய்தார்கள்.

அன்று மதீனாவில் மிகப்பெரும் மார்க்க மேதையாக திகழ்ந்த “அப்துல்லாஹ் பின் இப்றாஹீம் பின் ஸைஃப்” என்பவர்களிடமிருந்து கல்வி கற்றார்கள். இவர்கள் “மஜ்மஆ” ( இது நஜ்த் பகுதியிலுள்ள ஒரு ஊரின் பெயராகும் ) என்ற ஊரின் தலைவராக இருந்தார்கள்.

தம் ஆசிரியரிடமிருந்து அதிகமான கல்வியையும் அவர் தம் நேசத்தையும் பெற்றார்கள். எனவே இவர்களுக்கு பல புதிய அறிவுக்கலைகளை கற்றுக்கொடுப்பதில் ஆசிரியர், முழு முயற்சி எடுத்துக்கொண்டார்கள். ஆசிரியரின் அன்பையும், பிரிக்க முடியாத தொடர்பையும் உண்டாக்கிக் கொள்வதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது யாதெனில் ஏகத்துவக் கொள்கையில் மாணவர்-ஆசிரியர் இருவருடைய சிந்தனைகளும் அடிப்படைகளும் ஒன்றுபட்டிருந்தமையேயாகும்.

நஜ்து மாகாணத்தவர்களும், மற்றவர்களும் பிற்போக்கான கொள்கையில் இருந்துகொண்டு, தவறான செயல்களில் ஈடுபட்டு, அதை இபாதத் என எண்ணிக்கொண்டிருப்பதைக் கண்டு மனவேதனைப்படுவதில் ஆசிரியரும்-மாணவர் முஹம்மதுவும் ஒன்றுபட்டிருந்தனர். எனவே முஹம்மதை ஆசிரியர் மிகவும் நேசித்தார். தம் ஆசிரியரோடு தோழமை கொண்டிருந்ததனால், அதிகமான பயன்களைப் பெற்றார்கள். ஆகவே, “இரக்கமுடையவர்களுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டுகிறான்” என்ற மஷ்ஹூர்-முஸல்ஸல் ஹதீஸை இரு தொடர்கள் மூலம் அறிவிப்பதற்கு தம் ஆசிரியர், தனது மாணவரான முஹம்மதுவுக்கு அனுமதி வழங்கினார்கள்.

இவ்விரு தொடர்களில்,

முதல் தொடர்: “இப்னு முப்லிஹ்” என்பவர், இப்னு தைமிய்யா கூறியதாக, இவர் இவருடைய ஆசிரியர் கூறியதாக, இப்படியே அஹமது பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் வரை சென்று சேரும் தொடர் ..

இரண்டாவது தொடர்: ” அப்துர்ரஹ்மான் பின் ரஜப்” என்பவர் “இப்னுல் கையிம்” சொன்னதாக, இவர் இப்னு தைமிய்யா சொன்னதாக, இப்படியே இமாம் அஹமது பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் வரை சென்று சேரும் தொடர்.

மேலும் அக்கால மாபெரும் ஹதீஸ் கலை வல்லுனரான “அப்துல்பாக்கி ஹன்பலி என்பவர் மூலம் கிடைத்த ஹதீஸ்களையும் அறிவிப்பதற்கு முஹம்மத் அவர்களுக்கு ஆசிரியர் அனுமதி வழங்கினார். அரும்பெறும் ஹதீஸ் தொகுப்புகளைத் திரட்டிய இமாம்களான புகாரி (ரஹ்) முஸ்லிம் (ரஹ்) திர்மிதீ (ரஹ்) அபூதாவூத் (ரஹ்) இப்னுமாஜா (ரஹ்) நஸயீ (ரஹ்) ஆகியோர் தொகுத்த ஹதீஸ்களையும் இமாம்களான மாலிக் (ரஹ்) ஷாஃபியீ (ரஹ்) அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) போன்றவர்கள் தொகுத்த ஹதீஸ்களை அவர்களோடு இணைத்து அறிவிப்பதற்குள்ள அனுமதியையும் தம் ஆசிரியரிடமிருந்து பெற்றார்கள்.

ஆசிரியர் அப்துல்லாஹ், இமாம் முஹம்மத் அவர்களை, ஹதீஸ் கலை மேதையான முஹம்மத் ஹயாத் ஸிந்தி என்பவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள். “முஹம்மத் தூய்மையான கொள்கையுடையவர்கள், இணைவைப்பதையும், இஸ்லாத்தில் புதுமையாகத் தோன்றியுள்ள பித்அத்களையும், அனாச்சாரங்களையும், வெறுக்கின்றவர்கள், இஸ்லாமியப் பாதையில் போர்புரியவும், மார்க்கப்பிரச்சாரம் புரிவதற்கும் உதவியாக இருக்கும் அறிவென்னும் சக்திமிக்க ஆயுதத்தைத் தயார் செய்வதற்காகவே தம் ஊரைவிட்டு புறப்பட்டார்கள்” என்ற அறிமுக உரையையும் முஹம்மதைப்பற்றி சொன்னார்கள்.

அதன்பிறகு மதினாவில் ” அலி அபந்தி தாகிஸ்தானி, இஸ்மாயில் அஜ்லூனி, அப்துல் லத்தீப் அபாலகீ அல் அஹ்சாயீ” என்பவர்களும், முஹம்மத் அபாலிகீ ” போன்ற மேதைகளிடமிருந்தும் கல்வி பெற்றார்கள்.

தன் ஆசிரியர் அப்துல்லாஹ் வழங்கிய அனுமதி போன்றே தாகிஸ்தானி, அஹ்சாயீ என்பவர்களும், அபில் மலாஹிப்” என்பவர் மூலம் கிடைக்கப்பெற்ற ஹதீஸ்களை அறிவிப்பதற்கு அனுமதி வழங்கினார்கள்.

தொடரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *