[ தொடர் : 03 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு

பஸராவில் இமாம் முஹம்மதின் ஆசிரியர்கள்:

மதீனாவிலிருந்து ந‌ஜ்து மாகாணம் சென்று, அங்கு சில காலம் தங்கி மார்க்க மேதைகள் பலரிடம் கல்வி பயின்றார்கள். இவர்களில் “முஹம்மது மஜ்மூயி” என்பார் குறிப்பிடத்தக்கவராவார்கள். இமாம் முஹம்மத் பஸராவில் இருக்கும் காலத்தில் இலக்கணம், மொழி, ஹதீஸ் போன்ற கலைகளை அதிகம் பயின்று சில புத்தகங்களும் எழுதினார்கள். இஸ்லாத்தில் பித்அத் என்னும் புதுமையாகத் தோன்றியவற்றையும், அனாச்சாரங்களையும், சமாதி வழிபாட்டையும், இவ்வாறான இஸ்லாத்திற்கு முரணானவற்றையும் ஒழிப்பதிலேயே தம் அறிவையும், ஆராய்ச்சியையும் பயன்படுத்தினார்கள். தாம் கூறுகின்ற ஒவ்வொன்றுக்கும் தகுந்த, மிகத்தெளிவான குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையிலான ஆதரங்களையும் எடுத்துக் காட்டினார்கள்.

இவர்கள் பஸராவில் கல்வி கற்கின்ற காலத்தில் அங்கு மக்கள் பித் அத்கள் புரிவதிலும், கப்ருகளை வணங்குவதிலும், இன்னும் பல அனாச்சாரங்களிலும் மூழ்கி இருந்தனர். அவற்றைவிட்டு மக்களை தடுத்தபோது, மக்கள் அவருக்கு பல வகைகளில் தொல்லைகல் கொடுத்து, இமாம் அவர்களை உச்சிப்பொழுதில் ஊரைவிட்டு வெளியேற்றினார்கள். இவர்களின் ஆசிரியரான, “முஹம்மத் மஜ்மூயி” அவர்களும் பல தொல்லைகளுக்கு ஆளானார்கள்.

இவர்களின் தொல்லைகளைத் தாங்க முடியாமல் இமாம் முஹம்மது அவர்கள் மூளையை உருக்கும் கொடும் வெயிலில் கடுமையான தாகத்தையும் சகித்துக்கொண்டு, ஸுபைர் (இது பஸராவுக்கும் அடுத்துள்ள) எனும் ஊருக்கு கால்நடையாக சென்றார்கள். வழியில் அவ்வூரைச் சேர்ந்த “அபூஹுமைதான்” என்பவர் தனது வாகனத்தில் இமாம் முஹம்மதை ஏற்றிக்கொண்டு, தம் ஊருக்கு அழைத்துச் சென்றார்கள். பின் அங்கிருந்து மார்க்கத்தின் அறிவுக்கருவூலங்களையும், கலாச்சாரங்களையும் அதிகமாக பெற்றுக்கொள்வதற்காக, ஷாம் தேசம் நோக்கி கால்நடையாக சென்றார்கள்.

நஜ்து மாகாணம் திரும்புதல்:

பல இஸ்லாமிய நாடுகளுக்குச் சென்று மார்க்கத்தை கற்கவேண்டும் என்ற பேரவா கொண்டிருந்த இமாம் முஹம்மத் அவர்களுக்கு பொருளாதாரம் இடம் கொடுக்காதலால், ஷாம் (சிரியா) நாட்டை விட்டுவிட்டு “அஹ்சா” என்ற நகருக்குச் சென்று அங்கு “அப்துல் லத்தீஃப் ஷாஃபியீ” என்பவர்களிடம் தங்கி சில காலம் பயின்றார்கள். பின் தம் தாயகமான நஜ்து மாகாணத்திற்கு திரும்பினார்கள். தம் தந்தை அப்துல் வஹ்ஹாப் இருந்து வந்த “ஹரீமலா” என்ற ஊருக்குச் சென்று தம் தந்தையிடம் மீண்டும் கல்வியை கற்றார்கள்.

ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா, இப்னுல் கையிம் போன்ற பெரியார்கள் எழுதிய புத்தகங்களை அதிகமாகப் படித்தார்கள். இதனால் மார்க்க ஞானத்தில் மிகுந்த தெளிவையும், உறுதியையும் பெற்றார்கள். இதனால் தம் அறிவுப் பிரயாணங்களில் கண்கூடாக கண்ட மூடக்கொள்கைகளையும், வீணான பழக்க-வழக்கங்களையும் ஒழிக்கப் பிரச்சாரம் செய்வது என திட்டமிட்டார்கள்.

பிரச்சாரத்திற்கு முன்னர் நஜ்தின் நிலை:

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் அறிவொளியைத் தேடி ஹிஜாஸ், அஹ்ஸா, பஸரா, ஸுபைர் போன்ற ஊர்களுக்குச் சென்றார்கள் என மேலே அறிந்தோம். தம் நாடான நஜ்து மாகாணத்தில் கண்ட வெறுக்கத்தக்க பழக்க-வழக்கங்களையும், மோசமான கொள்கைகளையும், அறியாமையையும், மனிதனுக்கு ஊறு விளைவிக்கின்ற இழிவான, வெறுக்கத்தக்க எத்தனையோ விஷயங்களையும், அங்குள்ள மக்களின் வழி தவறிய போக்கையும் தக்க மார்க்க ஆதரங்களோடு தகர்த்து எறியவே, மேலே கூறப்பட்ட நாடுகளுக்கு மார்க்க அறிவையும், அதன் தெளிவான விளக்கத்தையும் பெறுவதற்காக சென்றார்கள்.

இவர்கள் கல்வி கற்கின்ற நாள்களிலும்கூட தம்முடன் இருந்து வந்தவர்களிடம், தாம் அறிந்த மார்க்க அறிவுகளையும், ஏகத்துவ கொள்கையினையும் எடுத்துக்கூறி, பொதுமக்களும், அறிவாளிகளென வாதாடக்கூடிய சிலர்களும் கடைபிடித்து வந்த மூடபழக்கங்களை தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக்கூறி தடுத்து வந்தார்கள்.

இமாம் முஹம்மது அவர்கள் மதீனாவில் இருந்தபோது மக்கள் ரஸூல் (ஸல்) அவர்களிடம் இஸ்திகாதா தேடுவதையும், அல்லாஹ்வை அழைப்பதை விட்டுவிட்டு இறந்தவர்களை அழைத்து உதவி தேடுவதையும் செவிமடுத்த இமாம் முஹம்மத் அவர்கள் மிகுந்த வருத்தத்திற்கும், கோபத்திற்கும் ஆளானார்கள். எனவே தனது ஆசிரியரான “முஹம்மத் ஹயாத் சிந்தி” என்பவரிடம் இவ்வாறு செய்கின்ற மக்களைப்பற்றி என்ன கூறுகின்றீர்கள் என வினவியபோது கீழ்காணும் திருக்குர்ஆன் வசனத்தை ஓதிக்காண்பித்தார்கள்:

إِنَّ هَـٰؤُلَاءِ مُتَبَّرٌ مَّا هُمْ فِيهِ وَبَاطِلٌ مَّا كَانُوا يَعْمَلُونَ ﴿ الأعراف ١٣٩﴾

“நிச்சயமாக இந்த மக்கள் ஈடுபட்டிருக்கும் மார்க்கம் அழியக் கூடியது இன்னும் அவர்கள் செய்பவை யாவும் (முற்றிலும்) வீணானவையே” (என்றும் கூறினார்). ( அல்-அஃராஃப் : 139 )

நஜ்து மாகாண மக்களின் நிலைமைகளையும் அவர்கள் கல்வி தேடிச் சென்ற ஊர்களில் உள்ள மக்களின் நிலைமைகளையும் ஆராய்ந்தபோது அம்மக்கள் இஸ்லாத்தை விட்டும் தூரமாக இருந்து வருவதை கண்டார்கள்.தொடரும் …

நஜ்து மாகாண வரலாற்று ஆசிரியர்களான “இப்னு பிஷ்ர்” “இப்னு கன்னாம்” “ஆலூசி” , இன்னும் தற்கால வரலாற்று ஆசிரியர் “ஹாபிஸ் வஹபா” போன்றவர்கள் குறிப்பிடுவது போன்று நஜ்து மாகாணம் அனாச்சாரம், இஸ்லாத்திற்கு முரண்பட்ட கொள்கைகள் முதலியவற்றின் உறைவிடமாக இருந்தது. அதிகமான கப்ருகளை சஹாபாக்களுடையது என கருதி, அங்கே மக்கள் சென்று புனித கஃபாவிற்கு ஹஜ்ஜு செய்ய செல்வதுபோன்று செயல்பட்டு வந்தனர். சமாதிகளிடம் அவர்கள் தேவைகளைக்கோரி, தங்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகளையும், துன்பங்களையும் நீக்குமாறு வேண்டினர். “ஜுபைலா” என்ற ஊரில் “ஸைதிப்னுல் கத்தாப்” என்பவரின் கப்ருக்குச் சென்று வணக்கங்கள் புரிந்து, அதனிடம் தங்கள் தேவைகளை வேண்டி வந்தார்கள். இவ்வாறே “தர்யிய்யா” என்ற ஊரிலும் செய்து வந்தனர்.

ஆச்சரியம் என்னவென்றால், “அல்-மன்ஃபூஹா” என்ற ஊரில் மலட்டு பெண் பேரீத்த மரத்தடியில் சென்று அதைக் கொண்டு வசீலா தேடி வந்தனர். திருமணமாகாத வயதான பெண்கள் அந்த மரத்தை நாடிச்சென்றால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது இவர்களது நம்பிக்கையாக இருந்தது. எனவே, அம்மரத்தை நாடிச் செல்கின்றவள், அம்மரத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு, “ஓ மரமே! ஒரு வருடத்திற்குள் ஒரு கணவனைக் கொடு !” என ஓலமிடிவாள். இத்தகைய செயல்கள் அவர்களது வழக்கமாக இருந்தது.

தர்யிய்யா என்ற ஊரில் அமீர் ஒருவரின் மகளுக்குச் சில கெட்டவர்கள் கொடுத்த துன்பத்தின் காரணத்தால், அவள் ஊரைவிட்டு வெளியே ஓடி ஒரு குகையில் வீழ்ந்து மாண்டாள் என்பதாக அங்கு சென்று தங்கள் தேவைகளை குகையிடம் வேண்டினார்கள்.

குபைரா என்ற பள்ளத்தாக்கில் “லிரார்பின் அஸ்வர்” என்பவரின் கப்ரு இருப்பதாக கருதி, சிந்தனைக்கு எட்டாத எத்தனையோ ஷிர்க்கான செயல்கள் புரிந்து வந்தார்கள்.

ஹிஜாஸ் மாகாணத்தில்பெருமானார் (ஸல்) அவர்கள், ஸஹாபாக்கள், அஹ்லுல்-பைத்துகளுடைய கப்ருகளுக்கு அல்லாஹ்விற்கு செலுத்தும் வணக்கங்களைப்போல் செய்து வந்தனர். பஸரா, கபைர் என்ற ஊர்களிலும் மக்களின் நிலை இவ்வாறே இருக்கக் கண்டார்கள். இராக், ஷாம், எகிப்து, எமன் போன்ற நாடுகளில் அறிவிற்கு எட்டாத அளவிற்கு, அறியாமைக்கால சிலை வணக்கங்களை செய்துவருவதாகவும் செவியுற்றார்கள். இவ்வாறே “அத்ன்” என்ற ஊரில் “ஐதுரூஸ் வலி” , எமன் நாட்டில் “ஸைலயீ வலீ” என்பவர்களைப் பற்றியும் அதிகமாக கேள்விப்பட்டார்கள். இவற்றாயெல்லாம் ஆராய்ந்து அறிந்துகொண்ட இமாம் முஹம்மத் அவர்கள் இம்மக்களைப்பற்றி மிகவும் கவலை கொண்டார்கள்.

மக்கள் புரிந்து வந்த இச்செயல்களை குர்ஆன், ஹதீஸ் எனும் தராசில் எடைபோட்டுப் பார்க்கும்போது, மக்கள் அல்லாஹ்வின் மார்க்க சட்டங்களை விட்டு மிக தூரமாக இருப்பதைக் கண்டார்கள். பெருமானார் (ஸல்) அவர்களை நபியாக, மானிட சமூகம் அனைத்திற்கும் அல்லாஹ் ஏன் அனுப்பினான் என்பதை மக்கள் அறியாதவர்களாக இருப்பதைக் கண்டார்கள். அறியாமைக்காலம் என்றால் என்னவென்பதையும், அதிலிருந்து வந்த சிலை வணக்கங்களையும் இவர்கள் அறிந்தவர்களாக இல்லை. மார்க்க சட்டங்கள் பலவற்றையும் தங்களின் மனோ இச்சையின் பிரகாரம் மாற்றி மறைத்து, அதை மூடத்தனமாக பின்பற்றிக் கொண்டிருந்தனர். இவ்வாறு நஜ்து மற்றும் அரேபிய தீபகற்ப மக்களின் மார்க்க நிலைமை அமைந்திருந்தது.

தொடரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *