[ தொடர் : 04 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு

நஜ்து மாகாணதின் அரசியல் நிலை

“இருபதாம் நூற்றாண்டில் அரபியர்கள்” என்ற புத்தகத்தில் காணப்படுவது போன்று மக்கள் மத்தியில் தெய்வீகச் சட்டம் செயல்படுத்தப்படவில்லை. அவர்கள் தலைவர்களின் மனோஇச்சைக்கிணங்க இயற்றப்படுவதே சட்டமாக இருந்தது. நீதி என்பதே காணப்படவில்லை, நஜ்து மாகாணம் பல ஊர்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வோர் ஊரையும் ஒரு தலைவன் ஆட்சி செய்து வந்தான். ஒர் ஊருக்கும் மற்ற ஊருக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை.

இத்தலைவர்களில் முக்கியமானவர் “அஹ்சா” என்ற ஊரில் “பனூ காலித்” என்பவர்களும், “உயைனா” என்ற ஊரில் “ஆலு முஅம்மர்” என்பவர்களும், ஹிஜாசில்” ஷரீபுகளுமாவார்கள். இவர்களுக்கிடையில் எப்போதும் சண்டைகள் நடந்துகொண்டே இருந்தன. குறிப்பாக் கிராமவாசிகளோடு அதிகச்சண்டைகள் ஏற்ப்பட்டன. வலியவன் எளியவனை நேரம் கிடைக்கின்றபோது அடித்து வீழ்த்துவதே அவர்கள் வழக்கமாக இருந்தது. இமாம் முஹம்மதவர்கள் தம் கல்வி பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது நஜ்தின் அரசியல் நிலை இவ்வாறு அமைந்திருந்தது.

மார்க்கச் சீர்திருத்தத்தின் ஆரம்பம்

மக்களின் மார்க்க, அரசியல் நிலைகளை நன்கு ஆரய்ந்து உணர்ந்தபின், ஹிஜாசிலும் மற்ற பகுதியிலுமுள்ள ஆலிம்கள் மக்கள் புரிந்துவந்த வெறுக்கத்தக்க பழக்கவழக்கங்களுக்கும், பித்அத்தான செயல்களுக்கும் ஆதரவாக இருந்தனர். இவர்களில் மக்கள் புரிந்துவந்த மாபெரும் தவறுகளை எதிர்க்கச் சக்தியற்ற ஆலிம்க்ள் சிலர் மட்டும் உண்மையை அறிந்திருந்தனர்; பிற்போக்கான ஆலிம்கள் இஸ்லாத்தின் உயர்ந்த அடிப்படைக் கொள்கைகளில், திருக்குர்ஆனும், பெருமானார்(ஸல்) அவர்களும் காட்டிய பரிசுத்த வழிமுறைகளும் வெறுக்கின்றவற்றை புகுத்திவிடனர், என்பதை உண்ர்ந்தார்கள். மக்கள் தவறுகளிலும் பித்அத்களிலும் மண்டியிட்டிருப்பது இமாம் முஹம்மதவர்களின் கொள்கைகளை வலுப்படுத்தியது. ஏனெனில்:

நிச்சியமாக நீங்கள் உங்களுக்கு முன் உள்ளவர்கள் நடைமுறைகளைப் பின்பற்றுவீர்கள். என்னுடைய உம்மத்தில் ஒரு கூட்டம் சிலைகளை வணங்குவதுவரை மறுமைநாள் ஏற்படுவதில்லை.இஸ்லாம் வியப்பிற்குரியதாகவே ஆரம்பமானது, வியப்பிற்குரியதாகவே மீளும்.

என்பன போன்ற பெருமானார் (ஸல்) அவர்களின் திருவாக்கியங்களை இமாம் முஹம்மத்தவர்கள் படித்துணர்ந்த காரணத்தால், முஸ்லிம்கள் தம் மார்க்கத்தைவிட்டுப்பின் தங்கிச் செல்வது உண்மை தான், என்ற இமாம் முஹம்மதின் கொள்கை உறுதிப்பட்டது. எனவே மக்கள் சீரிய பாதையில் இல்லை, நேரிய நெறியை விட்டு அகன்று விட்டார்கள், என்பதை அம்மக்களுக்கு வெளிப்படுத்த திட்டமிட்டார்கள்.

எழுத்தாளர்கள் சிலர் குறிப்பிடுவதுபோன்று, அன்று மக்கள் மிக அபாயமான நிலையில் காணப்பட்டார்கள். அவர்களைத் திருத்தப் பெரும் உள்ளத்திறமையும், வீரமும் தேவைப்பட்டது. அல்லாஹ்வின் அருளைப் பெற்று, உண்மைக்காக போராடி, துன்பப்படும் மானிட சமூகத்தைக் காப்பற்றும் பாதையில் ஏற்படும் இன்னல்களின்போது எள்ளளவும் அசையாத உறுதிமிக்க ஈமான் தேவைப்பட்டது. போதிய பேச்சுத்திறனும், தகுந்த ஆதாரங்களும் எதிர் நோக்கும் சந்தேகங்களை அகற்ற தேவைப்பட்டன. தம்மையும், தம் பிரச்சாரத்தையும் காப்பாற்ற உறுதியான ஆதரவாளர்கள் தேவைப்பட்டனர்.

தம் சமூகத்திற்கு அழைப்புக்கொடுத்தல்:

“ஹரீமலா” என்ற ஊரில் தம் குடும்பத்தினர்களுக்குப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரையும் அழைத்து உதவிகள் தேடக்கூடாது. அல்லாவிற்கு மட்டுமே அறுதுதுப் பலியிட வேண்டும். அவனுக்கே நேர்ச்சை செய்ய வேண்டும் என்றும், கப்ருகள், மரங்கள், கற்கள் மீது மக்களுக்கு இருந்துவரும் மூட நம்பிக்கைகளும், அவற்றிடம் உதவி தேடுவதும், அவற்றுக்கு நன்மை, தீமை ஏற்படுத்த சக்தி இருக்கிறதென்ற நம்பிக்கையும் மாபெரும் வழிகேடென்றும், இவை அல்லாஹ்வுக்கு வெறுப்பான விசயமாகும் எனவும் மக்களுக்குப் போதித்தார்கள்
.
தாம் கூறுகின்றவற்றுக்கு குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்கள் வரலாறு முதலியவற்றிலிருந்து தகுந்த சான்றுகளை எடுத்துக் காட்டினார்கள். இதனால், இமாம் முஹம்மதவர்களுக்கும், மக்களுக்கும் இடையில், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இமாம் அவர்களின் தந்தையாருக்கும், தவறான வழியில் இருந்தவர்களால் எதிர்ப்பு உருவானது.

இமாம் முஹம்மத் அவர்கள் தம் சேவையைப் பேச்சாலும், எழுத்தாலும், உபதேசங்களாலும், தொடர்ந்து செயல்படுத்தி வந்தார்கள். அவ்வூரில் உள்ள சிலர் இமாம் அவர்களை மிகவும் நேசித்தனர். இந்நிலையில் ஹிஜ்ரி 1153-ஆம் ஆண்டு இமாம் அவர்களின் தந்தையார் காலமானர்கள்.

இமாமுடைய தந்தையார் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் இறுதிக்காலத்தில் தனது மகன் இமாம் முஹம்மத் அவர்களை முழுவதுமாக ஏற்றுக்கொண்டார்கள். அதுபோலவே அவர்களின் சகோதரர் சுலைமானும் பல சர்ச்சைகளுக்குப் பிறகு இமாம் முஹம்மத் அவர்களின் கொள்கையை ஏற்றுக்கொண்டார்கள்.

தம் தந்தையின் மரணத்திற்குப்பிறகு தமது சமூகத்திற்கு பிரச்சாரம் செய்வதில் மிகவும் தீவிரமாக வழிகேடுகளை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்கள். தம் சொல், செயல்களில் பெருமானார் (ஸல்) அவர்களைப் பின்பற்றுமாறு மக்களை அழைத்தார்கள். அவ்வூரில் இரண்டு வம்சத்தினரில் ஒவ்வொருவரும் தலைமைப் பதவியில் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் நேர்மையான தீர்ப்பு வழங்குவதற்கு எவருமிருக்கவில்லை. அவ்விரு வம்சத்தில் ஒன்றிற்குச் சில அடிமைகள் இருந்தார்கள். இவர்கள் எல்லாவிதமான தவறுகளையும் புரிந்தது வந்தார்கள், மக்களூடன் வரம்பு மீறித் தவறாகவும் நடந்து வந்தார்கள். இவர்களைத் தடுத்து நிறுத்த இமாம் முஹம்மதவர்கள் திட்டமிட்டார்கள். இவர்களின் இத்திட்டத்தை அறிந்த அவ்வடிமைகள் இமாம் அவர்களைக் கொலை செய்வதற்காக நள்ளிரவில் இமாம் முஹம்மதவர்களின் வீட்டிற்குச் சென்று சுவர்மீது ஏறி, வீட்டினுள் செல்ல முயன்றபோது அண்டை வீட்டர்கள் அறிந்து சப்தமிட்டனர். எனவே அவ்வடிமைகள், தங்கள் திட்டத்தில் தோல்வியடைந்து ஓடிவிட்டனர்.

இத்தகைய அவல நிலையை அறிந்து வேதனையடைந்த இமாம் முஹம்மது அவ்வூரைவிட்டு வெளியேறித் தம் சொந்த ஊரான “உயைனா” விற்குச் சென்றார்கள். அன்று அவ்வூரின் தலைவராக இருந்து வந்த “உதுமான் பின் ஹம்து பின் முஅம்மர்” என்பவர் மிக கண்ணியத்தோடு வரவேற்றார். அவருக்கு இமாம் முஹம்மதவர்கள் தம் சீர்திருத்தப் பிரச்சாரத்தைப் பற்றி எடுத்துக்கூறி, இப்பிரச்சாரம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்துள்ளது எனவும் விளக்கினார். தற்கால மக்களின் கொள்கை இதற்கு மாற்றமாக இருப்பதையும் எடுத்துக்காட்டி குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரங்களையும் எடுத்தோதிக்காட்டினார்கள். “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாவிற்குத் தாங்கள் உதவினால், அல்லாஹ் உங்களுக்கு உதவுவான் எனக்கூறி உதுமானிற்க்கு நசீஹத்துச் செய்தார்கள். இக்கலிமாவினால்தான் மோட்சமும், நஜ்து, மற்றைய நாடுகளில் தலைமைப்பதவியும் கிடைக்குமென போதித்தார்கள்.

இமாம் முஹம்மதவர்களின் போதனைகளை உதுமான் எற்றுக்கொண்டார். எனவே இமாம் முஹம்மது தம் பிரச்சாரத்தை பகிரங்கப்படுத்தி, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, பெருமானார் (ஸல்) அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றி, நல்லதை ஏவி, தீயதைத் தடுத்துச் செயல்பட முன்வந்தார்கள். மேலும் அவ்வூரில் மக்கள் பூஜை செய்துவந்த மரங்களை முறித்து, “ஜைதுப்னுல் கத்தாப்” கப்ரில் கட்டப்பட்டிருந்த குப்பாவை தலைவர் உதுமான் உதவியுடன் உடைத்தார்கள்; புத்தி அறிவுள்ள ஒரு பெண் தான் விபச்சாரம் செய்ததாக பலமுறை நிரூபித்த போது, அவள்மீது இஸ்லாமிய தண்டனையைச் செயல்படுத்தினார்கள். எனவே இமாம் முஹம்மதவர்களின் பெயர் நாடெங்கும் பரவ ஆரம்பித்தது.

இமாம் முஹம்மதவர்களின் பிரச்சாரச் செய்தி “அஹ்சா” “பனூ காலித்” என்ற ஊர்களின் தலைவரான “சுலைமான் பின் முஹம்மத் பின் உரையிர்” என்பவரை எட்டியபோது, அறியாமையும், அநீதியும் நிறைந்த காணப்பட்ட இவர் ” உதுமான் பின் முஅம்மர்” என்பவருக்குக் கடிதம் எழுதி இமாம் முஹம்மது அவர்களைக் கொலை செய்யுமாறு கட்டளையிட்டார். அவ்வாறு அவரைக் கொலை செய்யவில்லையானால் நிரந்தரமாக கொடுத்துவரும் நிலவசூலை நிறுத்தி விடுவதாக பயமுறுத்தினார்.

இவ்விஷயத்தைப் பெரிதாக நினைத்த உதுமான் இப்னு உரைருக்கு மாறுசெய்வதை அஞ்சினார். இவருக்கு இமாம் முஹம்மது அவர்களின் உபதேசமும், பிரச்சாரமும் எவ்வித பயனும் அளிக்கவில்லை. எனவே இமாம் முஹம்மது அவர்களை ஊரைவிட்டு வெளியேற்றினார். இவ்வாறு இறைவன் பாதையில் ஏற்படுகின்ற இன்னல்களைச் சகிப்பது பிரச்சாரகர்களின் மிக முக்கியமான ஓர் அம்சமாகும். உண்மையான முத்தகீன்களுக்கு எவ்வளவு தொல்லைகள் வந்தாலும், அவர்களுக்கே, நல்மோட்சம் இருக்கின்றது.

இமாம் முஹம்மதவர்கள் அவ்வூரைவிட்டு வெளியேறினாலும், அவர்களைக் கண்காணிப்பதற்காக ஒருவர் இவர்கள் பின்னால் அனுப்பப்பட்டார்கள். கடுமையான வெயிலில் எவ்வித துணையுமின்றி, ஒரு விசிறியை மட்டும் கையில் ஏந்தி, சென்றார்கள் இமாம் முஹம்மது அவர்கள்.

வழியில் கண்காணிப்பாளன் இமாம் முஹம்மதை கொலை செய்ய நினைத்தான். ஆனால் அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றினான். கொல்ல நினைத்தவன் கை நடுங்கித் திரும்பிச் சென்று விட்டான்.

யார் அல்லாஹ்வை பயந்து நடக்கின்றார்களோ, அவர்களுக்கு (துன்பங்களிலிருந்து) ஒரு (நல்) வழியை ஏற்படுத்திக்கொடுப்பான்; மேலும், அவர்கள் அறியாத விதத்தில் அவர்களுக்கு வாழ்க்கை வசதிகளை அருளுகிறான் ( 65: 2-3)

என்ற திருக்குர்ஆன் வசனத்தை இடைவிடாது ஓதி அல்லாஹ்வை அதிகமதிகம் ஞாபகம் செய்து கொண்டே சென்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *