முஹம்மத் – யார் இவர்?

நேர்மை : 

இவர் ஒரு நம்பிக்கையாளர், உண்மையாளர் என்று இவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட கூறும் அளவிற்கு நற்பெயர் பெற்றிருந்தார்கள். அரசு கருவூலத்தில் இருந்து ஒரு துண்டு பேரிச்சம்பழத்தை தனது பேரன் வாயில் போட, இறைத்தூதரோ பதறிப்போய், வாயிலிருந்த பேரிச்சம்பழத்தை வலுக்கட்டாயமாக துப்ப வைத்து அரசு பணத்தில் எதுவும் நமக்கு சொந்தமானது அல்ல என்று கூறினார்கள்.

கருவூலத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனச் சொல்லும் ஆட்சியாளரை காண முடியுமா நம்மால்?

மதினாவில் தொழுவதற்காக பள்ளிவாசல் தேவைப்பட்டது. நபி (ஸல்) அவர்களுக்காக இரு இளைஞர்கள் இலவசமாகவே இடம் கொடுக்க முன்வந்தார்கள். ஆனால் இறைத்தூதரோ இலவசமாக வேண்டாம் என்று கூறி பணம் கொடுத்து அந்த இடத்தை வாங்கினார்கள்.

அவர் இலவசமாகவே அந்த இடத்தை பெற்றிருக்க முடியும்… செய்தார்களா ?

ஏழ்மை வாழ்க்கை : 

இறைத்தூதர் குடும்பத்தினர் தொடர்ந்து மூன்று நாட்கள் எந்த உணவையும் வயிறார உண்டதில்லை. மற்றவர்கள் பரிதாபம் கொண்டு விருந்துக்கு அழைக்கும் நிலையிலேயே தன் வாழ்நாளை பட்டினியுடன் கழித்துள்ளார்கள். இறைத்தூதரிடம் ஒரு பாய் விரிப்பு மட்டுமே இருந்துள்ளது. அதை பகல் நேரத்தில் படுக்கைக்கு விரிப்பாகவும், இரவு நேரத்தில் வீட்டை மறைக்கும் கதவாகவும் பயன்படுத்தினார்கள். பாயின் மீது எவ்வித விரிப்பும் இல்லாமல் படுப்பதால் அவரது உடலில் பாயின் தடம் பதிந்திருக்கும். சாதாரண தலையனையையே பயன்படுத்தினார்கள்.

 ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஆளக்கூடிய ஆட்சியாளர், மாளிகையில் வாழ்ந்திருக்க முடியும். கருவூல பணத்தில் தன் வாழ்நாளை சுகபோகத்தில் கழித்திருக்க முடியும்… செய்தார்களா?

 மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் :

மக்களிடத்தில் எவ்வித மரியாதையையும், தனிப்பட்ட கவனிப்பும், சிறப்பும் பெற அவர்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளரான இறைத்தூதரை காண்பதும், கேள்வி கேட்பதும், பேசுவதும், பழகுவதும், ஒன்றாக உணவு அருந்துவதும் அந்தப்பகுதி மக்களுக்கு பெரிய விஷயமாக இருக்கவே இல்லை.

முன்பு வாங்கிய கடனை திருப்பி கொடுக்க தாமதமானதால் கோபம் கொண்டு நபியை ஏசுகிறார் ஒரு யூதர். ஆனால் இவரோ பொறுமையாக கடன் கொடுத்தவருக்கு உரிமை இருக்கிறது. அவரை துன்புறுத்த வேண்டாம் என தன்  தோழர்களுக்கு கட்டளையிடுகிறார்கள். இறைத்தூதர் நினைத்திருந்தால் ஆட்சித்தலைவராக தண்டனை வழங்கியிருக்கலாம்.

அதற்கான அதிகாரமும் இவருக்கு உண்டு. ஆனாலும் செய்தார்களா ?

தனக்கு அன்பளிப்பாக வந்த ஆட்டை வைத்து ஏற்பாடு செய்த விருந்திற்கு பொதுமக்கள் அனைவரையும் அழைத்து மக்களோடு ஒன்றாகவே அமர்ந்து உணவருந்தினார்கள்.

அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் அல்லாஹ்  என்னை ஆக்கவில்லை என்றார்கள். இத்தகைய ஆட்சியாளர்களை கண்டதுண்டா ?

தனக்கு கொடுக்கப்பட்ட பரிசை தானே முழுமையாக அனுபவித்திருக்க முடியும். செய்தார்களா ?

மரியாதை காரணமாக நடுக்கத்துடன் இறைத்தூதரை காண வந்தார் ஒருவர். அதைக்கண்ட தூதர்  அவரிடம், “சாதாரணமாக இருப்பீராக.. சாதாரண குரைஷி குலத்துப்பெண்ணுடைய மகன்தான் நான்” என்று கூறி சகஜ நிலைக்கு அந்த நபரைக்கொண்டு வருகிறார்கள். பள்ளிவாசல் கட்ட கல் சுமப்பதும், அகழ்  வெட்டுவதும் என மக்களோடு மக்களாக தாமும் இணைந்தது செயல்பட்டார் இந்த மாமனிதர்.

தன் ஆட்சிக்குட்பட்ட சாதாரண மக்களின் பெயர்களையும் தெரிந்து வைத்திருப்பவராகவும், குடும்பங்களில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் நேராக அவர்கள் வீட்டிற்கே சென்று விசாரிப்பதுமாக மக்களோடு ஒன்றிணைந்த வாழ்க்கை வாழ்ந்தார்கள் இந்த உத்தம மனிதர் !

அனைவரும் சமமே : 

பள்ளிவாசலை கூட்டி சுத்தம் செய்யக்கூடியவர் எங்கே ? என கேட்க, அப்போது அவர் இறந்த விஷயத்தை சொல்கிறார்கள். இதனை ஏன் எனக்கு முன்பே கூறவில்லை என கடிந்து கொண்டதோடு அந்த சாதாரண வேலையாளின் அடக்க ஸ்தளத்திற்க்குச் சென்று பிரார்த்தனை செய்தார்கள். இறைத்தூதரின் பணியாளர் அனஸ் (ரழி) அவர்களின் பாட்டி இறைத்தூதரை விருந்துக்கு அழைக்க, மறுப்பு சொல்லாமல் அந்த ஏழை வீட்டு விருந்தை ஏற்றுக்கொண்டார் இந்த வல்லரசின் ஆட்சியாளர்.

புகழுக்கு ஆசைப்படாத மாமனிதர் :

ஒரு நபர் இறைத்தூதரை புகழ்ந்து கொண்டிருக்க, அதை நிறுத்தச்செய்து, என்னை வரம்பு மீறி புகழாதீர்கள். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது ஆவேன் மற்றும் அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதரும் ஆவேன். அல்லாஹ் தந்த  இந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன் என்றார்கள் அந்த அற்புத மனிதர்.

ஹியாரா எனும் பகுதி மக்கள் தன்  தலைவருக்கு சிரம் பணிவதை கண்ட நபித்தோழர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் சிரம் பணிந்திட அதிக தகுதியுடையவர் நீங்கள் தாம் என்றார். அதை மறுக்கும் விதமாக “நான் இறந்த பின் என் அடக்கத்தலத்தில் சிரம் பணிவீரா? என திருப்பிக் கேட்டார் இறைத்தூதர் அவர்கள். அதற்கு அவர் ” இல்லை… அவ்வாறு செய்ய மாட்டேன்”  என்றார்.  ஆம்.. அவ்வாறு செய்யக்கூடாது என்றும், தமக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டுமென யார் விரும்புகிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும் ” என்று கூறினார்கள்.

சலுகை பெறாத உத்தம மனிதர் : 

நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமான தோட்டம் ஒன்று இருந்தது. அத்தோட்டத்தின் உரிமையாளருக்கும் அத்தோட்டம் பிடித்தமானது. ” நீங்கள் விரும்பும் பொருளிலிருந்து செலவு செய்யாதவரை நன்மையை அடைய மாட்டீர்கள் ” என்று திருக்குர்-ஆனின் வசனத்தை குறிப்பிட்டு, அதை நபியவர்களுக்கே பரிசளிக்க, நபியோ அதை ஏற்காமல், உமது உறவினர்களுக்கே அதை வழங்குங்கள் என்று சொன்னார்கள். நபியவர்கள் தனது சொத்துக்கள்அனைத்தையும் பொதுவுடமையாக்கிவிட்டு இறக்கும் தருவாயில் அடமானம் வைக்கப்பட்டிருந்த தனது கேடயத்தை மீட்க வசதியில்லாத நிலையில்தான் இறந்தார்கள்.

பிற மதத்தவர்கள் மீதான அன்பு : 

மரணித்த ஒருவரின் சடலம் அடக்கம் செய்ய எடுத்துச் செல்வதைக்  கண்ட நபியவர்கள் எழுந்து நின்றார்கள். அதைக்கண்ட தோழர்கள் அவர் மாற்று மதத்தவர் என்று சொன்னார்கள். அதற்கு இந்த மாமனிதரோ அதுவும் ஓர் உயிரல்லவா … ? என்று பதிலளித்தார்கள்.

இஸ்லாத்தை ஏற்காத எனது தாய் வந்திருக்கிறார். அவரை நான் என்னுடன் வைத்துக்கொளலாமா? என்று ஒரு பெண் இறைத்தூதரிடம் கேட்டபோது, அவர் உனது தாயல்லவா…? அவரை உம்முடனே வைத்துக்கொள்வீராக !  என்றார்கள்.

எதிரியிடத்திலும் கனிவு : 

தன்னை விருந்துக்கு அழைத்து, இறைச்சியில் விஷத்தை கலந்து கொடுத்த யூதப்பெண்ணை, தான் வேதனையை அனுபவித்தபோதும் மன்னித்தார்கள். போரில் கைப்பற்றப்பட்ட கைபர் பகுதியை தனக்குரியதாக ஆக்கிகொள்ளாமல் அங்கு வசித்த யூத மக்களுகே உரிமை கொடுத்தார்கள்.

போர்க்களத்தில் பெண் இறந்து கிடப்பதைக்கண்ட இறைத்தூதர், பெண்களையும் சிறுவர்களையும், முதியோர்களையும் கொள்ளக்கூடாது என எச்சரித்தார்கள். போரின்போது முகங்களை தாக்ககூடாது, இறந்த உடலை சிதைக்கக்கூடாது, நீள் நிலைகள், நிழல் மற்றும் பயன் தரும் மரங்களை சேதப்படுத்தக்கூடாது என கடுமையான விதிகளை விதித்தார்கள்.

வாழ்வில் ஒவ்வொரு தருணங்களிலும், ஒவ்வொரு செயல்களிலும் எப்படி வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் …

அறிவுரைகளோடு மட்டும் நிறுத்தாது தன்னிலிருந்தே நடைமுறைபடுத்தி, தானும் கடைப்பிடித்து, மக்களையும் கடைபிடிக்கச் செய்து நல்வழிப்படுத்தியவர் …

வாய்ப்புகள் நிறைய இருந்தும் சுகபோகத்தில் வாழாத, அதிகாரம் இருந்தும் சலுகைகள் பெறாத,

அரசு சொத்துக்களை தனதாக்கிக் கொள்ளாத,

தனது வாரிசுகள்கூட அரசு பணத்தை அனுபவிக்க விடாத,

தனக்கான சிறப்பான இடத்தை பயன்படுத்தி மக்களை தனக்குக்கீழ் பணிய வைக்காத,

மாற்றுமதத்தவரை மதித்த,

பேதம் கடைபிடிக்காத,

எல்லா வித மக்களையும் சமமாக பாவித்த, எதிரிகளிடத்திலும் நேர்மையை கடைபிடித்த, போர்களத்திலும் விதிமுறைகளை வகுத்த,

தன் வாழ்நாள் முழுவதையும் வறுமையிலேயே கழித்த,

பெண்கள் ஒருபோதும் ஆண்களுக்கு அடிமை அல்ல எனக்கூறி பெண்களை சிறப்பித்த,

அப்பழுக்கற்ற, நற்பண்புகள் பொருந்திய இந்த மாமனிதரை இஸ்லாமிய மக்கள் ஏன் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கின்றார்கள் என்பதை இப்போது உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம் …

நன்றி: islamiyapenmani

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *