இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் மொழிபெயர்த்தவரின் உரை

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்

வஹ்ஹாபிய்யா என்ற பெயரை செவியுறும்போது மக்கள் சிந்தனையில் சில வினாக்கள் எழுகின்றன.

வஹ்ஹாபிய்யா பிரச்சாரத்தின் உண்மை என்ன ? இப்பிரச்சாரத்தின் குறிக்கோளும், இதன் நோக்கமும் என்ன? இப்பிரச்சாரத்தை உருவாக்கியவர் யார்? இப்பிரச்சாரத்தால் ஏற்பட்ட நன்மைகள் என்ன? இத்தகைய வினாக்களுக்கு விடை கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இப்புத்தகம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இப்பெயரை செவியுறும்போது நமக்குள் பலர் பலவகையாக தீர்ப்பு வழங்கி விடுகின்றனர். எனவே, இப்புத்தகத்தைப் படித்த பிறகேனும், அதன் உண்மைகளை உண்ர்ந்து தீர்ப்பு வழங்குவார்கள் என நம்புகிறேன்.

முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள்பிறந்த ஹிஜ்ரீ பண்ணிரண்டாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் அனாச்சாரமும் அநியாயமும், நாடெங்கும் பரந்து , அறியாமையும், அஞ்ஞானமும் மக்களிடையே பெருகி, இஸ்லாத்தில் இல்லாப் புதுமைகள் புரிவதிலும், சமாதி, மரங்கள் போன்றவற்றை கடவுளென வணங்கியும், மிக மோசமான நிலையில் வாழ்க்கை நடத்தி வந்தனர். தெய்வீக ஒளியை அவர்கள் உள்ளங்களில் ஏற்றிவைப்பதற்கும், இஸ்லாமிய அறிவைப் புகட்டுவதற்கும் சரியான மேதைகளிருக்கவில்லை.

சுருங்கக்கூறினால் அரேபிய தீபகற்பத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. இவை அக்கால மக்களின் பிற்போக்கான பண்பாட்டையே குறிக்கும். இந்த அவல நிலை பெரும்பாலான மக்களைத் தாக்கி, அதனால் சமுதாயம் மிகக் கேவலமான நிலையிலிருந்தது என்பதை வரலாற்றாசிரியர்களும், இஸ்லாமிய உலக ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்ற முடிவாகும்.

தம் சமூகத்தின் இந்த நிலையைக் கண்ட முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் சமுதாயத்தின் ஒவ்வொரு ஓரத்தையும் ஆராய்ந்து, அதை எப்படி தூய்மையான சமூகமாக மாற்றவேண்டுமென்பதில் முழு முயற்சியையும் பயன்படுத்தினார்கள். உத்தம சஹாபாக்களும் முன் சென்ற பெரியார்களும் தங்க‌ள் வாழ்க்கையில் எதை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டார்களோ அதுவே சீர்திருத்தத்தின் முக்கிய ஆயுதம் என்பதை அவர்கள் உள்ளத்தில் அல்லாஹுத்த ஆலா உதயமாக்கினான். இறைவன் அருளிய இந்த உதயத்தின்மீது நம்பிக்கை கொண்டு, தம் பிரச்சாரத்தை ஆரம்பிக்கலானார்கள்.

இவர்கள் ஒரு புதுமையான மதத்தின்பாலோ, புதுமையான கொள்கையின்பாலோ அழைக்கவில்லை. மாறாக இறைவன் ஒருவன்பால் திரும்பி, திருக்குர்ஆன், பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் வாழ்க்கையை அமைக்க வேண்டுமென்பதே இவர்களது பிரச்சாரமாக இருந்தது.

இப்பிரச்சாரம் நேர்வழியின்பால் அழைக்கும் பிரச்சாரம்; அனாச்சாரங்களையும், புதுமைகளையும், சமாதி வணக்கங்களையும் ஒழிக்கும் பிரச்சாரம். உண்மையான இஸ்லாத்தின்பால் எல்லோரும் திரும்ப வேண்டுமென்பதற்காக அனைவருக்கும் அழைப்புக்கொடுக்கும் பிரச்சாரமாகும்.

இப்பிரச்சாரம் சிறப்புமிக்க பல பலன்களைத் தந்தது. ஏகத்துவத்தின்பால் நம்பிக்கை கொண்ட இஸ்லாமிய சமுதாயத்தை சவூதி அரேபியாவில் உருவாக்கிய, முன் சென்ற நல்லவர்கள் பாதையில் வாழ்க்கை அமைத்து “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்னும் திருக்கலிமா பொறிக்கப்பட்ட கொடியேந்தி, அக்கலிமாவின் அடிப்படையில் சட்டம் அமைத்துச் செயல்படுகின்ற மிகப்பெரிய ஓர் அரேபிய நாட்டை இப்பிரச்சாரம் உருவாக்கியது. செயல்படுத்தப்படாமலிருந்த திருக்குர்ஆன் சட்டங்களை செயல்முறையில் நடத்திக் காண்பித்தது. இதன் பயனாக அது இஸ்லாமிய முறைப்படி இயங்குகின்ற ஒரே நாடாகத் திகழ்ந்து வருகின்றது. இதற்குக் காரணமாக இருந்தது இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் பிரச்சாரமேயாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதுபோன்ற உண்மைகளை இப்புத்தகத்தைப் படிக்கின்றவர்கள் நன்கு உணர முடியும். உண்மையை உணர்ந்து அதன்படி செயல்படுகின்றவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக …

தமிழைத் தாய்மொழியாகக் கொணட முஸ்லிம்களிடையே, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களைப்பற்றி நிலவி வரும் தவறான கருத்துகளையும், கட்டுக்கதைகளையும் மாற்றிட வேண்டுமென்ற நன்னோக்குடன் “அல்லாமா அஹமது இப்னு ஹஜர் (கத்தார் பிரதேச நீதிபதி) அவர்கள் எழுதிய இப்புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். புத்தகத்தின் இறுதியில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ள அறிஞர்கள் பாராட்டுரையில் இருபத்திரண்டு பேர்களின் பாராட்டுரையை மட்டும் சுருக்கமாக‌ மொழி பெயர்த்துக் கூறியுள்ளேன்.

இப்புத்தகம் தமிழில் வெளிவருவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த மதீனா இஸ்லாமிய பல்கலைக் கழகப் பேராசிரியர் மதிப்பிற்குரிய டாக்டர் எஃப்.அப்துர்ரஹீம் எம்.ஏ. பி.ஹெச்.டி (வாணியம்பாடி) அவர்களுக்கும், ஷேஹ் ஸஅதுத்தீன் பாகவி அவர்களுக்கும், எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ். கமாலுத்தீன் மதனீ
ஹிஜ்ரி 18-1-1399
மதீனத்துல் முனவ்வரா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *