ஷரீஆவின் சான்றுகளைக் கையாளும் முறை – 1

முன்னுரை
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும் நமது தூதரும், வழிகாட்டியுமான முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், மற்றும் நல்லடியார் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

ஷரீஆவின் சான்றுகளைக் கையாளுவோர் கவனத்திற்கு ஷரீஆவின் சான்றுகளைக் கையாளுவோர் அவைபற்றிய தெளிவும், ஆழமான அறிவும் உள்ளவர்களாக இருப்பது அவசியமாகும்.

ஒருவர் சான்றுகள் பற்றிய தெளிவான அறிவில்லாத நிலையில் அவற்றைக் கையாளுகின்றபோது முன்னோர்களான ஸஹாபாக்கள், நல்வழி நடந்த இமாம்கள் அளித்துள்ள விளக்கங்களுக்கு மாற்றமான மார்க்கத்திற்கு முரணான, விபரீதமான விளக்கங்களையும், தீர்ப்புகளையும் வழங்க நேரிடும்.
அத்தைகயை தவறான தீர்ப்புகள் சமுதாயத்தில் வீண் குழப்பங்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, ஷரீஆவின் சான்றுகள் வேண்டி நிற்கும் பொருள்களை சிதைக்கும் நிலை உருவாகும்.

இத்தகைய நிகழ்வுகள் கடந்த காலங்களில் ஏற்பட்டதற்கான உதாரணங்கள்:

 • அலி (ரழி) அவர்களுக்கும், முஆவியா (ரழி) அவர்களுக்கும் இடையில் எட்டப்பட்ட சமரச உடன்பாட்டினை மனித சட்டம், அதை ஏற்க முடியாது என்று குர்ஆனை ஆதாரமாகக் காட்டி ஹவாரிஜ்கள் தவறாக விமர்சித்து வழிகெட்டமை,
 • ‘யகீன் வரும்வரை (நபியே) உமது இரட்சகனை நீர் வணங்குவீராக. (அல்ஹிஜ்ர்: வசனம்: 99) என்ற வசனத்தில் யகீன் மரணம் வரும்வரை என்ற பொருளில் வந்ததை மஃரிபாவின் ஞானம் கிடைக்கின்ற வரைதான் வணங்க வேண்டும் என சூபிகள் மாற்றமாகப் புரிந்து வழிகெட்டமை,
 • முஹம்மத் (ஸல்) அவர்கள் உங்களில் யாருக்கும் தந்தை கிடையாது. மாற்றமாக, அல்லாஹ்வின் தூதரும், நபிமார்களின் முத்திரையுமாகும் (33:40) என்ற வசனத்தில் வரும் ‘காதம்’ ‘முத்திரை’ என்ற சொல்லை ‘நபிமார்களில் அலங்காரமானவர் என அதன் மற்ற பொருளில் காதியானிகள் புரிந்து வழிகெட்டமை,
 • ‘ஆன்மீகப்பகை தார்மீகமானதா’ என்ற சிறு நூலில் பக்கம் 48- ஆசிரியரான இலங்கை வெலிகமையச் சேர்ந்த ஹுஸைன் மெளலானா என்பவர் ‘ஹாரூன் (அலை) அவர்கள் சமூக ஐக்கியத்திற்காக தன் சமூகத்தின் ஒரு பகுதியினரை மாட்டை வணங்க அனுமதித்து, சமூ ஐக்கியத்தை நிறுவினார்கள்’ என சிலை வணங்கிகளுக்கு சோரம்போன இவர், குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள ‘இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் சிலை உடைப்பு சம்பவவத்தை கண்டு கொள்ளாது வழிகெட்டமை,
 • அதே போன்று சகோதரர் பீ. ஜே. அவர்கள்,
  • விலக்கப்பட்ட உணவுகளின் வரிசையில் வரும் ‘லஹ்முல் ஹின்ஸீர்’ ‘பன்றியின் மாமிசம்’ என்பது அதன் இதர பாகங்களைக் குறிக்காது, பேணுதலின் அடிப்படையிலேயே அவற்றைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறி பின் தனது கருத்தை திரும்பப் பெற்றதையும்,
  • அல்ஃபீல் அத்தியாயத்தில் வருகின்ற அபாபீல் பறவைகள் அலகுகளில் அணுகுண்டைச் சுமந்து வந்தே யானைப்படையை அழித்தன என்று அற்புத??? விளக்கம் எழுதி இருப்பதையும்,
  • ஈஸா நபி (அலைஹி) அவர்கள் குலோனிங் முறையில் பிறந்ததால்தான் தொட்டில் பருவத்தில் அவர்களால் பேச முடிந்தது, ஏனெனில் அவர்களின் வயது அவர்களது தாயாரான மர்யம் (அலை) அவர்களின் வயதாக இருந்தது என ‘தனித்து விளங்கும் இஸ்லாம்’ -ரமளான் சிறப்பு நிகழ்ச்சியில்- தவறாகப் புரிந்து, விளக்கி இருப்பதையும் கூறலாம்.
 • மொழி அடிப்படையில் தஜ்ஜால் என்ற சொல்லுக்கு பொய்யன், ஏமாற்றுக்காரன், குழப்பக்காரன் போன்ற கருத்துண்டு என்று ஆதராமற்ற காரணத்தை முன்வைத்து மறுமையின் பெரிய அடையாளமாக வரவிருக்கும் கொடியவன் தஜ்ஜால் பற்றிய ஹதீஸை அல்லாமா மெளதூதி (ரஹ்) அவர்கள் மறுத்தமை,
 • தொழுகையில் சூரத்துல் பாத்திஹாவிற்குப் பிறகு ஆமீன் கூறுவது கூட்டு துஆவுக்கு ஆதாரமாக பித்அத்வாதிகள் ஏறுக்குமாறாகப் புரிந்து செயல்டுகின்றமை,
 • அல்குர்ஆனில் இடம்பெறும் ஜிஹாத் தொடர்பான வசனங்கள் தப்லீக்கில் செல்வதைக் குறிப்பதாகவும், மற்றும், அதில் சட்டங்களை, நிகழ்வுகளைக்குறிக்க வருகின்ற எண்ணிக்கைளை நாட்பது நாட்கள், நான்குமாதம், வருடம் என தப்லீகில் செல்வதற்கான ஆதாரங்களாகும் என தவறாக போதிப்பமை,
 • ஆதம் நபி (அலைஹி) அவர்களுக்கு வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி சுஜுத் செய்ததை வைத்து வலிமார்களின் தர்ஹாக்களில், கப்றுகளில் நாமும் சுஜுத் செய்யலாம் என்றும், சினாய் மலையடிவாரத்தில் மூஸா (அலைஹி) அல்லாஹ்வை சந்திக்கச் சென்றபோது பரிசுத்த அந்தப்பள்ளதாக்கில் அல்லாஹ்வின் கட்டளைப்படி காலணிகளை கழற்றியதை ஆதராமாகக் கொண்டு தர்காக்களில் காலணிகள் கழற்ற வேண்டும் என்பன போன்ற தலைகீழான செய்திகளை அப்துல்லாஹ் ஜமாலி உளறி தானும் வழிகெட்டு, பிறரையும் வழிகெடுப்பமை,
 • ஹஸனுல் பன்னா என்பவர், மஹ்தி பற்றிய வாதத்தை நிலைநிறுத்துகின்ற ஸஹீஹான ஹதீஸ்களில் நாம் காணாதிருப்பது வரப்பிரசாதமாகும். அத்தகைய ஹதீஸ்கள் பலவீனம், புனந்துரைப்பு ஆகிய இரு நிலைகளுக்கிடையிலேயே காணப்படுகின்றன என்று முன்வைக்கும் தவறான கருத்தையும் சில உதாரணங்களாக குறிப்பிட முடியும்.

அவரின் கூற்று பின்வருமாறு:

قال حسن البنا في (حديث الثلاثاء ) ((فمن حسن الحظ، لم نر في السنة الصحيحة ما يثبت دعوى المهدي وانما أحاديثه تدور بين الضعف والوضع، ص 82 (

எனவே, இவ்வாறான குழப்பங்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள ஒன்று, ஷரீஆவின் சட்டங்களை ஆய்ந்தெடுக்கும் திறமை உள்ளவர்களாக இருக்க வேண்டும், (இத்தகைய திறமைசாலிகள் இருப்பது சந்தேகமே) அல்லது, மார்க்க அறிவில் முன்னோடிகளான ஸஹாபாக்கள், நேர்வழி நடந்த இமாம்கள் பக்கம் ஒதுங்கிட வேண்டும். இரண்டில் ஒருநிலையும் இல்லாதபோது நிச்சயம் வழிகேட்டின் பக்கம் செல்ல நிறையவே வாய்ப்புள்ளது.

அல்லாஹ் அல்குர்ஆனில் இந்த இரு நிலைகள் பற்றியும் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنْبِطُونَهُ مِنْهُمْ [النساء : 83]

அவர்களிடம் (நயவஞ்சகர்களிடம்) பாதுகாப்பு, அல்லது அச்சம் பற்றிய செய்தி வந்ததும் (உறுதி செய்யாது) அதை உடனே பரப்பி விடுகின்றனர், அதை அவர்கள் இந்த தூதர் இடமோ, அல்லது அவர்களில் உள்ள பொறுப்பாளர்களிடமோ கொண்டு சென்றிருப்பின் அவர்களில் விளக்கமளிப்போர் அது பற்றி (தீர்க்கமாக) அறிந்திருப்பர் (அந்நிஸா, வசனம்: 83).

எனவே சான்றுகளைக் கையாளும் விசயம் சாதராண விசயம் கிடையாது. அது பற்றிய அறிவும், தெளிவும், பக்குவமான அணுகுமுறையும் இருக்கவேண்டும். இல்லாத போது மார்க்க ஆதாரங்கள் சிதைக்கப்பட்டு, சமூகம், சீரழிவை நோக்கி தள்ளப்படும் என்பதில் ஐயமில்லை.
அதுமட்டுமின்றி, இது மாற்றுக் கருத்துடைய முஸ்லிம்கள் பலரது மானம், மரியாதை, கெளரவம் ஆகயவற்றுடன் தொடர்புடையதும் கூட.

قال ابن دقيق العيد (اعراض المسلمين حفرة من حفر النار، وقف عليها المحدثون والحكام) تهذيب التهذيب – (1 / 20)

முஸ்லிம்களின் கண்ணியங்கள் நரகப்படுகுளிகளில் ஒரு குளிக்கு சமமானது. அவற்றின்மீது ஹதீஸ்கலை அறிஞர்களும், ஆட்சியாளர்களும் நின்று கொண்டிருக்கின்றார்கள் என இமாம் இப்னு தகீக் அல்ஈத் (ரஹ்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள். (தஹ்ஸீபுத் தஹ்ஸீப்).
சில வேளை மார்க்கம் என்ற பெயரில் முஸ்லிம்களை நாம் மானபங்கப்படுத்துவோமானால் மறுமையில் அல்லாஹ்விடம் நமக்கு எதிராக மானநஷ்டம் கோரி அவர்கள் வழக்குத் தொடுத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
சட்டம் கூறுவது, ஃபத்வாக்கொடுப்பது சாதராண விசயமில்லை. அது பாரிய பொறுப்பாகும். சொர்க்கத்தையும், நரகத்தையும் தீர்மானிக்கின்ற ஒரு அம்சமாகும்.

இணைவைப்பாளர்கள், இறை நிரகாரிப்போர், நயவஞ்சகர்கள் போன்றோர் பேரில் வந்த சான்றுகளை ஸஹாபாக்கள் பேரில் சுமத்தி அவர்களது இரத்தத்தை ஹவாரிஜ்கள் ஓட்டடிய வரலாறுகள் நமக்கு முன்னுதாரணமாகும்.

இவ்வாறான அணுகுமுறைகளால் சுவனம் பற்றிக் கூற வந்த மார்க்க ஆதாரங்கள் சரியாக அணுகப்பட்டு மக்கள் மன்றத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இல்லையேல் சான்றுகள் மூலம் நரகத்திற்கான பாலத்தை அமைக்கும் பொறுப்பை நாம் கையில் எடுத்துள்ளோம் என்பதே பொருளாகும் (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்)

ஜுபைல் மாநகரில் தஃவா உதவியாளர்களுக்காக இந்த வகுப்பு ஏற்பாடு ஞாயிற்றுக்கிழமை தோறும் 10-04-2010 முதல் 30-05-2010 வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

குறித்த கருத்தரங்கின் அமர்வுகளில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் எழுத்துருவில் கொண்டுவரும் முயற்சி குறுகிய காலத்தில் செய்யப்பட்டதாகும். அதற்கு அல்லாஹ்வே அருள் செய்தான் அல்ஹம்லில்லாஹ்.

இதில் காணப்படும் நிறைகளுக்கு அல்லாஹ்வே புகழுக்குரியவன். ஆனால் குறைகள் காணப்படின் அவன் என்னை மன்னிக்கப் போதுமானவன் என்ற மேலாண எண்ணம் எனக்குண்டு.

நீங்களும் எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என வேண்டி விடை பெறும் உங்கள் சகோதரன்.

சான்றுகளைக் கையாளுவோர் அறிய வேண்டிய சில அடிப்படைகள்:
ஷரீஆவின் சான்றுகைள அணுகும் வழிமுறைகள் பற்றிய விதிகளை சட்டக்கலை அறிஞர்கள் பின்வரும் அடிப்படையான அம்சங்களைக் கொண்டு அணுகுவதுண்டு. அந்த வகையில்:

1- நஸ் (நேரடியான சான்று) பற்றிய அறிவு, முக்கியத்துவம்.
2- ஸபபுன்னுஸுல், பயன்பாடு, முக்கியத்துவம்,
3- நாஸிஹ் மன்சூஹ் பற்றிய அறிவு,
4- ஒரு வசனத்தின் வராலாறு, சமூகவியல், பற்றிய பின்னணி,
5- மக்கி, மதனி,
6- முத்லக், முகய்யத் (ஆம், ஹாஸ்),
7- அரபி மொழி அறிவு,
8- முஹ்கம், முதஷாபிஹ்

போன்ற அடிப்படைகள் பற்றிய விதிகளை சான்றுகளைக் கையாள்வோர் என்ற வகையில் நாமும் அறிந்திருப்பது அவசியமாகும்.