ஷரீஆவின் சான்றுகளைக் கையாளும் முறை – 2

நஸ் பற்றிய விளக்கம்.

சான்றுக்கு அரபியில் نصّ என்று கூறப்படும். ஒரு பொருளின் இறுதியைக் குறிக்க அரபியில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுவதாக மொழியியலாளர்கள் கருத்துக் கூறுகின்றனர்.

குர்ஆனின் வசனம், மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கு ‘நஸ்’ என்றழைக்கப்படுவதுண்டு. ஒரு பிரச்சினைக்கான இறுதித்தீர்வாக குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அமைவதால் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகின்றது என்ற உண்மையினை அதன் மொழிக்கருத்துடன் தொடர்புபடுத்தி அறிய முடிகின்றது.

குர்ஆன், ஹதீஸில் இருந்து வெளிப்படையாக விளங்கப்படும் சட்டங்களைக் குறிக்கவும் இந்த வார்த்தையை அறிஞர்கள் பயன்படுத்துகின்றனர்.
நபித்தோழர்கள், தாபியீன்கள், தபவுத்தாபியீன்கள், இமாம்கள் ஆகியோர் ‘நஸ்’ நேரடியான சான்றைப் பயன்படுத்தியே மார்க்க அம்சங்களை அணுகி இருக்கின்றனர். அதை அடிப்படையாக வைத்து செய்திகளை மக்களுக்கு அறிவித்ததுடன், அறிவிக்குமாறும் பணித்திருக்கின்றனர்.

நபி (ஸல்) அவர்களிடம் இருந்து நான் செவிமடுத்தேன் سمعته من رسول الله

سمعته، أذناي، ووعاه قلبي، ورأته عيناي حين تكلم به

எனது இரு காதுகளும் அதை செவிமடுத்தன, அதை எனது உள்ளம் பாடமிட்டுக் கொண்டது, அவர்கள் பேசிய போது எனது இரு கண்களும் அவரது அசைவைப் பார்த்தன.

أو سمعته من رسول الله

நபி (ஸல்) அவர்களிடம் இருந்து இதை நீ செவிமடுத்தாயா?

حدثنا ، أخبرنا ، أنبأنا போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் இவற்றை நீங்கள் ஹதீஸ் கிரந்தங்களில் காண முடியும்.

இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் நமது முன்னோர்களான ஸஹாபாக்கள், அறிஞர்கள் சான்றுகளை முன்னிலைப்படுத்திய வழிமுறை பற்றியும் அறிய முடிகின்றது. அதை நாமும் ஒரு வழிமுiறாயகக் கொண்டு மார்க்க அம்சங்களை அணுக வேண்டும்.
நஸ்ஸுடன் நின்று கொள்ளுதல்.

ஒருவருக்கு நேரடியான சான்று (நஸ்) கிடைக்காத போது அவர் தனது விளக்கத்தின் அடைப்படையில் சில தீர்ப்புகளைக் கூறி இருந்தாலும் அது பற்றிய தெளிவு கிடைக்கின்ற போது தவறில் இருந்து மீண்டு, அந்த நஸ்ஸுடன் நின்று கொள்ள வேண்டும்.

மதீனா தாபியீன்களில் ஒருவரான அபீ ஸலமா மூலமாக அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் அபூஹுரைரா (ரழி) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்து போது ஒரு மனிதர் வந்து, தனது கணவர் இறந்து நாட்பது இரவுகளின் பின்னர் குழந்தை பிரசவித்த ஒரு பெண்ணின் இத்தா பற்றி எனக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்குங்கள் எனக் கேட்டுக் கொண்டார், அவள் இரு தவணைகளில் இறுதியானதுவரை இத்தாவில் (நான்குமாதமும், பத்து நாட்களும்) இருக்க வேண்டும் என்று கூறினார்கள். அபூ ஸலமா (ரழி) அவர்கள், கர்ப்பிணிப் பெண்களுக்குரிய (இத்தா) காலம் அவர்கள் தமது குழந்கைதளைப் பெற்றடுப்பது வரையாகும் என்ற வசனத்தை தனது ஆதாரமாகக் கூற, அபூஹுரைரா (ரழி) அவர்கள் நான் எனது சகோதரரின் மகன் அபூஸலமாவுடன் உடன்படுகின்றேன் என்றார்கள். உடனே, இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் ஆளனுப்பி இது பற்றி விசாரித்தார்கள். அவர்கள், சுபைஆ அல்அஸ்லமிய்யா (ரழி) என்ற பெண் கற்பமாக இருந்ததையும், அவர்களது கணவர் நாட்பது இரவுகளின் பின்பு மரணித்ததையும், அத்தோடு அவர்களின் இத்தா முடிந்து, அபுஸ்ஸனாபில் என்ற நபித்தோழருக்கு நபி (ஸல்) அவர்கள் மறு மணம் முடித்து வைத்ததையும் ஆதாரமாகக் கூறி பதில் அனுப்பினார்கள். (புகாரி, முஸ்லிம்). பின்னர், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், தனது கருத்தில் இருந்து வாபஸ் பெற்றுக் கொண்டார்கள்.

இந்தப் பண்பாடு நம்மிடமும் வளர வேண்டும். சுயவிருப்பு வெறுப்புக்களை விட்டுவிட்டு தெளிவான சான்றுகளுடன் நின்று கொள்ள வேண்டும்

ஸபபுன்னுஸுல் பற்றி அறிதல்

ஒரு வசனம் இறங்கியதற்கான காரணியை அறிவதால் அதில் பொதிந்திருக்கும் கருத்தோட்டம், மார்க்க சட்டம், அதன் பெறுமதி பற்றி அறிய வாய்ப்பிருக்கின்றது. இது பற்றி இமாம்;கள் தனியான நூல்களை எழுதியுள்ளனர். இதை معرفة أسباب النزول குறித்த வசனம் இறங்கியதற்கான காரணிகளை அறிதல் எனவும் அழைக்கின்றனர்.

قَالَ عَبْدُ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ وَاللَّهِ الَّذِي لَا إِلَهَ غَيْرُهُ مَا أُنْزِلَتْ سُورَةٌ مِنْ كِتَابِ اللَّهِ إِلَّا أَنَا أَعْلَمُ أَيْنَ أُنْزِلَتْ وَلَا أُنْزِلَتْ آيَةٌ مِنْ كِتَابِ اللَّهِ إِلَّا أَنَا أَعْلَمُ فِيمَ أُنْزِلَتْ وَلَوْ أَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنِّي بِكِتَابِ اللَّهِ تُبَلِّغُهُ الْإِبِلُ لَرَكِبْتُ إِلَيْهِ (صحيح البخاري /4618)

எந்த அல்லாஹ்வை அன்றி வணங்க வேறு தெய்வங்கள் இல்லையோ அவன் மீது சத்தியமாக: அல்லாஹ்வின் வேதத்தில் இறக்கப்பட்ட எந்த அத்தியாயமானாலும், அல்லாஹ்வின் வேதத்தில் இறக்கப்பட்ட எந்த வசனமானாலும், அது எங்கு இறங்கியது என்பது பற்றி நான் மிகவும் அறிந்தவனாகவே இருக்கின்றேன். என்னை விடவும் அல்லாஹ்வின் வசனத்தை அறிந்த ஒருவர் இருப்பதாக நான் அறிந்தால் அவரிடம் ஒட்டகத்தில்தான் செல்ல வேண்டுமானாலும் நான் செல்லத்தயாராக இருக்கின்றேன் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (இப்னு மஸ்ஊத்) (ரழி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (புகாரி: 4618).
وفي ( مسلم / 4502) : قَالَ شَقِيقٌ فَجَلَسْتُ فِي حَلَقِ أَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا سَمِعْتُ أَحَدًا يَرُدُّ ذَلِكَ عَلَيْهِ وَلَا يَعِيبُهُ

நான் நபித்தோழர்கள் வட்டங்களில் அமர்ந்து கொண்டிருந்தேன், இந்தக் கருத்தைக் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறுகின்ற போது நபித்தோழர்களில் ஒருவர்கூட இதை மறுத்துரைக்கவோ, அல்லது அது பற்றி தரக்குறைவாகவோ பேசவில்லை என அவர்களது மணவர்களில் ஒருவரான ஷகீக் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் செய்தி முஸ்லிமில் 4502வது இலக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பயன்பாடு:

وقال ابن تيمية رحمه الله : معرفة سبب النزول يعين على فهم الآية فإن العلم بالسبب يورث العلم بالمسبب. ((مقدمة التفسير: ص44-45، الإتقان في علوم القرآن – 1 / 108 )

‘ஸபபுன் னுஸுல்’ பற்றி அறிவது குறித்ததொரு வசனத்தை, நிகழ்வை விளங்க துணைசெய்கின்றது. ஏனெனில் காரணியை அறிவது காரணமாக்கப்பட்டதை அறிய வழிவகுக்கும் என்று இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (முகத்தமா ஃபித்தஃப்ஸீர். பக்கம்;:44-45). (பார்க்க: அல்இத்கான். பாகம்:1- பக்கம்:108)

وقال ابن دقيق العيد: بيان سبب النزول طريق قوي في فهم معاني القرآن (الإتقان في علوم القرآن – (1 / 31)

ஸபபுன்னுஸுல் பற்றிய தெளிவானது, குர்ஆனின் கருத்தோட்டங்களை விளங்குவதில் சக்திவாய்ந்த வழியாகும் என்று இமாம் இப்னு தகீக் அல்ஈத் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (பார்க்க: அல்இத்கான். பாகம்:1- பக்கம்:31)
உதாரணங்கள்:

((إنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ البَيْتَ أَوِ اعْتَمَرَ فَلا جُنَاحَ عَلَيْهِ أََن يَطَّوَّفَ بِهِمَا..)) [البقرة: 158]

ஸஃபா, மற்றும் மர்வா என்பது அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். யார், இந்த வீட்டை (கஃபாவை) ஹஜ், அல்லது உம்ராச் செய்கின்றாரோ அவர் அவ்விரண்டிற்கும் இடையில் தவாஃப் செய்வதில் குற்றமில்லை (அல்பகரா: வசனம்: 158 ) என்ற வசனத்தை வெளிப்படையாக சிந்தித்தால் ஸயி என்ற அமல் அவசியம் இல்லை என்ற கருத்தோட்டம் காணப்படுகின்றது. அதை அடிப்படையாகக் கொண்டு சிலர் ஸயி செய்வது கடமை இல்லை என்றும் புரிந்தனர்.

இந்த சந்தேகம் உர்வா பின் சுபைர் (ரழி) அவர்களுக்கு எழுந்தது. அவர்களின் தாயின் சகோதரியரான அன்னை ஆயிஷh (ரழி) அவர்களிடம் வந்து, தாயே! இதில் இப்படிப் புரியவும் முடியும்தானே எனக் கூறினார்கள். இல்லை அப்படியானால் அதில், أََن لا يَطَّوَّفَ بِهِمَا. அதாவது: ‘அவ்விரண்டிற்கும் இடையில் தவாஃப் செய்யாமல் இருப்பதில் தவறில்லை’ என்றுதான் வந்திருக்க வேண்டும் எனக் கூறிய ஆயிஷா (ரழி) அவர்கள் காரணத்தை பின்வருமாறு விளக்கினார்கள்.

இந்த வசனம் அன்ஸாரிகள் பேரில் இறங்கியது. அவர்கள் இஸ்லாத்திற்கு வருவதற்கு முற்பட்ட காலத்தில் மனாத் என்ற சிலை இருந்த இடத்தில் இருந்து தமது ஹஜ், உம்ரா வணக்கத்தைச் செய்வர். அது முஷல்லல் எனும் இடத்தில்) குதைத்قُـدَيـْدْ பகுதிக்கு சரிநேராக இருந்தது (ஸஃபா, மர்வா பகுதி), அதனால் அவர்கள் ஸஃபா, மர்வாவிற்கு இடையில் சுற்றிவலம் வருவதை பாவமாகக் கருதினார்கள். இஸ்லாத்தில் நுழைந்த பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டனர். அல்லாஹ் அந்த வசனத்தை இறக்கி வைத்தான் எனக் கூறினார்கள். (முஸ்லிம்).
(அல்இத்கான், 1- 31), (புஹுஸுன் ஃபித்தஃப்ஸீர். 1- 153)

ஒரு வசனம் இறங்கியதற்கான காரணம், அதன் பின்னணி பற்றி அறிவது குர்ஆன் வேண்டி நிற்கும் சரியான கருத்தோட்டத்தைப் புரியவும், மக்களின் சந்தேகங்களுக்கு தெளிவை வழங்கவும் வழிவகுக்கும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகின்றது.
மற்றொரு சான்று:

ஒருவர் மரணிக்கின்ற போது (வஸிய்யத்தின்) மரணசாஸனத்தின் அடிப்படையில் அவரது பெற்றோர்கள் அவரின் சொத்துக்களுக்கு உரித்துடையவர்களாக இருந்தனர். இது ஆரம்ப காலங்களில் சொத்துரிமை முறையாக இருந்து வந்தது.

كُتِبَ عَلَيْكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ إِنْ تَرَكَ خَيْرًا الْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ بِالْمَعْرُوفِ [البقرة : 180]

உங்களில் ஒருவருக்கு மரணம் சம்பவித்தால் அவர் செல்வத்தை விட்டுச் செல்வாராயின் (அதில் நடந்து கொள்ளும் முறையை) தனது பெற்றோர்களிடமும், உறவனர்களிடமும் நல்லமுறையைப் பேணி வஸிய்யத் செய்வது உங்கள் மீது கடமையாகும், (அல்பகரா: வச:180) இது ஆரம்ப கால நடைமுறையாக இருந்தது.

பின்னர், சொத்துப்பங்கீடுகள் பற்றியும் வாரிசுகள் ஒவ்வொருவரினதும் பங்குகள் பற்றியும் விபரமாக விளக்கிய பின் அல்லாஹ் ஆரம்ப கால நடைமுறைச் சட்டத்தை மாற்றிவிட்டான். என்பதை ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. (தப்ஸீர் இப்னு கஸீர்).

ِنَّ اللَّهَ قَدْ أَعْطَى كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ فَلَا وَصِيَّةَ لِوَارِثٍ- سنن أبي داود – 2486)

அல்லாஹ் உரிமை உள்ள ஒவ்வொருவரினது உரிமையையும் வழங்கி விட்டான், எனினும் வாரிசாக வருபவருக்கு வஸிய்யத் செய்யக் கூடாது (அபூதாவூத்-2486).

இதை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்குகின்ற போது:
عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ { إِنْ تَرَكَ خَيْرًا الْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ } فَكَانَتْ الْوَصِيَّةُ كَذَلِكَ حَتَّى نَسَخَتْهَا آيَةُ الْمِيرَاثِ – سنن أبي داود /22485).

ஒருவர் செல்வத்தை விட்டுச் செல்கின்ற போது அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் என இருந்த வஸிய்யத் முறையை சொத்துப்பங்கீடு பற்றி விபரிக்கும் இறைமறைவசனம் மாற்றிமைத்தது எனக்குறிப்பிடுகின்றார்கள். ஆதாராம். சுனன் அபீதாவூத். எண்:22485).
சான்றுகளைக் கையாளுவோர் ஒரு வசனம் இறங்கியதற்கான பின்னணி பற்றிய அறிவுடையோராக இருக்க வேண்டும் என்பதை இந்நிகழ்வுகளும், சான்றுகளும் நமக்குப் உணர்த்துகின்றன.

குறிப்பு:
ஒரு வசனம் இறங்கியதற்கான காரணத்தை விளக்கும் அளவுகோல்களாக நபி (ஸல்) அவர்களின் கால நடைமுறைகள், மற்றும் ஸஹீஹான செய்திகள் அவசியமானதாகும்.

ஒரு வசனம் இறங்கியதை வலியுறுத்தி தப்ஸீர்களில் வருகின்றது என்பதற்காக அது ஆதாரமாகாது.

உதாரணமாக: ஸஃலபா (ரழி) அவர்களின் சரித்திரத்தைக் குறிப்பிட முடியும்.

அத்தவ்பா அத்தியாயம்: 75வது வசனம் இறங்கியதற்கான காரணமாக ஸஃலபா (ரழி) அவர்கள் ஸகாத் கொடுக்க மறுத்ததாக தபரி, இப்னு கஸீர் உள்ளிட்ட பல தப்ஸீர் நூல்களில் புனைந்துரைக்கப்பட்ட இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

அது, அல்முஃஜமுல் கபீர் (தபரானி), ‘அஸ்பாபுன்னுஸுல்’ போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளதைக் கவனத்தில் கொண்டு இமாம்களான இப்னுஜரீர், இப்னு கஸீர் (ரஹ்) போன்ற அறிஞர்கள் அதன் அறிவிப்பாளர் வரிசகைளை விமர்சனம் செய்யாது தமது நூல்களில் பதிவு செய்ததே அது பற்றிப் போதிப்பவர்களுக்கு சாதகமாக அமைந்தது எனலாம்.

இருப்பினும் நபித்தோழர் ஒருவரைப் பற்றி கூறப்படும் இவ்வளவு விபரீதமான கருத்து உண்மையாகத்தான் இருக்கும் என்பதற்கு அரபி நூலில் இடம் பெறுவதெல்லாம் மார்க்கமாகிவிடும் என்ற சிந்தனையும், இமாம்கள் தவறு செய்வார்களா என்ற குறுகிய சிந்தனையும்தான் இதைச் சரிகாண வழிவகுத்திருக்கின்றது என்பதே கசப்பான உண்மையாகும்.

இந்தச் செய்தியின் நிலை என்ன ?
இது மஆன் பின் ரிஃபாஆ அஸ்ஸுலமி என்பவர் வழியாகவே அனைவர்களாலும் அறிவிக்கப்படுகின்றது. இருப்பினும் இந்த மஆன் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவரா என்று ஆய்வு செய்த பின்னரே நபித்தோழரின் குறித்த செய்தி பற்றி இறுதி முடிவுக்கு வரவேண்டும்.
இப்னுல் மதீனி, மற்றும் துஹைம் ஆகியோர் இவரை நம்பகமானவர் எனக் குறிப்பிட்டாலும் (தஹ்ஸீபுத்தஹ்தீப்) இவரை பற்றி இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள், இவரது செய்தி நிராகரிக்கப்பட வேண்டியது, இவர் அறிமுகமில்லாதவர்களைத் தொட்டும் செய்திகளை அறிவிப்பார், ஆனால் நம்பகமானவர்களின் செய்திகளுக்கு இவரது செய்தி உடன்பட்டுவராது, இவர் அறிவிப்பதில் மனங்கள் வெறுக்கக் கூடியவை பெரும்பான்மையானதாகிவிட்ட காரணத்தால் அவரது அறிவிப்பை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்ற நிலையை அவர் அடைந்துவிட்டார் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

மஆன் பற்றிய அறிஞர்களின் கூற்றை ஆராய்கின்ற போது இவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருப்பதுடன், இவரது அறிவிப்பு தள்ளுபடி செய்யப்படும் என்ற உண்மையினை அறிகின்றோம். மாத்திரமின்றி, அந்த அறிவிப்பின் தொடரில் வருகின்ற அலிபின் ஸைத் பற்றிய விமர்சனமும் கடுமையானது என்பதை அறிகின்றோம்.

மாத்திரமின்றி இப்னுல் அரபி, குர்துபி, அல்ராஸி போன்றோர் இந்தச் செய்தி பிரபல்யமானது எனக் கூறி இருப்பது மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்திருக்கின்றது என்ற பொருளில்தான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.