ஷரீஆவின் சான்றுகளைக் கையாளும் முறை – 3

விதி: தனியான, அல்லது விசேசமான சட்டங்களைக் கொண்டுள்ள வசனங்கள், அல்லது நிகழ்வுகள் நீங்கலாக ஏனெயவைகளை அதன் பொதுவான கருத்தோட்டத்தைக் கொண்டு நோக்குதல்.

ஷரீஆத்துறை விதியாளர்கள் இதை العبرة بعموم اللفظ لا بخصوص السبب

‘படிப்பினை என்பது குறித்த வார்த்தையின் பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் பெறுவதாகும். குறித்த காரணத்தை அடிப்படையாக வைத்து அல்ல’ என்றும்,

மற்றும் சிலர் إبقاء اللفظ على عمومه ‘வார்த்தையை அதன் பொதுப்படையான கருத்தோட்டத்தில் நிலை நிறுத்துதல் ‘ என்றும் கூறுவார்கள்.

சான்றுகள்.
அன்ஸாரித் தோழர்களில் ஒருவர் நபி ( ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! மதீனாவின் கடைசி எல்லைப் புறத்தில் அன்னிய பெண் ஒருவரை முத்தமிட்டுவிட்டேன், ஆனால் நான் குடும்ப உறவில் அவரோடு ஈடுபடவில்லை. அவர் விசயத்தில் எனக்கு நீங்கள் என்ன தீர்வு கூறுகின்றீர்கள் எனக்கேட்டார், உன்னை அல்லாஹ் மறைத்துவிட்டான், நீயும் இதை மறைத்திருக்கலாமே என உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். நபி ( ஸல்) அவர்கள் எதுவும் கூறாது மெளனமாக இருந்தார்கள். அந்த மனிதர் எழுந்து சென்றார், ஒரு மனிதரை அனுப்பி அவரை அழைத்துவரச் சொல்லி அவர் வந்ததும், நீர் நம்மோடு தற்பொழுது தொழுதாயா? எனக் கேட்டார்கள்.

{إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ} الآية[هود:114]

நிச்சயமாக நன்மையான காரியங்கள் தீமைகளைப் போக்கிவிடும் (ஹுத்: வசனம்: 114 ) , என்று அல்லாஹ் இவர் பேரில் இறக்கிய வசனத்தை ஓதிக்காட்டும்படி கூறினார்கள். அங்கிருந்த மனிதர்களில் ஒருவர் இது இவருக்கு மாத்திரம் உரியதா? எனக் கேட்க, இல்லை, மனிதர்கள் அனைவருக்கும்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது முஸ்லிமின் அறிவிப்பாகும். (பார்க்க: முஸ்லிம்: 4963, 4964). (புகாரி, 490, 4319, புகாரியில் எனது சமுதாயத்தவர் அனைவருக்கும் இது பொதுவானதாகும் என இடம் பெற்றுள்ளது).

அவ்வாறே நபி (ஸல்) அவர்களை நேரடியாக அழைத்துப் பேசும் செய்திகள் முழு சமூகத்திற்கும் சொந்தமானதாக இருக்கும்.
உதராணம் :

وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَمَاتُوا وَهُمْ فَاسِقُونَ [التوبة : 84]

(நபியே) அவர்களில் மரிணித்த யாருக்கும் நீர் ஒருபோதும் தொழுகை நடத்த வேண்டாம், அவனது மண்ணறைமீது (தொழ, பிரார்த்திற்க) எழுந்து நிற்கவும் வேண்டாம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நிராகரித்து விட்டனர், அவர்கள் தீயவர்களாகவே மரணித்தனர். (அத்தெளபா: வசனம்: 84).

இந்த வசனம், உபை பின் சலூல் என்ற முனாஃபிக் தலைவனுக்கு ஜனாஸாத் தொழுவதைத் தடை செய்து நபி (ஸல்) அவர்களுடன் தொடர்புபடுத்தி வந்திருந்தாலும் அதை முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானது என்றே புரிய வேண்டும்.

خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَهُمْ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ [التوبة : 103]

(நபியே) அவர்களின் பொருளாதாரத்தில் இருந்து ஸகாத் (வரி) எடுப்பீராக, அதனால் அவர்களை நீர் தூய்மைப்படுத்திப் பரிசுத்தப்படுத்தலாம். அவர்களுக்காக பிரார்த்தனை செய்வீராக, நிச்சயமாக உமது பிரார்த்தனை அவர்களுக்கு அமைதியளிக்கும். அல்லாஹ் நன்கு செவியுறுபவனும், நன்கறிந்தவனுமாவான். (அத்தெளபா: வச: 103).

நாஸிஹ் மன்சூஹ் (மாற்றியது, மாற்றப்பட்டது)
வரைவிலக்கனம்: ஆரம்பத்தில் நடை முறையில் இருந்து வரும் மார்க்க சட்டமொன்றை அதற்கு பின்னால் வரும் நடைமுறைக்கு வரும் சட்டத்தின் மூலம் குர்ஆன் வசனம், அல்லது ஸஹீஹான ஹதீஸின் மூலம் இல்லாதொழித்தல், அல்லது அதற்கு ஈடான ஒரு சட்டத்தை அதன் இடத்திற்கு கொண்டுவருதல். இதை அரபியில் ‘நஸ்ஹ்’ மாற்றுதல் என்ற பொருளிலும் அழைக்கப்படுகின்றது.

مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا نَأْتِ بِخَيْرٍ مِنْهَا أَوْ مِثْلِهَا أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ [البقرة : 106]

நாம் ஏதாவது ஒரு வசனத்தை மாற்றினாலோ, அல்லது அதை மறக்கடிக்கச் செய்தாலோ அதைவிட சிறந்ததை, அல்லது அதைப் போன்றதைக் கொண்டுவருவோம்.(அல்பகரா: வசனம்:106).

يَمْحُو اللَّهُ مَا يَشَاءُ وَيُثْبِتُ وَعِنْدَهُ أُمُّ الْكِتَابِ [الرعد : 39]

அல்லாஹ் தான் நாடியதை அழித்துவிடுகின்றான், (நாடியதை) நிலைப்படுத்துகின்றான். தாய் ஏடு அவனிடமே இருக்கின்றது. (அர்ரஃத், வசனம்:39).

நாஸிஹ், மன்சூஹ் ஏற்றுக் கொள்ள முடியுமானதா ?
சிலர் இந்த சட்டம்தான் இறுதியானது என அல்லாஹ் ஆரம்பத்தில் இறக்கி வைக்கலாம்தானே! ஏன் நேரத்துக்கு நேரம் மாற்ற வேண்டும், அது அல்லாஹ்வின் தூரநோக்குடன் தொடர்பான அறிவில் குறை இருப்பதாகக் கூறுவதாக இல்லையா என சந்தேகம் எழுப்புகின்றனர்.

பதில்: இந்த வாதத்தை முன்வைப்போர் நாஸிஹ் மன்சூஹின் பின்னணி பற்றித் தெளிவாக அறிந்திருப்பின் இவ்வாறு கூற முற்படமாட்டார்கள். ஏனெனில் ஒரு சட்டத்தை அங்கீகரிக்கின்ற அதிகாரமும், அதே சட்டத்தை மாற்றுகின்ற அதிகாரமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும். அடியார்களின் நிலை பற்றி நன்கறிந்தவன் அந்த அல்லாஹ் ஒருவன் மாத்திரமே!
இஸ்லாத்தில் மாற்றப்பட்ட சட்டங்களை நீங்கள் எடுத்துக் கொண்டால் அவை பெரும்பாலும் மனிதனது உடல் நலத்துடன், சமூகத்தீமைகளுடன் தொடர்பானவையாக இருப்பதை அறிய முடியும்.

உதாரணமாக: வட்டி, மது, சூது, விபச்சாரத்திற்கான தண்டனை, குற்றவியல் சட்டங்கள், சொத்துப்பங்கீடு, சமூகவியல் சார்ந்த நடைமுறைகள், சீர்திருத்தங்கள் போன்ற காரியங்கள்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியவர்ளிடம் வைத்தியர்கள் கட்;டம் கட்டமாகவே குடியை நிறுத்தும்படி கூறுவார்கள். இந்த முறை குடியை நிறுத்த அல்குர்ஆன் ஆரம்ப காலங்களில் கையாண்ட அற்புதமான நடைமுறைகளில் ஒன்றாகும்.
மனிதனிடம் சில பழக்கங்கள் காணப்படும். அதன் நன்மை, தீமை பற்றி அல்லாஹ்வே நன்கறிந்தவனாக இருக்கின்றான். மனிதன் அதைத் தொடர விரும்பினாலும் அல்லாஹ் தனது அடியானுக்கு நன்மையை நாடுவதற்காக அதைவிட்டும் அவனை தடுக்கின்றான்.
இவை யாவும் அடியானைப் பற்றிய அல்லாஹ்வின் ஆழமான மதிநுட்பத்தையும், தூரப்பார்வையையும் எடுத்துக் கூறும் நடவடிக்கைகளாகும். அறிவில் குறைவுள்ள மனிதனால் அதன் யதார்த்தம் பற்றி பின்னர்கூட அறிய முடியாமல் போவது ஆச்சரியமான ஒன்றல்ல.
நஸ்ஹ் (மாற்றம்) ஏன் ?
அடியார்களுக்கு எளிமையான மார்க்கம் இஸ்லாம், அதன் சட்டமும் எளிமையானது அனைவராலும் பின்பற்ற முடியுமானது என்பதை நிரூபிக்கவே இந்த மாற்றம் தொடர்பான சட்டம் வந்திருக்கின்றது.