[வகுப்பு: 18-20] ஹிஸ்னுல் முஸ்லிம் (v)

மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

வறுமையின் காரணமாக உண்ணுவதற்கோ, பருகுவதற்கோ ஏதுமில்லாத நிலையில் நான் அல்லாஹ்வின் தூதரிடம் முறையிட்டபொழுது, நபியவர்கள் தனது

விருந்தாளியாக என்னை தனது பள்ளியில் தங்குவதற்கு பணித்தார்கள். என்னைப்போலவே மேலும் இரண்டு தோழர்கள் நபிகளாரின் விருந்தாளியாக பள்ளியில் தங்கியிருந்தனர்.

நபியவர்களுடைய‌ ஆட்டு மந்தையில் உள்ள ஆடுகளில் பால் கறந்து, அதை நாங்கள் ( நபியுடன் சேர்த்து)  நால்வரும் பகிர்ந்து குடித்துக்கொள்வது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் நபியவர்களோடு எங்களது நாள்களை கழித்துக்கொண்டிருந்தோம்.

ஒவ்வொரு நாளும் தனது பங்கிலுள்ள பாலை இரவுத்தொழுகையை முடித்துவிட்டு, ஃபஜ்ரு தொழுகைக்கு முன்பு பருகுவது நபிகளாரின் வழக்கமாக இருந்தது.

ஒரு நாள் இரவு, எனது பங்கிலுள்ள பாலை நான் பருகும்போது, ஷைத்தானின் தூண்டுதலால், ஏனைய இரண்டு தோழர்களின் பங்கையும், நபியவர்களின் பங்கையும் சேர்த்து நான் குடித்துவிட்டேன். “ நபியவர்களுக்கு வேறு ஏதேனும் வழியில் உணவு கிடைத்து விடும்” என எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன். உடனே ஷைத்தான் ” நபிகளாரின் பங்கை அனுமதியின்றி குடித்து விட்டாயே ! இது எவ்வளவு பாதகமான செயல்! ” என எனது உள்ளத்தில் பெரும் குழப்பத்தையும், வேதனையையும் ஏற்படுத்தினான். இதனால் தூக்கமின்றி நபியவர்கள் வரும்வரை, போர்த்தியவனாக படுத்திருந்தேன்.

இரவுத்தொழுகைக்காக நபியவர்கள் பள்ளிக்குள் நுழைந்து ஸலாம் சொன்னார்கள். அந்த ஸலாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவருக்கு இடையூறாக இல்லாமலும், விழித்திருப்பவர்களை தொழுகைக்கு  ஆர்வப்படுத்தக்கூடியதாகவும் இருந்தது. பின்பு நபியவர்கள் தனது இரவு தொழுகையை முடித்துவிட்டு, பால் பாத்திரத்தின் அருகில் வந்தார்கள். தூங்குவதைப்போல படுத்துக்கொண்டு அனைத்தையும் கவனித்துகொண்டிருந்த எனக்கு பதட்டம் அதிகமானது.

பாத்திரத்தில் பால் இல்லாததை அறிந்த நபியவர்கள், வானத்தை நோக்கியவர்க்ளாக, தனது இரண்டு கைகளையும் மேலே உயர்த்தினார்கள். இப்பொழுது ” நபியவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்யப்போகிறார்கள், அத்தோடு நான் அழிந்தேன்” என்று பதட்டத்துடன் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

ஆனால் நபியவர்கள் கையேந்தியவர்களாக …. Drink n Food

என துஆ செய்தார்கள்.

இதைகேட்ட எனக்கு துயரம் இன்னும் அதிகமானது. ஏனெனில் இறைத்தூதரின் இந்த பிரார்த்தனையின் எல்லைக்குள் நான் வரமுடியாது. நான் இறைத்தூதருக்கு உணவளிக்கவோ, பருகக்கொடுக்கவோ வசதியில்லாதவன் மட்டுமல்ல, அவர்களுடைய பங்கையும் அனுமதியின்றி அருந்திவிட்டேன். எனவே ஒரு முடிவுக்கு வந்தவனாக, ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு, பள்ளியைவிட்டு வெளியேறினேன்.

எனது எண்ணமெல்லாம் ” ஒரு ஆட்டை அறுத்து, சமைத்து நபியவர்களுக்கு உணவளிக்க வேண்டும், அதன் மூலம் நபிகளாரின் துஆவுக்கு அருகதைப்பட்டவனாக மாறிவிடவேண்டும்”  என்பதாகவே இருந்தது.

இந்த எண்ணத்தோடு ஆட்டு மந்தையை நெருங்கினேன். ஆனால் அங்கிருந்த அனைத்து ஆடுகளும் பால் நிறைந்த கணத்த மடிகளுடன் காணப்பட்டன. மிகுந்த ஆச்சரியத்துடன் திரும்பி வந்து நபிகளாரின் குடும்பத்தார் பால் கறக்க பயன்படுத்தும் பாத்திரங்களில் மிகப்பெரிய பாத்திரம் ஒன்றை எடுத்து, அப்பாத்திரம் நிறைந்து,  நுரை பொங்கும் அளவிற்கு பாலை கறந்துகொண்டு நபிகளாரிடம் சென்றேன்.

நபிகளாரிடம் கொடுத்து, அல்லாஹ்வின் தூதரே! குடியுங்கள் ! என்று சொன்னேன். நபிகளார் “இரவு நீங்கள் உங்களின் பங்கான பாலை குடித்தீர்களா? என கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் குடியுங்கள் ! என்று சொன்னேன்.   நபிகளார் நன்றாக குடித்துவிட்டு, “போதும்” என்று சொன்னார்கள்.  ” இல்லை, இன்னும் குடியுங்கள் !! என்று சொன்னேன். நபிகளார் மீண்டும் குடித்துவிட்டு, “போதும்” என்று சொன்னார்கள்.  ” இல்லை, இன்னும் குடியுங்கள் !! என்று மீண்டும் சொன்னேன். மீண்டும் நபியவர்கள் குடித்தார்கள். இதற்குமேல் மகிழ்ச்சி தாங்காமல் சிரித்தேன். விழுந்து விழுந்து சிரித்தேன். இதனால் என் ஆடை விலகுவதைக்கண்ட நபியவர்கள், “உங்கள் ஆடையை சரி செய்யுங்கள், சரி செய்யுங்கள்” என்று சொன்னார்கள்.

உடனே ஆடையை சரி செய்து எழுந்தவண்ணம், நடந்த அனைத்தையும் நபிகளாரிடம் சொன்னேன். உடனே நபியவர்கள், ” நீர் சொல்வது அனைத்தும் நடந்திருக்குமானால், அது நிச்சயமாக அல்லாஹ்வில் அருளாகும், நீர் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால், உறங்கிக்கொண்டிருக்கும் அவ்விரண்டு தோழர்களுக்கும் பாலை அருந்தக் கொடுத்திருக்கலாமே! என்று சொன்னார்கள் …

உடனே நான் ….

அல்லாஹ்வின் தூதரே ! உண்மையைக்கொண்டு தங்களை அனுப்பிய அல்லாஹ்வின்மீது சத்தியமாக ! அவர்களுக்கு கிடைக்காததைப்பற்றி எனக்கு கவலையில்லை. நீங்களும் குடித்துவிட்டீர்கள். நானும் குடித்துவிட்டேன். எனக்கு தேவையானதும் கிடைத்துவிட்டது. இனி இவ்வுலகத்திலுள்ள எந்த மனிதரைப்பற்றியும் எனக்குக் கவலையில்லை.

என்று சொன்னேன்….

மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) அவர்கள் அறிவிக்கக்கூடிய இச்செய்தி
ஸஹீஹ் அல்-முஸ்லிம் -இல் பதிவாகியுள்ளது.
வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர் ராக்கா தஃவா நிலையம், தம்மாம்.
நாள் : 22-12-2014 திங்கள்கிழமை இரவு
இடம் : ஸாமிஃ துஃஹைர் பள்ளி வகுப்பறை,
ராக்கா, தம்மாம், சவுதி அரேபியா

[youtube id=kAjKbwyhFfw]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *